ஜோசியர் வீட்டில் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி 111 பவுன் தங்க நகைகள், ரூ.2.50 லட்சம் ரொக்கப்பணம் திருட்டு நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஜோசியர் வீட்டில் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி 111 பவுன் தங்க நகைகள், ரூ.2.50 லட்சம் ரொக்கப்பணத்தையும் திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருட போன நகைகளின் மதிப்பு ரூ.27.75 லட்சம் ஆகும்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிராமம் சித்தன்குடியிருப்பு. இக்கிராமத்தை சேர்ந்தவர் பால்துரை(70). ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜா. இருவரும் இங்குள்ள ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் பால்துரை ஓட்டு வீட்டிற்கு அருகே இன்னொரு வீடு கட்டியுள்ளார். பகலில் ஓட்டு வீட்டில் ஜோசியம் சொல்வதும், இரவு பக்கத்து வீட்டில் தூங்க செல்வதும் வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல் ஓட்டு வீட்டிலிருந்து பக்கத்து வீட்டிற்கு பால்துரை சென்றுவிட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, ஓட்டு வீட்டில் மேல்பகுதியில் ஓடுகள் பிரிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பீரோவை பார்த்த போது, அதிலிருந்து 111 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.2.50 லட்சம் ரொக்கப்பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.27.75 லட்சம் ஆகும். இதுகுறித்து பால்துரை சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். சாத்தான்குளம் டி.எஸ்.பி.பாலசந்திரன், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ராஜசுந்தர் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.சம்பவ இடத்தில் விரல் ரேகை நிபுணர்கள், தடயவில் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. தூத்துக்குடியிலிருந்து மொப்பநாய் கோகோ வீட்டில் மொப்பம் பிடித்து மெயின்ரோட்டிற்கு சென்று நின்றுவிட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


