தாமிரபரணியில் மட்டுமல்லாமல் தமிழக அரசே ஆற்று மணலை நேரடியாக விற்பனை செய்ய துவங்கியது.
தாமிரபரணி அனுதாபிகள் அனைவருமே கலங்கி விட்டனர்.
யார் மணல் கொள்ளையை தட்டிக்கேட்க வேண்டுமோ, அவர்களே மணல் அள்ளி விற்க தயாராகி விட்டார்கள். இதை எங்கே போய் சொல்வது.
முதலில் தாமிரபரணியில் மணல் அள்ள ஒப்பந்தகாரர்கள் நியமிக்கப்பட்டனர். ஆரம்ப காலத்தல் இயந்திரம் கொண்டு மணலை அள்ளக் கூடாது என்றனர். ஆனால் அண்டை மாநிலமான கேரளாவுக்கு மணல் தேவையை கருத்தில் கொண்டு அதிகமான மணலை தாமிரபரணியில் இருந்து அள்ள ஆரம்பித்தனர். இதனால் பல பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனையை தீர்க்க மணல அள்ள தடை உத்தரவு வரும் என நினைத்தால், நாளடைவில் அரசே ஆற்ற மணலை அள்ளுவது என்றும், அதை பொதுப்பணித்துறை மூலம் விற்பனை செய்வது என்றும் உறுதி செய்யப்பட்டு விட்டது.
தாணுலிங்கமும், தாமிரபரணி தாத்தாவும் தாமிரபரணி ஆற்றங்கரையில் கவலையோடு அமர்ந்திருந்தனர்.
“தாத்தா. தமிழக அரசே தாமிரபரணி மணலை அள்ள அனுமதி கொடுத்து இருககாங்களே. இது அரசுக்கு லாபம் தானே”.
“என்ன சார்வாள் விவரம் தெரியாம பேசுதிய. எப்படி லாபம் கிடைக்கும். தமிழக அரசு பெயரை சொல்லி மணல் மாபியாக்கள் இதுல வந்திருவாங்க. 3 யூனிட் மணல்தான் எடுக்கணுமுன்னு ஒரு திட்டம் போட்டா, இவுக அதை விட பல யூனிட மண்ணை கூட அள்ளிட்டு போவங்க. யாரும் கேட்க முடியாது”.
தாணுலிங்கம் யோசித்தார்.
“நம்ம ஆத்துல இருந்து மணலை கொண்டு போறானே கேரளா காரன். அவன் எங்கையாவது கனிம வளத்தை கொள்ளை போடுதானா பாருங்க சார்வாள். அவன் ரொம்ப கரெக்டா இருக்கான்”.
இந்த சமயத்தில் காளியும் செல்வியும் அங்கே வந்தார்கள்.
“என்ன தாத்தா, சாருகிட்ட என்ன பேசுறீங்க. ரொம்ப சீரியசா பேசிக்கிட்டு இருந்த மாரி இருக்கு”.
“ஏடே நாம எதெல்லாம் நடக்க கூடாதுன்னு நினைக்கிறோமோ அது எல்லாம் நடந்து கிட்டு இருக்குடே”.
“என்ன தாத்தா சொல்லுதீங்க”.
“நாம மணலையே அள்ளக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டு வாரோம். ஆனா அரசு தானே மணல் வியாபாரம் பாக்கப்போறேமுன்னு சொல்லுது. இது நல்லாவா இருக்கு”.
“ஆமாம் தாத்தா பக்கத்துல இருக்கிற கேரளாக காரன் ஒரு பாறையையோ, ஆற்று மணலையோ சுரண்ட மாட்டேன்கிறான். நாம் மட்டும் நம்ம கையை எடுத்து நம்ம கண்ணை குத்துறோம்”.
“ அதைதான் கேட்கேன் நாம் மட்டும் ஏன்டே நம்ம மண்ணை கொடுக்கணும். தமிழக அரசு மணலை விக்கிறதா? சொல்லியிருக்கே. அதுல எவ்வளவு ஊழல் நடக்க போவுதோ தெரியலையே”.
அவர்கள் அனைவரின் மனநிலையும் மாறி விட்டது.
தாத்தா ஒரு பெரிய தகவலை கூறினார்.
“தமிழ்நாட்டின் கனிம வளங்களை நம்பிக் கள்ள வணிகத்தில் ஈடுபடுவோர் கைவிடப்படார் என்பதே தற்போதைய புதுமொழியாகி விட்டதுடே. அந்த அளவுக்கு நாட்டுல இரண்டாம் நம்பர் தொழில் பாக்கிற ரவுடிகளெல்லாம் மணல் கொள்ளையடிக்க வந்துட்டானுக. தமிழ்நாட்டில மலை வளங்கள் கிரானைட் கற்கள் என்ற பெயரிலும், கடற்கரை வளங்கள் தாதுமணல் என்ற பெயரிலும், நதி வளங்கள் மணல் குவாரிகள் என்ற பெயரிலும், வன வளங்கள் மர வணிகம் என்ற பெயரிலும் பெருமளவில் சூறையாடிட்டாங்க. இப்போவும் சூறையாட என்ன என்ன வழி உண்டோ. அதையெல்லாம் செய்றாங்க. இதுல அரசியல் வாதிகள் ஆளும் வர்க்கங்கள் அவுகளுக்கு உடந்தையாக போகுது. அதுல ஒரு வழித்தான் அரசு ஆற்று மணலை விற்பனை செய்யும் முயற்சி”.
அதிர்ச்சியோடு தாத்தாவை பார்த்தனர்.
“கனிம வளக் கொள்ளைகள் தொடர்பான நூற்றுக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களுக்கும் நிர்வாகத் தரப்புகளுக்கும் பெருஞ்சுமைகளாக மாறியிருக்கு. நான் கூட ஒரு வழக்கை போட்டு இருக்கேன். அந்த வழக்கு வாய்தாவிலே போய்கிட்டு இருக்கு. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மிக மிகத் தீவிரமாக மணற்கொள்ளைகள் நடத்தப்பட்டு வருது. நமது தமிழ்நாட்டில், மொத்தம் உள்ள 33 ஆறுகளில் இருந்தும் நாள்தோறும் 90 ஆயிரம் லாரிகளில் மணல் அள்ளிச் செல்லப்படுது. தமிழ்நாட்டின் ஒருநாள் மணல் தேவை அதிகபட்சம் 35 ஆயிரம் லாரிகள்தான். எஞ்சியிருக்கும் அவ்வளவு மணலும் அண்டை மாநிலங்களுக்கும், அயல்நாடுகளுக்கும் கடத்தப்படுது”.
தாத்தா எப்போதுமே தரவு இல்லாமல் பேச மாட்டார். அது மட்டுமல்லாமல் யாருக்காகவும் எதற்காகவும் அடிபணிய மாட்டார். எனவே அவர் பேசுவதை கவனமாக கேட்க ஆரம்பித்தனர்.
“கரூர் மண்டலத்தில் காவிரி ஆற்றுப் பகுதிகள் அனைத்திலும் மணற்கொள்ளை நடக்கு. அதுக்கு எதிரா மக்கள் ஒன்று கூடினாங்க , “காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை நிறுவினாங்க. “காவிரி ஆறு எங்கள் ஆறு மணற் கொள்ளையனே வெளியேறு’ ன்னு முழக்க ஆரம்பிச்சாங்க. தொடர்ந்து போராடினாங்க. அவங்க மேலே அரசு வழக்குகளை போட்டது. மணல் மாபியாக்கள் கொடூரமான தாக்குதல்களையும், கொலை மிரட்டல்களையும் விட்டாங்க. அதை தினமும் சந்திச்சிக்கிட்டே இருக்காங்க. இன்னும் முடிவு ஏற்பட்டதா தெரியலை”. தாத்தா புள்ளி விவரமாக எல்லாவற்றையும் எடுத்து வைத்தார்.
“ஏன் தாத்தா இதை அரசு கண்டுகொள்வதே இல்லையா?”
“மணற் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடையும்போது மட்டும் எங்கோ ஒரு சில இடங்களில் கண்துடைப்புக்காக மணல் அள்ளுவது தாற்காலிகமாக நிறுத்தப்படுது”.
உண்மைத்தான் அதை தான் தங்களது கண் கூட பார்த்துக்கொண்டே இருக்கிறார்களே. எதித்து நிக்கிறவங்களை எப்படியாவது சரிக்கட்டி திரும்பவும் மணல் கொள்ளையை ஆரம்பிச்சிடுதாங்க. அதுவும் இவங்களுக்கு தெரியாமலையா இருக்கு.
“நெய்தல் நிலப்பரப்புகளின் தாதுமணற் கொள்ளைகளும், குறிஞ்சி, முல்லை நில வனங்களின் மரக்கொள்ளைகளும், கிரானைட் கற்கொள்ளைகளும் இயற்கைச் சூழல் நலன்களுக்கு மறைமுகமான ஆபத்துகளை விளைவிக்கக் கூடியவை. இதை யாருமே கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே என நினைக்கும் போதுதான் மனதுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு”.
தாணுலிங்கமும் தாத்தாவின் பேச்சை ஆமோதித்தார்.
“உண்மைத்தான் மருத நிலப் பரப்பின் ஆறுகளில் நடக்கின்ற மணற் கொள்ளையோ நேரடியாகவும், மறை முகமாகவும் சுற்றுச்சூழலுக்கும், மக்களின் வாழ்வாதாரத் துக்கும், வேளாண்மைத் தொழிலுக்கும் வேட்டுவைக்கக் கூடியவையாகும். இதே நிலமை போச்சுன்னா விவசாயம் கேள்வி குறியாகிடும்”.
தாணுலிங்கம் யோசித்தார். இந்த அறியாமையில் உள்ள மக்களை நாம் எந்த லிஸ்டில் வைத்திருக்கிறோம் என தெரியவில்லை. என மனதுக்குள் புலம்பி கொண்டார்.
“கனிம வளங்களைப் பறிகொடுப்பதில் இந்திய அளவில் தமிழகமே முதலிடம் வகிக்கிறது என்பதும், ஆற்றுமணற் கொள்ளையில் தமிழக மணல் வணிகர்களே முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பதும் ஆய்வு பூர்வமான உண்மைகளாகும். இதை பத்தி நான் புத்தகத்திலே படித்திருக்கேன்” தாத்தா வேதனையோடு சொன்னார்.
“அரசாங்கத்தைப் பெருமளவு ஏமாற்றியும், விவசாயிகளை வஞ்சித்தும், மிரட்டியும், ஊர்மக்களை இரண்டாகப் பிரித்து மோதவிட்டும், சில இடங்களில் கிராம மக்களுக்குக் கோயில் கட்டித் தருதல், கிராமத் தேவைகளுக்கு நன்கொடை அளித்தல் போன்றவற்றைச் செய்தும், மணல் வணிகர்கள் தங்களது மணற் கொள்ளைகளை நடத்தி வருகின்றனர்”.
அதைத்தான் செல்வியும் காளியும் கண்கூட பார்த்துக்கொண்டிருந்தார்களே. இதனால் தானே இவர்களே ஊரைவிட்டு விரட்டப்பட்டார்கள்.
“எதற்கும் அஞ்சாமல் கேள்வி கேட்பவர்களைத் தாக்குவது, கொலை செய்வது போன்றவையும் அவ்வப்போது நடந்து வருகின்றன. எத்தகைய மனித சக்தியாலும், என்றைக்குமே உற்பத்தி செய்ய முடியாத, ஆற்றுமணலை, குவாரி ஒப்பந்த முறையில் தனியாருக்கு விற்கத்துணிந்த அரசாங்கத்தின் முடிவு மிக மிக அபாயகரமானது. இது தமிழ்நாட்டின் இயற்கை வளத்திற்கு நேர்ந்திருக்கின்ற மிகப்பெரிய அவலம்தான். இதற்கிடையிலே அரசே இப்போ அந்த கொள்ளையை செய்யப்போகிறது”
தாணுலிங்கம் தாத்தா பேச பேச தவித்தே போய் விட்டார்.
“கேரள மாநிலத்தில் 45 ஆறுகள் பாய்கின்றன. ஆனாலும் கூட அந்த மாநிலத்தில் 1994-ஆம் ஆண்டு முதல் எந்த ஓர் ஆற்றிலிருந்தும் ஒரு கைப்பிடி மணலைக்கூட அள்ளமுடியாத அளவுக்கு அங்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன”.
“அப்படியா?” காளி ஆச்சரியத்தோடு கேட்டான்.
“ஆமாம் அம்மாநிலத்திற்குத் தேவையான மணல் முழுவதும் தமிழ்நாட்டின் ஆறுகளில் இருந்தே அள்ளிச் செல்லப்படுது. கட்டடங்களைக் கட்டுவதற்கு மணல் தேவைப்படாத மாற்றுத் தொழில்நுட்ப முறைகளையும் அங்கு பயன்படுத்தி வாறாங்க. அதுபோன்ற எத்தகைய விழிப்புணர்வும் நமது தமிழகத்தில் இல்லை. அதை நினைச்சுத்தான் எனக்கு கஷ்டமா இருக்கு”.
“ஏன் தாத்தா இதைப்பத்தியெல்லாம் நம்ம அரசியல் வாதிகளுக்கு தெரியாமலேயா இருக்கும்”.
“தெரியும். ஆனால் இந்த செயலை செய்றதே அவுகத்தானே. ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு மொத்தம் 28 -வகையான கட்டுப்பாடுகளையும், நெறிமுறைகளையும் அரசு விதிச்சிருக்கு. அத்தகைய 28 -விதிகளில் ஒன்றைக் கூட குவாரி ஒப்பந்தக்காரர்கள் பின்பற்றுவதே இல்லை”.
காளி மனதுக்குள் நினைத்தான். “அது தான் நன்றாக தெரியுமே? நாம ஏற்கனவே ஒரு உயிரைதான் பலிகொடுத்து இருக்கோமே. மறக்க முடியமா? ரகுவை மறக்க முடியுமா? ”.
தாத்தா மிகப்பெரிய தரவுகளை இதற்காக சேகரித்து வைத்திருந்தார்.அதையெல்லாம் இவர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டார்.
“நீர் நிலைகள் முற்றிலுமாக வறண்டு போனாலும் அவற்றை வேறு எத்தகையத் தேவைகளுக்கும் பயன்படுத்தக் கூடாது. சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மக்கள் மத்தியில் அலட்சியம் நிலவுகிறது’ என்று மிகவும் வேதனையோடு தெரிவித்திருக்கிறார், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி”.
தாத்தா பேச பேச மற்றவர்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள். வேறு வழி தெரியவில்லை. தாத்தா தொடர்ந்து பேசினார்.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம் போன்றவற்றின் ஆறுகளில் எந்திரங்களைக் கொண்டு மணல் அள்ளுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலோ ராட்சத எந்திரங்களையும், லாரிகளையும் பயன்படுத்தி கனிம வளங்கள் அள்ளப்படுகின்றன”.
எவ்வளவு பெரிய கொடுமை.
“அதுவும் தமிழக அரசே மண்ணை அள்ளலாம் என்று சொன்ன பிறகு தான் ராட்சத இயந்திரம், மிகப்பெரிய லாரியெல்லாம் ஆற்றுக்குள் இறங்கியுள்ளது.
“ஒரிடத்தில் ஒரு பெரிய மணல் வியாபாரி கிட்ட 34 கோடி ரூபாயை வருமான துறை பறித்து இருக்கிறது. அதற்கு அவர்கள் அருமையாக வந்து பதில் சொல்லியிருக்கிறார்கள். அந்த பதில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அந்த பதில் என்ன தெரியுமா? எங்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூபாய் 34 கோடி ரூபாய் மணல் வணிகத்தில் ஒரு நாளைக்கு 1.50 கோடி எனும் கணக்கில் கடந்த 26 நாள்களில் நாங்கள் சம்பாதித்த பணமாகும். எங்களின் நிறுவனத்துக்குச் சொந்தமாக 425 லாரிகளும், 180 பொக்லைன் எந்திரங்களும் உள்ளன. அவற்றைக் கொண்டு சட்டபூர்வமாக ஆற்று மணலை அள்ளிச் சம்பாதித்து அதற்கான வரியையும் அரசுக்குக் கட்டி வருகிறோம். எனவே எங்களுக்கு ஜாமீன் அளியுங்கள்’ என்று சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் அந்த வியாபாரியை வருமான வரித்துறை விடுதலைத்தான் செய்திருக்கிறது.
தாணுலிங்கம் அதிர்ந்தே போய் விட்டார்.
“ஒற்றை மணல் வணிகரிடம் 26 நாள்களில் இவ்வளவு பணம் குவிகிறது என்றால், அவரது 180 பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு 425 லாரிகளில் அவர் அள்ளுவது மணலையா அல்லது பணத்தையா? நாடு முழுவதும் இன்னும் ஆயிரக்கணக்கான மணல் வணிகர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்”.
அதிர்வுக்கு மேல் அதிர்வு . சாதரண ஆற்று மணல் தானே என்று நினைத்தால் இங்கே எவ்வளவு பெரிய சம்பவங்கள் இருக்கிறது.
“ஆற்று மணலுக்கு மட்டுமே இந்தக் கணக்கு. மற்ற கனிமங்களான தாது மணல், கிரானைட், காட்டு மரங்கள் போன்றவை வேறு வேறாக விரிகின்ற தனித் தனிக் கணக்குகளாகும். வானுயர எழும்புகின்ற கட்டடங்கள் ஆற்று மணலுக்குக் கட்டப்படுகின்ற கல்லறைகளாகவே மாறுகின்றன. ஏனெனில், சிமெண்ட் கலந்த அந்த மணற் குவியல்கள் இனி எந்தக் காலத்திலும் மீண்டும் ஆற்றுக்கு வந்து நீரோடு சேர்ந்து நகரப்போவதில்லை. அதற்கு பல லட்சம் வருடம் காத்திருக்க வேண்டும்”.
தாத்தா சொல்ல சொல்ல செல்விக்கு மயக்கமே வருவது போல இருந்தது.
“கிரானைட், பவளப்பாறைகள் போன்ற மற்ற கனிமங்களுக்கும் இதே நிலைதான். இயற்கையே நினைத்தால் கூட மீண்டும் உருவாக்கிக் கொள்ள வாய்ப்பில்லாத இதுபோன்ற நிரந்தர வளங்களை பாதுகாப்பதுதான் உண்மையான அறிவியல் வளர்ச்சியாக இருக்க முடியும். அந்த நிலையை எட்டுவதற்கான முதற்படியாக ஆற்று மணல் வணிகத்தை அரசுகள் முற்றிலுமாகக் கைவிட வேண்டும்”.
“இந்த தகவலையெல்லாம் நாம அரசுக்கிட்டே எடுத்துக்கொண்டு போவோம்”. தாணுலிங்கம் சொன்னார்.
“அரசு எங்கே கேட்கப்போகுது. அது செவிடன் காதில் ஊதும் சங்கு போலத்தான். நமது ஆற்று மணல் வணிகம் என்பது கட்டடங்களையும், குவாரி ஒப்பந்தக்காரர்களையுமே உயர்த்தியிருக்கிறது. நமது சமூகத்தையும், விவசாயிகளையும், சுற்றுச்சூழல் நலன்களையும் படுபாதாளத்தில் வீழ்த்தி யிருக்கிறது. இன்னொரு பக்கத்தில் உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகள் லட்சக்கணக்கில் நீண்டகாலமாக விற்பனை யாகாமல் இருப்பதாக கட்டுமான உலகில் ஒரு சலிப்பும் முனகலும் கேட்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் பல கோடிக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாக நம்மிடையே உள்ளனர். செல்வத்தின் அடையாளமாகவும், ஆண்டுக் கணக்கில் பயன்படுத்தப்படாமலும், ஆண்டுக்கு ஒரு சில நாள்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகவும், நமது நாட்டில் கோடிக்கணக்கான கட்டடங்கள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் தேவைப்படுவதாக பல அடி ஆழம் வரை சுரண்டப் பட்டதென்னவோ நமது ஆறுகளின் மணல் பரப்புகள்தான்”.
“தாத்தா சொல்வது உண்மைத்தான். இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். எப்படி கட்ட, யார் மூலமாக பூனைக்கு மணிக்கட்டுவது”.
“யாருடைய வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் யாருடைய வளங்களைப் பறிகொடுப்பது என்பதே இன்று நம்முன் நிற்கும் கேள்வியாகும். வேளாண்மையின் வீழ்ச்சியில் இருந்தும் சுற்றுச் சூழல் நலத்தின் வீழ்ச்சியில் இருந்தும் எந்த நாடும் வளர்ச்சியடைந்துவிட முடியாது. ஆற்றுமணல் விற்பனை என்பது ஒரு வகையில் ஆறுகளையே விற்பதுபோன்ற ஒரு நடவடிக்கைதான். எனவே அவற்றை குவாரி களாக்கித் தனியாருக்குத் தாரை வார்த்து பணம் ஈட்டுகின்ற பாழ் வணிகத்தை நமது தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். அதன் வழியிலான வருவாய்க்கும் ஆற்றுமணல் பயன்பாட்டிற்கும் மாற்று காணப்பட வேண்டும்”.
தாத்தா பேசும் போதே அவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது.
“இயற்கையின் மீது நடத்தப்படுகின்ற கொடூரத் தாக்குதல் போல, மணற் கொள்ளைக்கு பலியாகின்ற நீண்ட ஆறுகள் காலப்போக்கில் ஆங்காங்கே தென்படுகின்ற நூற்றுக்கணக்கான குட்டைகளாக மாறி காலப்போக்கில் அவையும் கைவிடப்படும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போ தாமிரபரணியும் அந்த நிலையில்தான் உள்ளது. விரைவில் தாமிரபரணி அழிந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை”.
தாத்தா பேசிக்கொண்டே சற்றே விசும்பவும் ஆரம்பித்து விட்டார். தனது கண் முன்பே தாமிரபரணி அழிவதை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை.
“பல்வேறு வகையில் சீரழிக்கப்படுகின்ற மக்களை அடுத்தடுத்த தலைமுறைகளிலாவது மீட்டெடுக்க முடியும். ஆனால் அழிக்கப்பட்டுவிட்ட இயற்கையை எந்தக் காலத்திலும் மீட்டெடுக்கவே முடியாது என்பதை நாம் உணர வேண்டிய தருணமிது”.
சொல்லியவர் தனது தோளில் கிடந்த துண்டை எடுத்துக்கொண்டு கதறி அழ ஆரம்பித்து விட்டார்.
சிறிது நேரம் நான்கு பேரும் அமைதியா இருந்தனர். “இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். ஊர் கூடி இழுத்தால் தான் தேர் என்பார்கள். இங்கே நாம் தேர் இழுக்க கூட வேண்டுமே? முடியுமா? ஏற்கனவே நாம் பட்ட பாடு தெரியாதா?” காளி, செல்வியின் மனது சஞ்சலப்பட்டது.
அங்கிருந்து அமைதியாக கிளம்ப ஆயத்தமானார்கள்.
தாணுலிங்கம் கூறினார். “தாத்தா நாளைக்கு காலையில நம்ம உறுப்பினர்களை வைச்சு இதற்கு ஒரு கூட்டம் போடுவோம். எந்த வகையிலையாவது நம்ம தாமிரபரணி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை காப்பாற்ற திட்டம் திட்டுவோம்” என்றார்.
எல்லோரும் அமைதியாக கலைந்தார்கள்.
அன்று இரவு.
காளியும் செல்வியும் தனது வீட்டில் கோரை பாயில் படுத்துக்கிடந்தனர். இருவர் மனதும் கொதித்துக்கொண்டே இருந்தது.
திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகி விட்டது. நதியை காப்பாற்ற வேண்டும். அதன் பிறகு தான் தாங்கள் இருவரும் கூட வேண்டும் என முடிவு செய்திருந்தனர்.
ஆம்.
இதுவரை செல்வியும் காளியும் கணவன் மனைவியாக வாழ வில்லை.
காளி கேட்டாள், “செல்வி நாம எடுத்த முடிவு சரித்தானா? தாமிரபரணியை காப்பாற்ற வேண்டும். அதற்காக நம்ம இரண்டு பேரும் வாழாம தனித்தனியாத்தான் இருக்கணுமா?”
செல்வி அமைதியாக இருந்தாள்.
காளி தனது கையை எடுத்து அவள் மேல் போட்டுக்கொண்டு அவள் முகத்தினை பார்த்தான்.
அவளும் சிறிது நேரம் பார்த்தாள். இருவர் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தது. அந்த கண்ணில் ஆயிரம் வாட்ஸ் பல்புகள் எரிந்தன.
பாவம். வாலிப பருவம். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தனர்.
ஆனால் மறுநிமிடம்.
இருவரும் தள்ளிப்படுத்தனர்.
“வேண்டாமுங்க. முதலில நாம தாமிரபரணியை காப்பாற்றுவோம். அதுக்கப்புறம் தான் நமக்கு எல்லாம். நம்ம கிட்ட இருக்கிற ஒரு நதியை காவு கொடுத்துட்டு, இந்த மோசமான உலகத்தில நம்ம வாரிசு வந்து பிறக்க கூடாது. அதானல நாம பிரிஞ்சே இருப்போம்”.
உறுதியாக இருந்தாள் செல்வி.
“சரி தான்” தள்ளிப்படுத்தான் காளி.
ஒரே வீடு. ஒரே பாய். கணவன் . மனைவி உறவு. ஆனால் அவர்களுக்கு வேறு உறவு இல்லை.
அந்த உறவு வரவேண்டும் என்றால் தாமிரபரணி காப்பாற்றப்பட வேண்டும்.
இவர்களுடைய இந்த கட்டுபாடு சரித்தானா?. தாமிரபரணி காப்பாற்ற படுமா? அதுக்கு அரசு ஒத்துக்கொள்ளுமா?
இறைவனுக்குத்தான் வெளிச்சம்.
மறு நாள்.
மிகப்பெரிய திட்டத்துடன் தாத்தா தாயராக இருந்தார். அவரை பார்க்க அப்போது காளியின் பழைய நண்பன் ஒருவனும் வந்திருந்தான்.
( தொடர்ந்து பயணிப்போம்)


