தூத்துக்குடி அருகே நடத்தை சந்தேகத்தில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள நம்மாழ்வார் நகர் சேர்ந்தவர் மரியசாமுவேல் (61). இவர் வீட்டில் ஆடு வளர்த்து வருகிறார். இவருக்கு ஜோஸ்பின்மேரி (57) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதில் இருவருக்கும் திருமணமாகி விட்டது. மூத்த மகன் அருண்ராஜ் பெங்களூருவிலும், 2-வது மகன் ஆனந்தராஜ் தென் ஆப்பிரிக்காவிலும் வேலை பார்த்து வருகின்றனர்.
இதனால் கணவன், மனைவி இருவரும் நம்மாழ்வார் வீட்டில் வசித்து வந்தனர். ஜோஸ்பின் மேரி தோட்டத்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் வீடு அருகில் உள்ள தாம்போதி பாலத்தின் அடியில் ஜோஸ்பின்மேரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் இன்ஸ் பெக்டர் விஜயலெட்சுமி, சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி சூசைராஜ், சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் மரியசாமுவேல் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று மதியம் பழையகாயல் பகுதியில் மரியசாமுவேலை போலீசார் பிடித்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர், எனது மனைவி தோட்டத்து வேலைக்கு செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அவரது நடத்தையில் எனக்கு சந்தேகம் இருந்தது.
இதுகுறித்து நான் அவரிடம் பிரச்சினை செய்து வந்தேன். சம்பவத்தன்று இரவும் அவரது நடத்தை குறித்து கண்டித்த என்னிடம் மனைவி வாக்குவாதம் ெசய்ததால் பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான், வீட்டில் இருந்த அரிவாளால் அவரை கழுத்தை அழுத்து கொலை செய்து தாம்போதி பாலம் பகுதியில் உடலை வீசிவிட்டு தப்பி சென்று விட்டேன், என தெரிவித்தார். இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.


