தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் இதுநாள் வரை 452.14 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (23.11.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1 ம் தேதி முதல் இதுநாள் வரை 452.14 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது.
பாபநாசம் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 663.958 கன அடியாக உள்ளது. 104.75 கன அடி நீர் தற்போது திறந்துவிடப்படுகிறது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 42.5 மெ.டன், கம்பு 47.1 மெ.டன், உளுந்து 46.2 மெ.டன், பாசிப்பயறு 12.4 மெ.டன் நிலக்கடலை 1.0 மெ.டன் சூரியகாந்தி 8.2 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 3080 மெ.டன் யூரியா, 2510 மெ.டன் காம்ப்ளக்ஸ், 1383 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 633 மெ.டன் பொட்டாஷ் உரங்கள் இருப்பில் உள்ளன.(2023-24) ம் ஆண்டிற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவிட 400 எக்டர் பரப்பளவிற்கு ரூ.473 இலட்சம் இலக்கு பெறப்பட்டு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
2023-24 ம் ஆண்டிற்கு 165000 மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வனத்துறை நாற்றங்காலிலிருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. இதுவரை 158 விவசாயிகளுக்கு 69275 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்புகொண்டு உழவன் செயலியில் பதிவு செய்து வேளாண்மை உதவி இயக்குநரின் ஒப்புதலை பெற்று விளாத்திகுளம், சாலிகுளம், ஊத்துப்பட்டி,வல்லநாடு மற்றும் கச்சனாவிளையில் உள்ள வனத்துறை நாற்றங்காலிலிருந்து மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, வோளண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, பட்டு வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக்கண்காட்சியினை பார்வையிட்டு, திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், இணை இயக்குநர் (வேளாண்மை) விஜயராணி, மண்டல இணைப் பதிவாளர் (கூட்டுறவுச் சங்கங்கள்) முரளி கண்ணன், இணைப்பதிவாளர்/செயலாட்சியர் (மா.ம.கூ.வ) நடுக்காட்டுராஜா, செயற்பொறியாளர் தாமிரபரணி வடிநிலக்கோட்டம் மாரியப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின்ராணி கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.


