ருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் திருக்கோவிலில் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு யாகபூஜை, கும்பபூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்தில் காப்பு கட்டிய சு.ஆறுமுகசுரேஷ் வல்லவராயர் திருவிழாக் கொடியினை ஏற்றினார்.
பின்னர் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்பு கொடி மரம் தர்ப்பை புல், மலர்கள், பரிவட்டங்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக், விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர், மேற்பார்வையாளர் கார்த்திகேயன், மணியம் நெல்லையப்பன் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று தொடங்கி பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற செப். 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.


