தூத்துக்குடி விமான நிலைய கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினார்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூடுதல் விமானங்களை கையாளும் வகையில் ரூ.227.33 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த முனையத்தில் விமான போக்குவரத்து கண்காணிப்பு கட்டுப்பாட்டு கோபுரம், தீயணைப்பு துறை கட்டிடம் உள்ளிட்டவை கட்டப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கு செல்லும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இணைப்பு சாலை புனரமைக்கும் பணியும் நடக்கிறது. புதிய முனையத்தின் புறப்பாடு பகுதியில் 4 வாயில்களும், 21 பயணிகள் செக்இன் கவுண்டர்கள், மூன்று ஏரோபிரிட்ஜ், கன்வேயர் பெல்ட் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது.
ஒரேநேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், 2 வி.ஐ.பி அறைகள், லிப்ட் வசதி, ஒரு மணி நேரத்துக்கு 1440 பயணிகளை கையாளும் வசதிகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.
புதிய முனையம் நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டடமாக அமைக்கப்படுகிறது. முனைய கட்டடங்கள் முழுதும் சூரியசக்தி விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும், புதிய முனையத்தில், ரூ.113.63 கோடி மதிப்பீட்டில் 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளத்துக்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால், மிகப்பெரிய ஏ – 321 ரக ஏர்பஸ் விமானங்களும் வந்து செல்ல முடியும். ஓடுதளம் அமைக்கும் பணி, இந்த மாதம் இறுதிக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலைய கட்டுமான பணிகளை தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து அவர் விமானநிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினார். ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விமான நிலைய இயக்குனர் ராஜேஷ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


