நமது நதிக்கரையோரத்து அற்பதங்கள் தொடரை தவறாமல் படித்து வருபவர் நெல்லை சேர்ந்த புத்தனேரி கோ. செல்லப்பா அவர்கள். சிறந்த பட்டிமன்ற நடுவர், ஓய்வு பெற்ற ஆசிரியர். நிறைய வரலாறுக்கு சொந்தகாரர். புத்தனேரியில் சிறந்த பாராம்பரிய குடும்பத்தினைசேர்ந்தவர். இவருடைய தாத்தா ராமசாமி கோனார் ஜில்லா போர்டு உறுப்பினராக இருந்துள்ளார். அதுபோலவே செல்லையா கோனார், ஆறுமுக கோனார் ஆகியோர் இவரது தாத்தாக்கள் தான். இவர்கள் தான்ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் உடையாமல் இருக்க அலைகற்களை கட்டி விட்டுள்ளார். இவர்கள் பாராம்பரியம் எப்படி உறுதியாக இருக்கிறதோ? அதுபோலவே அந்த அலை கற்களும்நூற்றாண்டை கடந்து உறுதியாக இருக்கிறது.
அவர் தான் மேல முன்னீர்பள்ளம் பற்றி பேசுகீறீர்கள். இந்த ஊரில் பிரபலமானவர்கள் பலர். அவர்களில் பெரும் தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை, நடிகர் பூர்ணம் விஸ்வநாதன், மதுரம் ஓட்டல் அருணாச்சலம் ஐயர் ஆகியோருக்கு சொந்த ஊர்.ஆய்வாளர் முனைவர் மாணிக்கமும் இந்த ஊரைச் சேர்ந்தவர்தான். மேலமுன்னீர் பள்ளம் பாளையங்கால்வாய் வடகரையில் வாசிப்பை வலியுறுத்தும் வாசிக்க மீண்ட ஐயனார் சாஸ்தா கோவில் உள்ளது. நினைக்க வாய்ப்பு தந்த தங்களுக்கு மிக்க நன்றி என கூறியிருந்தார்.
நாம் அவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும் ஏன் என்றால் நாம் பூர்ணம் விஸ்வநாதனை பற்றி பேசி விட்டோம். மற்றவர்களை தேடி வேண்டும்.
முதல் கட்டமாக மு.சி. பூரணலிங்கம் பிள்ளை வரலாற்றை பார்ப்போம்.
மு. சி. பூரணலிங்கம் பிள்ளை என்பவர் தமிழறிஞர், கல்லூரிப் பேராசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ் மொழியின் தொன்மையையும், உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர்.
இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள “முந்நீர்ப்பள்ளம்” என்னும் ஊரில் 1866- இல் பிறந்தார். இவரது பெற்றோர் சிவசுப்பிரமணியம் பிள்ளை வள்ளியம்மை ஆகியோ ராவர். இவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவனது திருப்பெயராகிய “பூரணலிங்கம்” என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. இவருடைய பாட்டனார் பெயரும் பூரணலிங்கம் தான். முந்நீர்ப் பள்ளத்தைச் சேர்ந்த சைவர்கள் “பூரணம்” என்று பெயர் வைத்துக் கொள்வது இயல்பு. தன் தந்தையின் ஆசிரியரான செல்லப் பெருமாளிடம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர் அருகில் உள்ள மேலப்பாளையம் பள்ளியில் சுந்தரம் என்ற ஆசிரியரிடம் இலக்கணமும், திருக்குறளும் ஆழமாக கற்றார். பின்னர் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள தருவை என்ற சிற்றூரில் உள்ள பள்ளியில் சேர்ந்து பயின்றார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் பரமக்குடி நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார்.
கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், பாளையங்கோட்டை இந்துக் கல்லூரி, சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, கோயம்புத்தூர் புனித மைக்கேல் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆங்கிலப் பேராசிரியராக இருந்த பூரணலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்ததுடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1915ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென்று ஒரு பாடத்திட்டம் இல்லை. கல்லூரி களில் தமிழ்ப் பாடம் தேவையில்லை என்று பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவையில் பேசப்பட்டும் வந்தது. இதனால் பூர்ணலிங்கம் பிள்ளை, பரிதிமாற் கலைஞர், தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை ஆகியோர் ஒவ்வொரு ஆசிரியரின் வீட்டுக்கும் சென்று ஆதரவு திரட்டினர். மேலும் பாண்டித்துரைத் தேவரைச் சந்தித்து மதுரை தமிழ் சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டனர். பாண்டித் துரையும் இவர்களின் முயற்சிக்கு ஒத்துழைப்பதாக உறுதி அளித்தார். ஆசிரியர் சங்க்க் கூட்டத்தின் தீர்மானமும் சென்னை பல்கலைக் கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சென்னை பல்கலைக்கழகத்தில் மொழிப்பாடமாக தமிழ் வைக்கப்பட்டது.
சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் பணியாற்றியபோது “ஞான போதினி” என்ற மாதப் பத்திரிகையை நடத்தினார். பின்னர், நீதிக் கட்சியினரின் “ஜஸ்டிஸ்” என்ற ஆங்கிலப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றிச் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார்.
பிற்காலத்தில், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற்கலைஞர், கோவை சிவக்கவிமணி, சுப்பிரமணிய முதலியார் ஆகியோரின் நட்பைப் பெற்றார்.
பூரணலிங்கம் பிள்ளை, தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும், சட்ட நூல்களையும் எழுதி யுள்ளார். இவரது படைப்புகளில், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, மற்றும் சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடிகிறது.
தமிழ் மொழியின் உயர் சிந்தனைகளைப் பிற மொழியாளரும் அறிந்து கொள்ளும் வகையில் பல நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பன்னிரண்டு பக்கங்களில் ஆராய்ச்சி முன்னுரையும் எழுதினார். திருக்குறள் குறித்துத் திறனாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
தமிழ் இலக்கியத்தைப் பற்றி விரிவாக தன் முதல் நூலான “Primr of Tamil Literature” என்ற ஆங்கில நூலினை 1904இல் எழுதினார். அதில் தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழரின் உயர்ந்த அறிவியல் சிந்தனைகளையும், பண்பாட்டையும், வரலாற்று ஆதாரங்களோடு சுட்டிக் காட்டியுள்ளார். திராவிட நாகரிகமே இந்தியா முழுவதும் பரந்து விளங்கியது என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்காக “தமிழ் இலக்கிய வரலாறு” என்ற ஆங்கில நூலை எழுதினார். இந்திய வரலாற்றையும் தமிழ்நாட்டு வரலாற்றையும் பண்பாட்டையும் இணைத்து பூர்ணலிங்கம் பிள்ளை ஜிணீனீவீறீ மிஸீபீவீணீ என்ற ஆங்கில நுலை 1927இல் எழுதினார். இந்த நூலில் தமிழ் மொழியில் தொன்மையையும், தமிழின் உயர்ந்த அறிவியல் சிந்தனைகளையும், பண்பாட்டையும் வரலாற்று சான்றுகளுடன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் செம்மோழியே என்ற தலைப்பில் செல்லைப் பல்கலைக் கழகத்தில் உரையாற்றினார். மேலும் இவரை பற்றிய தகவல்கள் வெளிவரும்
(நதி வற்றாமல் பாயும்)


