தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற கப்பல் ஊழியர் வீட்டில் நகை கொள்ளையடித்த வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்தனர். 32 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, மாதா கோவில் தெருவைச் சேர்த செல்லையா மகன் கில்பர்ட் (73), கப்பலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி கில்பர்ட் வீட்டை பூட்டிவிட்டு, கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஊர் திரும்பினார். அப்போது அவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 32 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கில்பர்ட் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி சகாய புரத்தைச் சேர்ந்த டொமினிக் மகன் ஆக்னல் (30), கரிக்கலன் காலனி கடலரசன் மகன் அரவிந்த் (22), முத்தையாபுரம் ராஜீவ் நகர் ரவி மகன் கண்ணன் (25) ஆகிய 3பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 32 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது.


