ரிலையன்ஸ் அறக்கட்டளை கன்னியாகுமரி மாவட்டத்தில் தகவல் சேவை என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. மீனவர்கள் மற்றும் கால்நடை விவசாயிகளுக்கு தேவையின் அடிப்படையில் தகவல்களை பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் வழங்கி வருகிறது. தற்போது கடும் வெப்பம் நிலவுவதால் கால்நடைகள் பெரிதும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது, சிலநேரம் கால்நடைகள் இறந்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் அதிகமாக இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இதனை கருத்தில் கொண்டு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் வலையொளி மூலம் கோடைகாலத்தில் கால்நடை பராமரிப்பு என்ற தலைப்பில் நேரடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பறக்கை கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் கால்நடை மருத்துவர் ஜென்ஜிஸ் இனிகோ அவர்கள் கறவை மாடுகள், வெள்ளாடுகள், செம்மரி ஆடுகள், மற்றும் கோழிகளை கோடைகாலங்களில் தாக்கும் நோய்கள் குறித்தும் மற்றும் அவைகளை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும் குடற்புழு நீக்க மருந்து கொடுப்பதின் அவசியம், மடிவீக்க நோயிலிருந்து கறவை மாடுகளை பாதுகாப்பது, உண்ணிகளை தவிர்த்தல், உணவு மேலாண்மை, தடுப்பு ஊசி போடுவதின் அவசியம் குறித்து விளக்கம் அளித்தார். இதில் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கால்நடை விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


