பொதுமக்கள் அனைவரும் நேரக் கட்டுப்பாடுகள், மற்றும் உரிய விதிகளை பின்பற்றி மாசற்ற, பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குறைந்த ஒலியும், குறைந்த காற்று மாசு ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பொதுநல வழக்கில், பசுமைப் பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வைக்க மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையன்று காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும், இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடைப்பிடிக்க வேண்டியவை:
பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைப் பட்டாசுகளை (Green Crackers) மட்டுமே வெடிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதியுடன் திறந்தவெளியில் பொதுமக்கள் ஒன்றாகக் கூடிப் பட்டாசுகளை வெடிக்க நலச்சங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் மண்டலங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது.
குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களின் அருகில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் பொதுமக்களிடையே மாசு கட்டுப்பாடு வாரியம் விரிவான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாசற்ற, பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


