கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் நேற்று முதல் வீட்டிலிருந்து பொதுமக்கள் தபால்களை பதிவு செய்தல் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தபால் சேவை தொடங்கியது.
கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தபால் சேவை தொடக்க விழா நடந்தது. இதில் தபால் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சேவையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை தபால் நிலையங்கள், 61 துணை மற்றும் 280 கிளை தபால் நிலையங்களிலும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தபால் சேவை தொடங்கியது.
இந்த புதிய மென்பொருள் சேவையில் பதிவு செய்த மற்றும் பட்டுவாடா செய்யப்பட்ட தபால்கள், பார்சல்கள் பற்றி உடனுக்குடன் குறுந்தகவல் அனுப்பப்படும். மேலும், அந்த தபால்கள் பதிவு செய்தது முதல் பட்டுவாடா செய்யப்படவிருக்கும் அலுவலகம் வரை அது பயணிக்கும் நிலையை இணையம் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது.
டிஜிட்டல் முறையில்கியு ஆர் கோடு மூலம் பதிவு செய்த தபால்களுக்கு பணம் செலுத்தும் வசதி, வீட்டிலேயே பொதுமக்கள் தபால்களை பதிவு செய்யும் வசதி, வீட்டில் பதிவு செய்த தபால்களை அஞ்சலகத்திற்கு செல்லாமலே தபால்காரர்களை வீட்டிற்கே வரவழைத்து அவர்கள் மூலம் அனுப்புதல் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய மென்பொருளானது வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்றவாறு எளிமையாகவும், தரமானதாகவும் வடிவமைக்கபட்டுள்ளது.
இதன் மூலம் தபால் சேவை இன்னும் மேம்பட்ட முறையில் வழங்கப்படவுள்ளது. பொதுமக்கள் இந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சேவையை பெற்று பயனடையலாம், என்றார். இவ்விழாவில் கோவில்பட்டி தலைமை தபால் நிலைய அதிகாரி, அஞ்சலக துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், தபால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


