“ஆச்சி உங்கிட்டே கதை கேட்டு கதை கேட்டு நான் பயித்தியமாயிட்டேன். இனிமே என்னால உன் கதை கேட்காம இருக்க முடியாது. ஆமா”. என்றான் ராசுக்குட்டி.
“ஏலே விளங்காதவனே. எப்ப பாரு. கதை கதைன்னு அழையுதான். கொஞ்சம் சும்மா இருக்க மாட்ட. பம்பாய் போன நம்ம அந்தோணி அண்ணாச்சி இப்ப வருவாவ. உனக்கு சாக்லெட் கொண்டு வருவாவ செத்த சும்மா இரு”. என்றாள் ஆச்சி.
சாக்லெட் என்றவுடன் எச்சி உறியது ராசுக்குட்டிக்கு. அந்த நேரம் அந்தோணி அண்ணாச்சி வந்தார். தலையில் ஹேர்லிங் வைத்து நல்ல அகலமான விரிசல் பேண்டை வைத்து தரையில் உள்ள தூசியையெல்லாம் துடைத்துக்கொண்டு அண்ணாச்சி வந்தார். கையில் ஒரு சூடுகேஸ் ஒன்று வைத்திருந்தார். அந்த காலத்து ராமராஜன் போல் தலை முடி ஸ்டைல் இருந்தது. பொல்லாதவன் ரஜினி காந்த போல பேண்டை சர்ட் அணிந்து இருந்தார். கண்ணில் வேறு கூலிங்கிளாஸ் போட்டிருந்தார்.
“வாருங்கள் அண்ணாச்சி.வடக்கேயிருந்து எப்ப வந்தீய..”
ஆச்சி சொன்னவுடன் அந்தோணி அண்ணாச்சி சிரித்துக்கொண்டே. “யக்கா நல்லா இருக்கேன் இன்னைக்கு காலையில தான் ரயிலில இறங்கி நம்ம ஊரு முதல் டவுண் பஸ்ஸில இறங்கி வாறேன்” என்றார்.
“அண்ணாச்சி எல்லோரும் சுகந்தானா. பட்டணத்தில் வைச்சு பார்த்தது உங்கள” என்றாள் ஆச்சி.
“ஆமாம் யக்கா உன் மவ பேறுகாலத்துககு பம்பாய் வந்தல. நான் கூட அங்க வைச்சித்தான் உன்னை பாத்தேன். வரும் போதும் உன் மவ குழந்தையை பாத்துட்டுத்தான் வாறேன் நல்லா இருக்காவ” அந்தோணி அண்ணாச்சி சிரித்தார்.
சரி அண்ணாச்சி. வாங்க காலையில வீட்டுல ஏதாவது நாஸ்டா பண்ணி தாரேன்.
அடேடே பம்பாயிக்கு வந்தவுடனே அங்குள்ள நாஸ்டா பேச்செல்லாம் வந்துட்டே.
பொறவு என்ன அந்த ஊரை மறக்க முடியுமா-? என்னா பாடு படுத்தி புட்டாளுவ. ஒருத்தி மாரட்டி காரியாம். என் பாம்படத்தை பிடிச்சி பாத்துக்கிட்டு என்னமாரி பேசினா தெரியுமா? அதை பிடிச்சி பிடிச்சு பார்த்து ஆச்சரியப்பட்டா. அது மட்டுமா? என் கிட்ட வந்து கானா காயான்னு கேட்டா. நானும் நம்ம ஊரு கானத்தை த்தான் பத்தி கேட்கிறான்னு. எம்மா ஊருல கானம் நிறைய விளையுது. ஆனால் இங்க எதுவும் கொண்டு வரலையேன்னு சொல்லிபுட்டேன். அதுல இருந்து என் மருமவப்புள்ளைய, பேரப்புள்ளைய எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்காவ. என்ன ஊரு அண்ணாச்சி அது. வெறும் விளங்காத ஊரு. என்றாள்.
ராசுக்குட்டி அந்தோணி அண்ணாச்சியை பார்த்தான். அவரது உடை அவனுக்கு வித்திசமாக இருந்தது. அவரது தலைமுடி அதற்கு மேல் இருந்தது. கிட்டத்தட்ட இதுபோன்ற ஒரு மனிதனை கிராமத்தில் அன்றாட வாழ்க்கையில் ராசுக்குட்டி பார்க்கவே இல்லை.
அந்தோணி அண்ணாச்சி. தெருவில் பார்த்தார். அங்கே ஒருவர் நொண்டி நொண்டி போய்க்கொண்டிருந்தார்.
“அன்னா போராறீய்யா. சாவன்னா… முனா. அவருதானே”.
“அது என்ன சவன்னா. முனா”. ராசுக்குட்டி கேட்டான்.
சங்காணி முத்துக்குட்டி .அதோட சுருக்கம் தான் சாவன்னா முனா. என்றாள் ஆச்சி
“அட கூப்பிடும் அவாளை” என்றார் அந்தோணி அண்ணாச்சி.
ஆனால் அதற்குள் சவன்னா முனா வேகமாக சென்றார்.
அந்தோணி அண்ணாச்சி லக்கேஜை விட்டு விட்டு அவர் முன்னால் ஓடிப்போய் நின்றார்.
அவரை பார்த்து அதிர்ச்சியும் முத்துக்குட்டி அப்படியே நின்றுவிட்டார்.
“என்னவே! குத்துக்கல்லு கணக்க நிக்கறீரு..”
அந்தோணி அண்ணாச்சி சொன்னதும், அடையாளம் கண்டுகொண்டார்.
“தீயை வைச்சி கொளுத்தும். நம் அந்தோணி அண்ணாச்சி. அண்ணாச்சியோ எப்படி இருக்கீறுருவே.”
“நல்லா இருக்கேன். நீ ஏமுடே சீக்குவந்த கோழி மாறி இருக்கீரு”
“இந்த எடக்குத்தானே வேண்டாம்ங்கது”
“பூடம் தெரியாம சாமி ஆடாதியும்வே”
“வாய் புளிச்சுதோ.. மாங்காய் புளிச்சுதோன்னு பேசுறீரே”
ராசுக்குட்டி அருகில் வந்து நின்றான். அண்ணாச்சி உங்க தலை முடி நல்லா இருக்கு.
“என்னல்லே சொல்லுதே”
சிரித்தான் ராசுக்குட்டி
“சிரிப்பாணியைப் பாரு சிரிப்பாணியை”
என்று கூறி விட்டு இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
இந்த ஊரிலே இப்படித்தான் பேச்சு கேட்கும்.
“ஆக்கங்கெட்ட மூதி”
“சோலியைப் பாருலே”
“பார்த்துகிருங்க… கண்டமேனிக்கு ஏசறான்”
“ஒரு துலாத்துக்கு நாலு சிரட்டை கருப்பட்டி கிடைக்கும்”
“சோப்பு இவ்வளவு தண்டி இருந்தது.. எள்ளுப் போல ஆக்கிட்டாரு.”
“நான் அப்படி கூடி வந்தேன். இவன் இப்படி கூடி வந்துட்டான்.”
“அவிய வீட்டில எங்க பீட்டு வாராவ”
“ஏப்பு நல்லா இருக்கீயா…”
“ஏலா… ஒழுங்கா சேலையை போடுளா….”
இப்படிதான் பேசுவார்கள்.
நெல்லை தமிழ் என்றாலே இப்படித்தான். பேசுவதை கேட்க நயமாக இருக்கும். அருமையான தமிழ் உச்சரிப்பு எளிதாக இருக்கும்.
ராசுக்குட்டி கையில் ஒரு சாக்லெட் டப்பாவை கொண்டு ஒப்படைத்தான் அந்தோணி அண்ணாச்சி.
அண்ணாச்சி. நானும் பெரியவனாகி, மும்பைக்கு வந்து உங்களை மாரி சம்பாத்தியம் பண்ணணும். அதுக்கு நான் என்ன செய்யணும்.
சிரித்தார் அந்தோணி அண்ணாச்சி. வேறே ஒண்ணுமில்லைடே. கை பத்திரம், வாய்பத்திரம் , கோமணம் பத்திரமாக இருக்கணும் அவ்வளவுதான்.
ராசுக்குட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. நாம பெரிய ஆளாபோய் பம்பாயில சம்பாதிக்கணுமுன்னு நினைச்சா இந்த ஆளு பத்திரம் மூத்திரம் என கண்டது கழியதை சொல்லிக்கிட்டு கிடக்காரு.
அண்ணாச்சி என்ன சொல்லுதீயா. புரியும் படி சொல்லுங்க.
முத்து சிரித்தாரு, இவருக்கு வேலையே , இதுதான்.
“வாய் புளிச்சுதோ.. மாங்காய் புளிச்சுதோன்னு பேசுறாரு”
இது என்ன புதிர் கதை. முத்து அண்ணாச்சி. இந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியலை இது என்ன கதை.
அய்யோ தம்பி இது கூட தெரியலையாக்கும். மாங்காயை எடுத்து கடித்தா புளிப்பா இருக்கு காரணம் என்ன? மாங்காத்தான். ஆனால் இவர் அப்படி சொல்லமாட்டாருடே. வாய்த்தான் புளிக்கும்பாரு. அது மாறித்தான் இப்போ அவரு கை பத்திரம், வாய் பத்திரம், கோவணம் பத்திரமுன்னு புதிர் போடுதாரு.
சிரித்தான்.
அதுக்குத்தான் அர்த்தம் என்ன?
எனக்கு தெரியாதுடே முத்து அண்ணாச்சி பின் வாங்க ஆரம்பித்து விட்டார்.
ராசுக்குட்டிக்கு மண்டையே வெடித்து விடும் போலஇருந்தது. இது என்ன கதை. வாய் பத்திரம், கை பத்திரம், கோமணம் பத்திரம். இந்த மூன்று பத்திரத்தினால் எப்படி காசு சம்பாதிக்க முடியும். பெரிய ஆளுக்கு எதுக்கு இப்படி ஏணைக்கு கோணைக்கு எழுதி வைச்சிட்டு போயிருக்காவ.
மண்டையை போட்டு குழுப்பினான்.
விடக்கூடாது ஆச்சிக்கிட்டே போனால் மட்டுமே இந்த கதைக்கு தீர்வு கிடைக்கும். எனவே அதற்கான ஏற்பாடை செய்ய வேண்டும்.
ஆச்சி சொல்லு ஆச்சி.என்றான். ஆச்சி பிடிக்கொடுக்காமல் அங்கிருந்து கிளம்பிக்கொண்டிருந்தார். ஆனால் ராசுக்குட்டி விட வில்லை. ஆச்சி தெரிஞசோ தெரியாமலோ நாம அங்க சுத்தி இங்க சுத்தி மேற்கு எல்கைக்குள் நுழைந்து விட்டோம்/
அந்தோணி அண்ணாச்சி. பம்பாயிக்கு பிழைக்க போனா கை பத்திரம், வாய் பத்திரம், கோமணம் பத்திரமா இருந்தாத்தான் பணம் சம்பாதிக்க முடியுமுன்னு சொல்லுறாரு. அது என்ன எனக்கு புரியலை ஆச்சி.
ஐயோ இவன் தொல்லைதாங்க முடியலையே. ஏடே நீ பேசாம அந்த அந்த அந்தோணி அண்ணாச்சிக்கிட்ட சொல்ல வேண்டியது தானே.
சரி விடு. இன்னைக்கு புதன் கிழமை சந்தை. செய்துங்கநல்லூருக்கு நான் நாலு நாட்டு கோழியை வித்துட்டு, மாசி காருவாடு வாங்க போறேன். நீயூம் வா. வர்ற வழியில சொல்லுதேன் என்றாள் ஆச்சி.
சரி. சந்தோசமாக நார் பெட்டியில் நாட்டுக்கோழியை வைத்து மேலே துணியை வைத்து மூடி வயற்காட்டு வரப்பு வழியாக செய்துங்கநல்லூர் நோக்கி நடக்க ஆரம்பித்தான். பல இடத்தில் கொடிக்கால் என்னும் வாழைத்தோட்டம் இருந்தது. அந்த இடத்தில் வரப்பு இல்லாத காணரத்தினால் தண்ணீருக்கு இறங்கி நடந்தான். அங்கு தண்ணீர் பாம்பு அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருந்தது.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பாட்டி முன்னால் செல்ல , பின்னால் ராசுக்குட்டி பெட்டியோடு நடந்தான்.
“அரக்கீரே..”
“கரியடுப்பு”
“கண் அப்ப சட்டப்பே”
“ஒரேவொரு அறிவோ (உறைதயிர்)”
“காயம் பெருங்காயம் (பால் பெருங்காயம்)”
“லிமிச்சிம்ப்ளே (எலுமிச்சம்பழம்)”
“அரிப்பு வலை போடுதே (அரிப்புக்கு வலை போடலையா)”
“ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்”
“கொழுந்து உ..உ.. அ.. (மரிக்கொழுந்து)”
“உப்பாங்கலையோ உப்பே….ய்”
“நல்லெண்ணே.. மண்ணெண்ணே.. தேங்காண்ணே
அரக்கீற்றே.. கீர்றே (கீரை)”
என வியாபாரிகள் கத்தி வியாபாரம் விற்றுக்கொண்டிருந்தனர்.
ஆச்சி கொண்டு போன நாட்டுகோழியை ஒரு வியாபாரி உடனே விலை கொடுத்து வாங்கி கொண்டான். ஆச்சியும் கொடுத்து விட்டாள். சரி பாண்டி கோழியை வித்துட்டு நார் பெட்டியை வச்சிரு, நான் கருவாடு வாங்கிட்டு வந்து பார்ததுக்கொள்கிறேன் என்று கிளம்பினார்.
உள்ளே போனாள்.
செய்துங்கநல்லூர் சந்தை கருவாட்டுக்கு பெயர் போன சந்தை. அந்த காலத்தில் மும்பைக்கு கருவாடு வாங்கி அனுப்ப சுற்றுப்பட்டியில் உள்ள 42 கிராம மக்கள் செய்துங்கநல்லூர் சந்தைக்குத்தான் வருவார்கள். ஆச்சி பார்வதி மாசி கருவாடு வாங்கி நல்ல குழம்பு வைப்பாள்.
கருவாடு வாங்கி விட்டு, நார் பெட்டியை எடுத்துக்கொண்டு வயற்காட்டு வழியாக நடக்க ஆரம்பித்தார்.
“ஆச்சி ஆச்சி. அந்த கதையை சொல்லு”.
“சொல்றேன்”.
“முதல் முதலில் கை பத்திரம்”.
“மும்பைக்கு நாம வேலைக்கு போகும் போது களவு இருக்கவே கூடாது. எந்த காரணத்தினை கொண்டு வேலை செய்யிற இடத்தில விசுவாசமா இருக்கணும். அப்படி விசுவாசமாக இருந்தா தொழில் படிச்சு ஒரு காலத்தில இவங்களே பெரிய தொழில் காரங்களா மாறிடலாம். அதனால களவு கையால எடுக்க கூடாது . அது தான் கை பத்திரம்”.
“அப்புறம் வாய்ப்பத்திரமுன்னா?”
“ஒரு மனிதனுக்கு கேடே வாயித்தான். புரளி பேசக்கூடாது. யாராவது புரளி பேசுனா அவ்வளவுதான். அதுக்கப்புறம் நமா உண்மை பேசுனா கூட எடுபடாது. அந்த அளவுக்கு நம்ம வாயி மோசம். அதுக்கபுறம் வாழ்கையில முன்னேற்றமே ஏற்பாடாது . அதனால வாய்பத்திரமா இருக்கணும்”.
“சரி. அப்புறம் கோவணம் பத்திரம்”.
“ இது உனக்கு வேண்டாம் உனக்கு வயது பத்தாது”.
“ஏன் ஆச்சி. சொல்லு ஆச்சி”.
“கோவணமுன்னா என்னன்னு தெரியுமா?”
“தெரியுமே தாத்தா அடிக்கடி கொடியில காயப்போட்டு இருப்பாரு”.
“ஆமாம். அந்த கோவணத்தை மும்பையில் வைச்சி தேவையில்லாம அவுக்க கூடாது. அதுவும் தகாத உறவுக்கு தலை வணங்க கூடாது. அப்படி நடந்தா. அது அவுக வாழ்க்கையில் கொடைச்ச பணமும் போயி, நல்ல பெயரும் போயி, நோய் நொடி வந்து வாழ்க்கையும் போயிரும்”.
“ம் அப்படியா?”
“அப்படித்தான்.அதனாலத்தான் சொல்வாவ கை பத்திரம், வாய் பத்திரம் , கோவணம் பத்திரம். இந்த மூன்று பத்திரமும் இருந்தா பம்பாயில வாழ்க்கை பத்திரமா இருக்கும்”.
என்று ஆச்சி கூறினார்.
ராசுக்குட்டிக்கு எல்லாம் புரிந்தது. ஆனால் கோவணம் தான் புரியவில்லை. ஆனால் ஆச்சி உருட்டிய கண்களினால் தொடர்ந்த அவளிம் கேட்கவும் முடியவில்லை.
( ஆச்சி சொன்ன ஆத்தோர கதைகள் தொடரும்)


