அவளின் சுருட்டை முடியைப் பார்க்க சாய்பாபாவை நினைவுபடுத்தும். அவளுக்கு மெலிந்த தேகம்.. இவள் நெல்லை நகரத்திலிருந்து வருகிறாள். பெரும்பாலும் இவள் தாமதமாகத்தான் வகுப்பிற்கு வருவாள். ஆனால் கண்ணுக்கு மைத்தீட்டி மிதமான ஒப்பனையுடன்தான் தினமும் வகுப்பிற்கு வருவாள்.
பல்கலைக்கழகத்தில் காலை 9.15 மணிக்கு வகுப்புத் துவங்குவது வழக்கம்.
பல்கலைக்கழக வாசலில் இறங்கி சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்துதான் வகுப்பறைக்கு வரவேண்டும். அதுவும் திருநெல்வேலியின் காட்டமான காலை வெயிலில் இவ்வளவு தொலைவில் உள்ள வகுப்பிற்கு நடந்துதான் செல்ல வேண்டும். அது மட்டுமல்ல வகுப்பறை மூன்றாவது மாடியில் உள்ளது. மூன்றாவது மாடிக்குப் படி ஏறித்தான் வரவேண்டும். இதனால் மாணவ மாணவிகள் காலை, முதல் வகுப்பில் சற்று களைப்புடன் இருப்பதைக் காணலாம்.
இரண்டு வாரத்திற்கு முன் நான் காலை 9.15. மணிக்கு வகுப்பிற்குள் சென்ற போது மிகச்சில மாணவர்களையே அங்குப் பார்க்க முடிந்தது.
“சரியான நேரத்திற்கு வகுப்பிற்கு வராத மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் பெரிய அளவில் வளர்ந்ததை நான் இதுவரை கண்டதில்லை”.
அதனால் பல மாணவர்கள் வகுப்பில் இல்லாதது வேதனை அளித்தது. தாமதமாக வரும் இந்த பழக்கத்தை மாற்ற ஏதாவது செய்யவேண்டும் என எண்ணினேன். தாமதமாக வந்தால் ரூபாய் 20 அபராதத் தொகை வைக்கலாம் என முடிவு செய்தேன். இது பற்றி மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது அந்த சுருட்டை முடிக்காரி காலை வெயிலில் நடந்து வகுப்புக்கு வந்து சேர்ந்தாள். அப்போது காலை 9.40 மணி.
முகத்தைப் பார்க்க அவ்வளவு களைப்பு தெரியவில்லை. இருக்கையில் அமர்ந்தாள். அடுத்த வினாடி “ஆ ஆ” என ஓலமிட்டாள். இந்த நிலையிலும் அவள் முகத்தில் சற்று சிரிப்பைப் பார்க்க முடிந்தது எனக்கு விந்தையாகத்தான் இருந்தது.
“அவள் தன் காலை மேசையில் இடித்துக் கொண்டாள்” என நினைத்தேன்.
“என்ன ஆச்சி ?’ எனக் கேட்டேன்..
“காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது ?” என்றாள்.
“உடனே காலையில் சாப்பிட்டாயா?” என நான் கேட்டேன்.
‘இல்லை” என்றாள்.
எனக்குக் கோபம் வந்தது. “காலை சாப்பாடாவது கையில் வைத்திருக்கிறாயா?” எனக் கேட்டேன்.
ஆமாம் என்ற மாதிரி தலையை ஆட்டினாள்.
“முதலில் அதை எடுத்துச் தின்றுவிட்டு வா” எனக் கடிந்து கூறினேன்.
இப்போது பரவாயில்லை.. நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன் என வகுப்பிலிருந்து வெளியேறினாள்..
மறுநாள் என்னை வந்து சந்தித்தாள். “என்ன வேண்டும்? ” எனக் கேட்டேன்.
“இதனில் உங்கள் ஆட்டோகிராஃப் வேண்டும்” என ஒரு கடிதத்தை என்னிடம் நீட்டினாள்.
“அது என்ன கடிதம்?” என வாசித்துப் பார்த்தேன்.
அவளின் வகுப்பாசிரியரின் கட்டளைப்படி அவள் ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதியிருந்தாள். அதில் “அவள் எப்போதுமே வகுப்புக்குத் தாமதமாகத்தான் வருவதாகவும்; இனிமேல் சரியான நேரத்திற்கு வகுப்பிற்கு வருவேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என இருந்தது.
என் வகுப்பிற்கு மட்டும் அல்ல. அனைத்து வகுப்பிலும் இவள் இப்படியேதான் நடந்து கொள்கிறாள் எனப் புரிந்து கொண்டேன்.
“இவளை எப்படித் திருத்த ?” என சிந்திக்கத் தொடங்கினேன்.
“தாமதமாக வருவதால் ஏற்படும் தீமைகளை இரண்டு பக்கத்திற்கு எழுதி நாளை என்னிடம் கொடு” என அந்த கடிதத்தில் எழுதிக் கொடுத்தேன்.
“நாளைக்கு ஒரு தேர்வு உள்ளது. நான் இந்த கட்டுரையை மூன்று நாள்கள் கழித்து எழுதித் தரலாமா?” எனக் கேட்டாள்.
நான் முடியாது எனக்கு நாளைக்கே வேண்டும் எனச் சொல்ல, ” சரி..சரி..” எனச் சிரித்தவாறே என்னிடம் விடை பெற்றுச் சென்றாள்.
“இப்படி ஒவ்வொரு ஆசிரியரிடமும் வந்து நிற்கிறோமே” என்ற சூடு சொரணை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை !
மறுநாள் காலை 9.15க்கு அவள் வகுப்பிற்கு நான் தேர்வு நடத்தவேண்டும். காலை 9.10 மணிக்கெல்லாம் நான் அந்த வகுப்பறைக்குள் வந்து சேர்ந்தேன்.
” இவள் தேர்வுக்கும் தாமதமாகத்தான் வருவாளோ?” என்ற சிந்தனையில் நான் இருந்தேன்.
ஆனால் சரியான நேரத்திற்கு அவசர அவசரமாக வகுப்பிற்குள் புயலென நுழைந்தாள். மைத்தீட்டி மெல்லிய ஒப்பனையுடன்தான் வந்திருந்தாள். முகத்தில் வியர்வைத் துளிகள் அரும்பு விட்டபடி இருந்தது. சரியாக நேரத்திற்கு வந்து சேர்ந்த அவளைப் பார்க்க எனக்குச் சற்று மகிழ்ச்சியாக இருந்தது. அவள் இடத்தில் போய் அமர்ந்தாள்.
அடுத்த வினாடி அம்மா, ஆ.. ஆஆ.. ஆஆ… ஓஓஓ எனக் கதற ஆரம்பித்தாள். ஒரு காலை மடக்கிய படியும், கையால் தொடைப்பகுதியைப் பிடித்த படியும் அழத் தொடங்கினாள். பார்த்தவுடன் தொடைப் பகுதியில் கடுமையான தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது எனப் புரிந்து கொள்ள முடிந்தது.
“காலையில் சாப்பிட்டாயா?” எனக் கேட்டேன்.
“இல்லை” எனத் தலை அசைத்தாள்..
என்னிடம் இரண்டு சாக்லேட்கள் இருந்தது. ஒன்றை எடுத்துக் கடித்து விழுங்கு என அவளிடம் கொடுத்தேன். மேலும் குடிக்கத் தண்ணீர் கொடுத்தோம். தண்ணீர் குடித்த பின் மயங்கிவிட்டாள். அப்படியே ஒரு இடத்தில் படுக்கவைத்தோம். இவள் தலையை ஒரு மாணவி தன் மடியில் வைத்துக் கொண்டாள். மேலே மின் விசிறி முழு பலத்துடன் சுழன்று கொண்டிருந்தது.
மயக்கம் சாதாரணமாகத் தெரியவில்லை. உடல் அசைவு வித்தியாசமாக இருந்தது. தலை ஒரு புறமாக இழுத்தவாறு சென்றது.
ஆம்புலன்சை அழைக்க ஒரு மாணவனைப் பணித்தேன். ஒரு மாணவன் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தான். சில வினாடிகளில் கண்திறந்தாள். என்னிடம் இருந்த அடுத்த சாக்லேட்டையும் சாப்பிடச் சொன்னேன். உறித்து வாயில் போட்டுக் கொண்டாள்.
தொடைப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு விட்டதாகத் தெரியவில்லை. ஆனால் அதன் கடுமை சற்று தளர்ந்திருக்க வேண்டும்.
சற்று நேரத்தில் பார்த்தால் நான் கொடுத்த சாக்லேட் மேசையிலிருந்தது.
“ஏன்?
என்ன ஆச்சி?”
“சாப்பிட முடியவில்லையா?” எனக் கேட்டேன்..
“இந்த வகை சாக்லேட்டின் சுவை பிடிக்காது” என்றாளே பார்க்கலாம்..
எனக்குச் சிரிப்பதா?
அல்லது
அழுவதா? எனத் தெரியவில்லை..
அவளை என்ன செய்தால் தகும் என எண்ணினேன்.
அது இரத்த குளுக்கோஸ் அளவு குறைந்தால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள நான் வைத்திருந்த, இனிப்பும் உப்பும் கலந்த ஒரு வகை சாக்லேட்.
கொலை பட்டினியில் மயங்கிவிழுந்த இந்த நிலையிலும் அவளுக்கு சாக்லேட்டின் சுவை முக்கியமானதாகத் தெரிகிறது !!
சரி.. சுவை தெரிகிற அளவிற்கு உடல் நிலை நன்றாகத்தான் இருக்கிறது என மகிழவும் செய்தேன். காரணம் அவளுக்குக் கட்டாயம் மயக்கம் தெளியும் என நான் அறிவேன். ஆனால் மயக்கம் தெளிந்த பின் இவள் பழைய உடல் நிலையில் இருப்பாளா? என்ற பயம் எனக்கு இருந்தது. அவள் மயக்கமாக இருந்த போது அவளின் உடல் அசைவில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் என் இந்த சிந்தனைக்குக் காரணம். “நிரந்தர நோயாளியாகலாம் அல்லது உடல் ஊனம் ஆகலாம்” என நினைத்தேன்.
“சரி.. இவளுக்கு சாக்லேட் பிடிக்கவில்லை..
யாரிடமாவது இட்லி இருக்கிறதா?” எனக் கேட்டேன்.
ஒரு மாணவி மதிய சாப்பிட்டுக்காக வைத்திருந்த இட்லியை உடனே தந்தாள். ஒருத்தியின் மடியில் படுத்துக் கொண்டிருந்த இவளுக்கு ஒரு மாணவி இட்லியைப் பிட்டு ஊட்ட ஆரம்பித்தாள். வெற்றி கரமாக மூன்று இட்லிகளை விழுங்கினாள்.. தேவைக்குத் தண்ணீர் குடித்தாள்.
அத்தனையையும் பத்து நிமிடத்திற்குள் நடந்து முடிந்தது. அப்போது ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. மேலும் செய்தி அறிந்து என் சக ஆசிரியர்களும் இவளைப் பாக்க வந்தனர்.
இவள் எழுந்து உட்கார ஆரம்பித்தாள். இவளின் உடல் பிழிந்தெடுத்த கரும்பு சக்கை போல் காட்சியளித்தது.
பின்னர் எழுந்து நடக்க ஆரம்பித்தாள்..
“ஆம்புலன்ஸ் வேண்டாம்” என்றாள்..
சரி.. என நிம்மதி பெருமூச்சு விட்டேன்..
எதற்கும் அரைமணி நேரம் ஆம்புலன்ஸை காத்திருக்க வேண்டினேன்..
அடுத்துத் தேர்வு நடத்த வேண்டும். தாமதமாக வரும் இந்த மாணவர்களுக்காகவே சிறப்பாகக் கேள்விகளை உருவாக்கியிருந்தேன். சரியாக வகுப்பிற்குச் வராதவர்களுக்குக் கட்டாயம் கேள்வியே புரியாது. “வினாத்தாளைப் பார்த்ததும் மீண்டும் மயங்கி விடுவாளோ?” என்ற பயமும் என்னிடமிருந்தது. ஆனால் தேர்வு நல்லபடியாக முடிந்தது.
என் ஆய்வகத்திற்கு வந்து ஒரு இடத்தில் உட்கார்ந்தேன். அந்த சுருட்டை முடி மாணவி மயங்கி விழுந்தது நினைவில் வந்தவண்ணமே இருந்தது.
“ஏன் இப்படி?” எனச் சிந்தித்தேன். அவளை அழைத்தேன். வந்து சேர்ந்தாள்.
வரும் வழியில் புழுதி நிறைந்த சாலையில் மயங்கி விழுந்தால் என்ன ஆகும் தெரியுமா? என அவளிடம் கேட்டேன். கண்கள் விரிய என்னைப் பார்த்தாள். உன் பெற்றோரிடம் பேசவேண்டும் என்றேன்.
அவளின் அம்மாவைத் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டாள். பின்னர் நான் அவளின் அம்மாவுடன் பேசினேன்.
அவர்களிடம் சற்று கடுமையாக நடக்க முடிவெடுத்தேன். ஆனால் அவளின் குடும்பச் சூழ்நிலை சற்று வித்தியாசமாக இருந்ததை அறிந்தேன். அம்மாவின் உழைப்பில் இவள் படிக்கிறாள் எனத் தெரிந்தது. வேலைப் பளு காரணமாக அம்மாவிற்கு மகளைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை என்பதனை உணர்ந்தேன்.
அதனால் அமைதியாக அவளின் அம்மாவிடம் பேசினேன். உங்கள் மகள் காலையில் சாப்பிடவில்லை என்றால் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பாதீர்கள் எனக் கட்டளையிட்டேன். வகுப்பில் மயங்கியதால் நாங்கள் கவனித்துக் கொண்டோம். “நடந்துவரும் வழியிலோ அல்லது பேருந்திலோ மயங்கிவிழுந்தால் என்ன ஆகும் எனச் சிந்தித்தீர்களா?” எனக் கேட்டேன். அவளின் அம்மாவின் மனக் குமுறலை புரிந்து கொள்ள முடிந்தது.
“காலையில் சாப்பிட்டு விட்டுத்தான் பல்கலைக்கழகம் போகவேண்டும்” என அம்மா கூறியிருக்கிறார். ஆனால் “சாப்பாட்டைக் கட்டிக் கொடுங்கள். நான் பல்கலைக்கழகத்தில் வைத்துச் சாப்பிட்டுக் கொள்கிறேன்” என இவள் வற்புறுத்தி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாள். மேலும் அம்மாவிடம் அடம்பிடித்து பணமாகப் பெற்று பல்கலைக்கழகத்தில் உள்ள சிற்றுண்டிசாலையில் காலை உணவை வாங்கி சாப்பிடும் பழக்கமும் இவளிடம் இருப்பதைக் கண்டறிந்தேன்.
இந்த நிலையில் தோழியர்களுக்காகப் பேருந்து நிலையத்தில் காத்திருத்தல் மற்றும் அவர்களுடன் அரட்டை அடிப்பதில் பசி இருப்பது தெரியாமல் போகிறது. அடிக்கிற அரட்டையில் நேரம் போவதே தெரிவதில்லை. பின்னர் கால் கை இழுத்து வைத்துக் கொள்கிறது. அடிக்கடி கால் கை இழுத்து வைத்துக் கொண்டாலும் திருந்துவதில்லை. நிலைமை படிப்படியாக
மோசமாகி உடல் நிலையைப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. ஆனால் இவளிடம் தன் உடலைப் பற்றிய சிந்தனையே இல்லை. சிக்கலை உணர்வதும் இல்லை மற்றும் எது பற்றியும் கவலைப்படுவதும் இல்லை !!
இறுதியாக எலும்பும் தோலுமாக உடல் வலுவிழக்கிறது. இருப்பினும் கண் மைக்கும் ஒப்பனைக்கும் குறைவு இருக்காது. இந்த ஒப்பனைக்கான நேரத்தைச் சாப்பிடப் பயன்படுத்தலாம். அதையும் செய்வதில்லை என்பது வேதனையான உண்மை.
அன்று மாலை தன் தாயாரின் வற்புறுத்தலால் மருத்துவரைச் சந்தித்து வந்திருக்கிறாள். இனிமேலாவது இவளுக்குப் புத்தி வருகிறதா? எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தங்கள் செல்வங்களை அனுப்பும் பெற்றோர்களுக்கு இந்த கட்டுரை பயனுள்ளதாக அமையும். அதாவது காலையில் வீட்டில் இருந்து புறப்படும் உங்கள் பிள்ளைகளின் வயிற்றை நிரப்பி அனுப்புங்கள். ” சாப்பிடு” என அவர்களுக்கு
செல்ல ஒருவர் தேவைப்படுகிறது. பசி அறியா வயதில் உங்கள் பிள்ளைகள் உள்ளனர் என உணர்ந்து செயல்படுங்கள்…
பேராசிரியர் சி சுதாகர்…


