கோவில்பட்டி அருகே அனுமதி பெறாமல் செயல்பட்ட தினசரி சந்தை தடை செய்யப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சிக்குட்பட்ட எட்டயபுரம் சாலையில் நேற்று திடீரென புதிதாக தினசரி சந்தை செயல்பட தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டது. திட்டங்குளம் ஊராட்சி பகுதியில் விவசாய பகுதியில் அழித்து வணிக வளாகம் அமைக்க கூடாது என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதையும் மீறி நேற்று முதல் செயல்பட தொடங்கியது.
இதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை, பல்வேறு அரசு விதிமுறைகளை மீறி தினசரி சந்தை அமைக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமின்றி கனிமொழி எம்பி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்து நகராட்சி தினசரி சந்தை வியாபாரிகளுக்காக கூடுதல் பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளுடன் தற்காலிக தினசரி சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு எதிராகவும், அங்கே வியாபாரிகளை செல்ல விடாமல் தடுக்கும் வகையிலும் சிலர் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே எவ்வித அனுமதியும் பெறாமல் செயல்பட்ட தினசரி சந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி உத்தரவின்படி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய மன்றத்தில் எவ்வித அனுமதியும் பெறாமல், தனியார் சந்தை அமைப்பதற்கான நிபந்தனைகளை மீறி செயல்பட்டதால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 150ன்படி தடை செய்யப்படுவதாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான அறிவிப்பாணையை புதிதாக தொடங்கப்பட்டதாக கூறப்படும் தினசரி சந்தையில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேனராக வைத்துள்ளனர்.
தனியார் சந்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். கோரிக்கை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோட்டாட்சியர் மகாலட்சுமி மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு பொதுமக்களும் வியாபாரிகளும், சமூக ஆர்வலர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.


