தூத்துக்குடி தூய பனிமய மாதா திருவிழாவில் ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை.26 முதல் ஆக. 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 443-வது ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை பல்வேறு பங்கு மக்கள் சார்பில் திருயாத்திரை திருப்பலிகள், இளையோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள், பொது நிலையினர், துறவியர், நோயாளர்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கான சிறப்பு திருப்பலிகள் நடந்தன. அதே போன்று மாலையில் செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது.
விழாவில் 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் மாலையில் நற்கருணை பவனி நடந்தது. 10-ம் நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலையுடன் வழிபாடுகள் தொடங்கின. மாலை 5.30 மணிக்கு கர்தினால் அந்தோணி பூலா தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் ஆலய வளாகத்தில் மட்டும் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பனிமய அன்னையின் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காலை 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில் மறைமாவட்ட மக்களுக்கான சிறப்பு திருப்பலியும், காலை 10 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்கான சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு தூத்துக்குடி மண்ணில் பிறந்து பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் அருட்தந்தையர்கள், துறவியர், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொள்ளும் சிறப்பு நன்றி திருப்பலி நடக்கிறது.
மாலை 3 மணிக்கு செபமாலை மற்றும் நற்கருணை ஆசீரும், தொடர்ந்து மாலை 5 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது. இந்த திருப்பலி முடிந்ததும் இரவு 7 மணிக்கு மேல் நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தூய பனிமய மாதா நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பவனியாக எடுத்து வரப்படுவார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டார்வின், உதவிப் பங்குத்தந்தை பிரவீன் ராசு, அருட்சகோதரர் மிக்கேல் அருள்ராஜ் மற்றும் பங்கு பேரவையினர், பக்த சபையினர், இறைமக்கள் செய்து உள்ளனர். விழாவை முன்னிட்டு, நெல்லை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


