திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்து 20.11.2012 அன்று போக்குவரத்து துவங்கியது. இந்த சாலையை பொறுத்தவரை, தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் துறைமுகத்திற்கும், துறைமுகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும். அதே போல் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு செல்லும் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்லும். மேலும் தூத்துக்குடியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. அங்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வரும்.
இந்த நான்கு வழிச்சாலை பணிகளில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் பிரம்மாண்டமான பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் அமைக்கப்பட்டதில் இருந்தே பலமுறை பாலத்தில் சேதம் ஏற்பட்டு வந்தது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கூட பாலத்தின் இரு பகுதியையும் ரூபாய் 4 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. அதன்பின்னர் போக்குவரத்து தொடங்கியது. தொடர்ந்து ஓராண்டுகள் கூட நிறைவடைவதற்கு முன்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்ட ஆரம்பித்தது.
இதனால் பாலத்தில் இரண்டு பகுதிகளிலும் மாறி மாறி ஓட்டை ஏற்பட்டது. இப்படி தொடர்ந்து பாலத்தில் 8 முறை ஓட்டை விழுந்துள்ளது. இதனால் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் ஒருவழிப்பாதை அடைக்கப்பட்டு மற்றொரு வழிப்பாதையாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு அவ்வப்போது சீரமைக்கும் பணிகள் நடந்தது. எனவே பாலத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கடந்த வருடத்தின் தொடக்கத்தில் பாலத்தை சீரமைக்க சுமார் 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியது.
இதற்கிடையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பாலத்தின் ஒருபகுதி சீரமைக்கப்பட்டு போக்குவரத்து ஒருவழிப்பாதையாக நடந்து வந்தது.
இந்த நிலையில் புதிதாக சீரமைக்கப்பட்டு தொடங்கப்பட்ட பாலத்தின் மேல்பகுதியில் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளை முறையாக அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணிகளை முறையாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


