கோவில்பட்டி அருகே தகராறில் ஈடுபட்டதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே விஜயாபுரி கீழத் தெருவைச் சேர்ந்தவர் ரா. வைரமுத்து (44). இவரது மகன் அய்யனார் (19). இருவரும் கட்டடத் தொழிலாளிகள். அய்யனாரின் நண்பர்களான முத்துமாலை மகன் கார்த்திக் (26), முருகன் மகன் செல்வம் (38)ஆகியோர் அங்குள்ள கோயில் அருகே நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டனர். இதையறிந்த வைரமுத்து தகராறை விலக்கச் சென்றார்.
அப்போது, செல்வம் அவதூறாகப் பேசி கத்தியை வீசியதில் வைரமுத்துவின் வயிற்றில் காயமேற்பட்டது. அப்பகுதியினர் கண்டித்ததால் செல்வம் மிரட்டல் விடுத்துச் சென்றாராம். காயமடைந்த வைரமுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர், நேற்று அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து செல்வத்தைக் கைது செய்தனர்.
இதனிடையே, அய்யனார் கார்த்திக் வீட்டுக்குச் சென்று அவதூறாகப் பேசி அரிவாளைக் காட்டி மிரட்டியதுடன் கதவை சேதப்படுத்தினாராம். இதுகுறித்து கார்த்திக் நேற்று அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து அய்யனாரைக் கைது செய்தனர்.


