உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவர்னகிரியில் வரும் 16ம் தேதி வீரன் சுந்தரலிங்கம் 253வது பிறந்த நாள் விழாவிற்கு வருபவர்கள் காவல்துறையின் நிபந்தனைகளை கடைபிடித்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவர்னகிரி கிராமத்தில் வரும் ஏப்ரல் 16ம் நாள் வீரன் சுந்தரலிங்கம் 253வது பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது. கடந்த வருடம் நடத்தியது போல் கவர்னகிரி கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவில் முன்பு பொங்கல் வைத்து அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து வந்து பின்பு கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம் மணி மண்டபத்தில் அவருக்கு பூஜைகள் நடத்திக்கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டைப் போலவே குறுக்குச்சாலை, நடுவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் பஜாரிலிருந்து வரும் 3 ஜோதிகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுகிறது. ஜோதி கொண்டு வரும்போது உடன் வருபவர்கள் ஜோதியை தவிர அரிவாள், கம்பு வாள் போன்ற ஆயுதங்களை எடுத்து வரக்கூடாது. மேற்படி ஜோதி எடுத்து வரும்போது இருசக்கர வாகன பேரணி நடத்தக்கூடாது.
ஜோதி எடுத்து வரும்போது போக்குவரத்திற்கு இடையூறு இல்லா வண்ணம் ஜோதி கொண்டு வரவேண்டும். கோஷங்கள் எழுப்புவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஜோதி கொண்டு வருபவர்கள் ஜாதி ரீதியான பனியன்கள், டீ-ஷர்ட்டுகள், கையில் ஜாதி கயிறுகள் மற்றும் கொடிகள் கட்டுவதை தவிர்க்க வேண்டும். விழாவிற்கு வரும் வாகனங்களில் ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டக்கூடாது. பிற சமுதாயத்தினருக்கு எதிராக எவ்வித கோஷங்களும் எழுப்பக்கூடாது. விழா மாலை 07.00 மணிக்குள் முடிக்கப்படும்.
விழாவானது கடந்த வருடத்தை போலவே நடைபெற உள்ளதால் விழாவில் புதிய நிகழ்வாக மாட்டு வண்டிப்பந்தயம், கரகாட்டம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சமுதாய கூட்டத்திற்கு அனுமதி கோரியதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் மேற்படி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேற்படி புதிய நிகழ்வுகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, அவற்றிற்கு அனுமதி கோரி கிராமத் தலைவர் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை இன்று விசாரணை மேற்கொண்ட மேற்படி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மேற்கூறிய காவல்துறையின் நிபந்தனைகளை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மேற்படி புதிய நிகழ்வுகள் நடத்துவதற்கு காவல்துறை உயரதிகாரிகள் யாரும் அனுமதி கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே உயரதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இதுகுறித்து யாரேனும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேற்படி விழா அமைதியாக நல்ல முறையில் நடப்பதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.


