தூத்துக்குடியில் ‘சத்துமிகு சிறுதானியங்கள்” என்ற விழிப்புணர்வு பிரச்சார ஊர்தியினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சத்துமிகு சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘சத்துமிகு சிறுதானியங்கள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சார ஊர்தியினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, இன்று (23.11.2023) கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவித்ததாவது:
இந்திய அரசு சோளம், கம்பு, ராகி, திணை, வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை, கோட்டு (மரகோதுமை) மற்றும் ராஜ்கிரா (விதை கீரை) போன்ற சத்துமிக்க தானியங்களை ‘சத்துமிகு சிறுதானியங்கள்” என அறிவிக்கை செய்துள்ளது. சத்துமிகு சிறுதானியங்கள் நாட்டின் உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்கவையாக விளங்குகிறது, எந்த ஒரு தட்ப வெட்ப நிலையிலும் மீண்டு எழுகிற தன்மையுடையது. சர்க்கரை நோய் எதிர்ப்பு தன்மையுடையது.
தூத்துக்குடி மாவட்டம் 83 சதவிகிதம் மானாவாரி சாகுபடி செய்யும் மாவட்டமாகும். இங்கு மானாவாரி வேளாண்மை மற்றும் மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் சிறுதானியங்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுவாக சோளம் 11100 எக்டர், கம்பு 10200 எக்டர் மற்றும் குதிரைவரலி 200 எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம் (சத்துமிகு சிறுதானியங்கள்) 2023-24 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு மானிய விலையில் சோளம், கம்பு மற்றும் குதிரைவாலி விதை உற்பத்தி மற்றும் விநியோகம், சோளம், கம்பு மற்றும் குதிரைவாலி செயல் விளக்கத்திடல், சிறுதானிய நுண்ணூட்டம், உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள் மற்றும் திட்ட விளம்பரம், சிறுதானிய விழிப்புணர்வு, விவசாயிகளுக்கு பயிற்சி என இத்திட்டத்தின் கீழ் ரூபாய் 188.75 இலட்சத்தில் திட்டம் செயல்படுத்தப்பட்டு, இதுவரை 4037 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகளின் பொதுக்குழு 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்து பல்வேறு கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசு புதிதாக இரண்டு சிறுதானிய மண்டலங்களை அறிவித்து தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தை நடத்தி வருகிறது. இரண்டாவது உள்ள தெற்கு சிறுதானிய மண்டலத்தில் தூத்துக்குடி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
வேளாண்மைத்துறை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் சத்துமிகு சிறுதானியங்களின் முக்கியத்துவம், சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பம், சிறுதானியங்களின் மதிப்பு கூட்டுதல் மற்றும் சிறுதானிய உணவில் உள்ள சத்துக்கள் பற்றி தெரு காட்சி வண்டி மூலம் அனைத்து கிராமங்களுக்கும் சென்று எடுத்துக்கூற உள்ளனர். விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நடப்பு ரபி 2023 மற்றும் வரும் கோடை பருவத்தில் அதிக அளவில் சிறுதானிய சாகுபடி செய்ய வேண்டும்.மேலும் சிறுதானிய உணவுகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர்(வேளாண்மை) விஜயராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின் ராணி, துணை இயக்குநர்கள் (வேளாண்மை) பாலசுப்பிரமணியம், ஜென்கின் பிரபாகரன், வேளாண் அலுவலர் நெடுஞ்செழியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


