தூத்துக்குடியில் நடைபெற்ற தொழிற்கடன் வழங்கும் விழாவில், பயனாளிகளுக்கு ரூ.315 கோடி மதிப்பிலான கடனுதவிகளை கனிமொழி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கடன் ஆணைகள் வழங்கும் விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில் இன்று (23.08.2023) வழங்கி தெரிவித்ததாவது: நாட்டின் பொருளாதாரம் 35 சதவீதம் சிறு, குறு, நடுத்தர தொழில்களை சார்ந்துதான் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ஏற்றுமதியில் 45 சதவீதம் சிறு. குறு, நடுத்தர தொழில்களின் பங்கு உள்ளது. இந்த தொழில்களின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். இன்று மிகப்பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் அதிக பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவது கிடையாது. ஏனென்றால் அவை தொழில்நுட்பங்கள் சார்ந்தவை. ஆனால் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிதரக்கூடியது சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள்தான். யாராக இருந்தாலும் ஒரு சிறிய தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களது மிகப்பெரிய கனவு.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்கள் எல்லாம் கடன் வழங்குவதற்கான இலக்கினை அடையவில்லை. திருப்பூர் மாவட்டம் ரூ.400 கோடி அளவிற்கு கடன் வழங்கியிருக்கிறது. நாம் தற்போது ரூ.315 கோடி மதிப்பில் கடனுதவியினை இன்று வழங்குகின்றோம். எனவே நம்முடைய அடுத்த இலக்கு ரூ.500 கோடியாக இருக்க வேண்டும். சிறு. குறு, நடுத்தர தொழில்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் தமிழ்நாடு முதலமைச்சர் பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
சிறு. குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த இளைஞர்களை தொழில்முனைவோர்களாக மாற்றும் நோக்கத்தில் அண்ணல் அம்பேத்கர் பெயரில் திட்டத்தினை வகுத்து தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார்கள். அதேபோல் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில்தான் சிப்காட் கொண்டுவரப்பட்டது என்பதைநாம் மறந்துவிட முடியாது.
நாம் கடன் வாங்கி இன்னும் தொழிலை விரிவுப்படுத்த வேண்டுமென்றால் இப்போது வாங்கிய கடனை சரியாக கட்ட வேண்டும். நீங்கள் சரியாக கடனை திருப்பி செலுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் உங்களுக்கு கடன் வழங்கியுள்ளார்கள். சிறப்பானதாக, தனித்துவமாக நாம் உருவாக்கும் பொருட்கள் இருக்க வேண்டும். இப்படி செய்தால் மிகப்பெரிய வெற்றியாளர்களாக மாற முடியும். நமது மாவட்டத்தை எல்லோரும் திரும்பி பார்க்கும் மாவட்டமாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றக்கூடிய திறமை உங்கள் அத்தனை பேருக்கும் இருக்கிறது என தெரிவித்தார்.
அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்ததாவது: இன்றைய முகாமில் 3145 பேருக்கு 315 கோடி கடன் ஆணை வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் , இளைஞர்கள் வேலை வாங்குபவர்களாக இல்லாமல் வேலை வழங்குபவர்களாக இருக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள். நீங்கள் துணிந்து தொழில் தொடங்கினால்தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும். தமிழ்நாடு முதலமைச்சர் , மாவட்ட தொழில் மையம், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனம் மூலம் அதிக தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்று அதிக முயற்சி எடுத்து வருகிறார்கள்.
அந்நிய முதலீடுகள், உள்நாட்டு முதலீடுகள் என ரூ.2 லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. நமது மாவட்டத்தில் அதிக அளவு தொழில் தொடங்க கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில் 215 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாக்களுக்கு மீண்டும் இன்று உரிமைப்பட்டா வழங்கப்பட இருக்கிறது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஸ்வர்ணலதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாரத ஸ்டேட் வங்கி த.துரைராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


