தூத்துக்குடி பொட்டலூரணி பகுதியில் உள்ள மீன் கழிவு ஆலைகளை கோட்டாட்சியர் பிரபு தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி 3 தனியார் மீன் பதப்படுத்தும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக குழந்தைகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக உண்ணாவிரதம், தேர்தல் புறக்கணிப்பு போன்ற பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இதுவரை இந்த பிரச்னைக்கு தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொட்டலூரணி கிராமத்தை சுற்றியுள்ள கழிவு மீன் நிறுவனங்களான என்பிஎம் அசோசியேட்ஸ் மீன் உணவு நிறுவனம், ஜெனிஃபா இந்தியா பிரைவேட் லிமிடெட், மார்க்ஸ்மென் அக்வாட்டிக் ப்ராடக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட கூட்டுப் புல தணிக்கை குழுவின் தலைவர் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேற்படி ஆய்வில் உள்ளே செலுத்தப்படுகின்ற மீன்களின் தரம் குறித்தும் மேலும் கம்பெனியின் செயல்பாடுகள் மற்றும் செய்முறைகள் குறித்தும் மேற்படி கம்பெனிகளில் தமிழ்நாடு அரசு மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டும் நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா என்பன குறித்தும், மீன்கள் அவிக்கப்பட்டு வெளியேற்றப்படும் நீரின் மாதிரி சேகரித்தும் அது இறுதியாக வெளியேற்றப்படும் போது வரும் நீரின் மாதிரி சேகரித்து இரண்டிற்கும் உள்ள தரத்தை ஒப்பிட்டு பார்ப்பதற்காகவும் மேலும் கம்பெனிகளை சுற்றி அமைக்கப்பட்ட ஆழ்துளை குழாய்கள் மூலம் நிலத்தடி நீரின் மாதிரியை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.
மேற்படி ஆய்வின் அறிக்கையினை வருவாய் கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆய்வின் போது, மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி ஹேமந்த், கால்நடை பராமரிப்புத்துறை ஜான் சுபாஷ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் உலகநாதன், கருங்குளம் BDO முத்துக்குமார், பிளாக் ஹெல்த் சூப்பர்வைசர் வெங்கடேசன், சுகாதாரத்துறை உதவி இயக்குனர் பொற்செல்வன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், எல்லை நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, வடக்கு காரசேரி கிராம நிர்வாக அலுவலர் சொர்ண லட்சுமி, தெய்வச் செயல்புரம் வருவாய் ஆய்வாளர் அமுதா ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தது. இந்த தணிக்கையின் போது பொட்டலூரணி கிராமத்தைச் சேர்ந்தவர்களும் உடன் இருந்தனர்.


