உடன்குடி அருகே கோழிகளை வேட்டையாடிய காட்டுப்பூனையை பிடிக்க வைத்த கூண்டில் மரநாய் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை பகுதியில் பொதுமக்கள் வீட்டில் வளர்த்து வரும் கோழிகளை காட்டுப்பூைனகள் கடித்துக் குதறிய வந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வந்தனர். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தம் என்பவர் தனது வீட்டில் ஏராளமான நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார்.
இதில் சில கோழிகளை காட்டுப்பூனை கடித்து வேட்டையாடிக் கொன்றது. இதனால் அந்த பூைனயை பிடிக்க ஆனந்தம் தனது வீட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு கூண்டு வைத்து இருந்தார். நேற்று காலையில் அந்த கூண்டில் மரநாய் ஒன்று சிக்கியிருந்தது. இதை பார்த்த ஆனந்தன் இதுகுறித்து உடனடியாக திருச்செந்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து கூண்டில் சிக்கிய சுமார் 3 கிலோ எடையுள்ள ஆண் மரநாயை பிடித்தனர். பின்னர் அதை காட்டுப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர். காட்டுப்பூனைக்கு வைத்த கூண்டில் மரநாய் சிக்கியது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.


