தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் நீரில் மூழ்கி சேதமடைந்த 22 மாற்றுத்திறனாளிகளின் பெட்ரோல் ஸ்கூட்டர்களை சரி செய்ய ரூ.91,169 மதிப்பிலான ஆணைகளை ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (09.12.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 447 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 16 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களில் கடந்த ஆண்டு 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் நீரில் மூழ்கி சேதமடைந்த 22 மாற்றுத்திறனாளிகளின் பெட்ரோல் ஸ்கூட்டர்களை சரிசெய்வதற்கு ரூ.91,169/- மதிப்பிலான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


