தூத்துக்குடியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 13பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் இந்த மலையின் ஒரு பக்கம் சிக்கந்தர் தர்காவும் உள்ளது. இங்கு இஸ்லாமியர்கள் பலரும் சென்று வரும் நிலையில் இந்த தர்காவில் ஆடு கோழி பலியிட்டதாகவும், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி அசைவ உணவு உண்டதாகவும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து இந்து முன்னணி சார்பாக திருப்பரங்குன்றம் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக சமூக வலை தளங்ககளில் தகவல் பரவியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அந்தந்த பகுதியில் உள்ள பா.ஜ.க.வினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் செல்ல முயன்றதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சிவலிங்கம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ராகவேந்திரா உள்பட 13 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதில் 5 பேர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் செல்வதற்காக மதுரை செல்லும் பஸ்ஸில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


