கடைக்கோடி கிராமத்தில் உள்ளவர்களின் கோரிக்கைகளுக்கும் தீர்வு காண்பதற்காகத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் தொடர்பு முகாம் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார் என்று மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் ஜமீன்தேவர்குளம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் இன்று (09.08.2023) நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கின்ற ஜமீன்தேவர்குளம் கிராமத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருவது கடினமான காரியம். நீங்கள் மாவட்ட ஆட்சியரையோ, அல்லது கூடுதல் ஆட்சியரையோ அலுவலகத்தில் வந்து பார்க்க வேண்டுமென்றால் உங்களது ஒரு நாள் வேலைக்கு செல்லாமல் சம்பளத்தை செலவு செய்துதான் வரவேண்டும்.
அதனை தவிர்ப்பதற்காகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கின்ற மாவட்ட ஆட்சியர் மட்டுமல்லாமல் அனைத்து துறை அலுவலர்களும் உங்கள் கிராமத்திற்கு வந்து குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்று தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதற்கான திட்டம்தான் இந்த மக்கள் தொடர்புத் திட்டமாகும். கடைக்கோடி கிராமத்தில் உள்ளவர்களின் கோரிக்கைகளையும் தீர்வு காண்பதற்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை அரசு அலுவலர்கள் உங்களை சந்தித்து குறைகளை களைவதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், ஒவ்வொரு துறையிலும் என்னென்ன நலத்திட்டங்கள் வழங்கி வருகிறோம், மக்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறது, அதை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வகையில் அந்தந்த துறைகள் மூலம் அரங்குகள் அமைக்கப்படும். இந்த அரங்குகளை பார்த்து நீங்கள் பயனடைய வேண்டும். அரங்குகளை பார்த்து நீங்கள் தெளிவுபெறுவதோடு பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
இன்று வருவாய்த்துறை மூலம் 61 பேருக்கு ரூ.18,10,984/- மதிப்பில் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா, 19 பேருக்கு திருத்தப்பட்ட பட்டா, 15 பேருக்கு ரூ.2,18,250/- மதிப்பில் இயற்கை மரணம், திருமணம், தற்காலிக இயலாமை, கல்வி மற்றும் நலிந்தோர் உதவித்தொகை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ.2,761/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், மாவட்ட தொழில் மையம் மூலம் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 1 பயனாளிக்கு ரூ.4,20,000/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மூலம் 3 பேருக்கு ரூ.19,912 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 4 பேருக்கு ரூ.21,640/- மதிப்பில் மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் / தேய்ப்பு பெட்டி என மொத்தம் 108 பயனாளிகளுக்கு ரூ.24,93,547/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஜமீன்தேவர்குளம் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் மூலம் 2 களஅலுவலர்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறார்கள். வேளாண்மைத்துறையும், தோட்டக்கலைத்துறையும் அரசின் திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைத்துள்ளார்கள். இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக கடைபிடிக்கப்படுவதால் இந்திய அரசு சிறுதானியங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த பகுதியில் மானாவாரி நிலங்கள் அதிக அளவில் உள்ளது.
எனவே நீங்கள் அதிகளவு சிறுதானியங்கள் பயிரிட வேண்டும். அதற்கு அரசு அதிக விலை கொடுக்க இருக்கிறது. சிறுதானியங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கு தேவையான உதவிகள் செய்யப்படும். கோவில்பட்டி கடலை மிட்டாய், ஆத்தூர் வெற்றிலை, தூத்துக்குடி மக்ரோன் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற்றதைப்போன்று கோவில்பட்டி, கயத்தார் பகுதியில் விளையும் எலுமிச்சைக்கும் புவிசார் குறியீடு பெறுவதற்கு நபார்டு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 331 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 194 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இன்று பெறப்படும் மனுக்களுக்கும் அடுத்த 14 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். அனைத்து நலத்திட்டங்களையும் உங்களுக்கு செய்துதர அரசு முனைப்புடன் இருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 15ம் தேதி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை தொடங்கி வைக்கவுள்ளார்கள். இத்திட்டத்தில் நமது மாவட்டத்தில் உள்ள 987 நியாய விலைக்கடைகளில் முதல்கட்டமாக 600 நியாய விலைக்கடைகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்டமாக மீதியுள்ள 387 நியாய விலைக்கடைகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக ஜமீன்தேவர்குளம் நியாய விலைக்கடைகளில் 580 குடும்ப அட்டைகளில் 380 பேருக்கு மேல் விண்ணப்பம் அளித்துள்ளீர்கள். இந்த விண்ணப்பங்கள் செப்டம்பர் 15ம் தேதிக்குள் பரிசீலிக்கப்படும். அரசின் திட்டங்களை பெற்று நீங்கள் மேலும் மேலும் முன்னேற வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேணடும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி சார் ஆட்சியர் மற்றும் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் (பொ) கௌரவ்குமார், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பாலசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், சமூக பாதுகாப்புத்திட்ட துணை ஆட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் தேவி ராஜகோபால், ஜமீன்தேவர்குளம் ஊராட்சிமன்றத் தலைவர் ராமசாமி, துணைத் தலைவர் சு.பாலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


