மெஞ்ஞானபுரத்தில், பள்ளி, கல்லூரி நேரத்தில் அதிக பாரத்துடன் கல், மணல் ஏற்றி சென்ற 15 டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் அனல்மின்நிலையம், துறைமுக வளாகம் அமைக்கும் பணிகள், திருச்செந்தூரில் பெருந்திட்ட வளாகப்பணிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக உடன்குடி நாசரேத், திருச்செந்தூர், குரும்பூர், மெஞ்ஞானபுரம் போன்ற இடங்களில் உள்ள கண்மாய், ஊரணிகளில் இருந்து கல், மணல் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் மூலம் ஏற்றி செல்லப்பட்டது
தற்போது பேய்க்குளம் பகுதியிலிருந்து தினமும் நூற்றுக்ணக்கான டிப்பர் லாரிகளில் கல், மணல் அதிக பாரத்துடன் ஏற்றி கொண்டு சாரை, சாரையாக சென்று வருகிறன. இதனால் அதிர்்ச்சி அடைந்த மெஞ்ஞானபுரம் பொதுமக்கள், வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்து மெஞ்ஞானபுரம் போலீசாரிடம் புகார் செய்தனர். அப்போது, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் காலை, மாலை செல்லும் நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து லாரி உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் போலீஸ் நிலையத்தில், பள்ளி, கல்லூரி நேரங்களில் லாரிகளை இயக்கமாட்டோம் என எழுதிக்கொடுத்தனர். ஆனால், ஓரிரு நாட்களில் மீண்டும் வழக்கம் போல் பள்ளி, கல்லூரி நேரம் உள்ளிட்ட 24மணிநேரமும் டிப்பர் லாரிகளை இயக்கி வருகின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் பொதுமக்கள், வாகனஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், வியாபாரிகள், விவசாய சங்கத்தினர் நேற்று காலையில் மெஞ்ஞானபுரம் மெயின் ரோட்டில் அதிக பாரத்துடன் கல், மணலை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி வந்த 15 டிப்பர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மெஞ்ஞானபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், கணேசன் ஆகியோர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்டநேரமாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து சாத்தான்குளம் டிஎஸ்பி சுபகுமார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஒப்பந்தக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில், லாரிகளை காலை 10மணி முதல் மதியம் 3மணி வரையும், இரவு 8மணி முதல் காலை 6மணி வரை மட்டுமே இயக்க வேண்டும் என உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மெஞ்ஞானபுரத்தில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


