தூத்துக்குடி வாகைக்குளத்திலுள்ள ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறையின் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் ஒருநாள் கள ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர்.
உழக்குடி கிராமத்தில் ஊர்த்தலைவர் முத்துக்கிருஷ்ணன் ஊர் சார்பாக மாணவ மாணவிகளை வரவேற்றார். தொடர்ந்து உழக்குடி, கலியாவூர், சீவலப்பேரி ஆகிய இடங்களில் உள்ள தொல்பொருள்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் பற்றியும் முனைவர் ஆறுமுக மாசானசுடலை வழிகாட்டி விளக்கம் அளித்தார். மேலும் தொல்லியல் களங்கள் பாதுகாக்கப்படுமா? என்ற தலைப்பில் விளக்கவுரை நிகழ்த்தினார்.
அங்கிருந்து கிளம்பிய மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூர் வருகை தந்தனர். அங்கு தொல்லியல் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வு மாணவர் குமரேசன் ஆய்வுகள் குறித்து விளக்கமளித்தார். தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வுப் பணி நடைபெற்று வரும் திருக்கோளூருக்கு வருகை தந்தனர். அங்கு தொல்லியல் அதிகாரி அருண், எழுத்தாளர் முத்தலாங்குறிச்சி காமராசு ஆகியோர் தொல்லியல் ஆய்வுகள் குறித்து விளக்கமளித்தனர்.
பின்னர் பழங்காலத் துறைமுகம் இருந்த கொற்கைக்குச் சென்று தங்களுடைய கள ஆய்வுப் பயணத்தை நிறைவு செய்தனர்.
இந்த ஒரு நாள் கள ஆய்வில் ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் பியூலாதேவி ஸ்டெல்லா, முனியசெல்வி ஆகியோர் மாணவ மாணவிகளை வழிநடத்தி வந்தனர்.


