தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலக்கிய கலை மற்றும் இசை சங்கத்தின் உறுப்பினர்களுக்கான பொதுமக்குழு கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் பொதுக்குழு கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களை ஊக்குவிப்பது, நினைவுச்சின்னங்களை பாதுகாப்பாது, நூலகம் மற்றும் இளைஞர்களை வாசிப்பதில் ஊக்குவிப்பது குறித்து இந்த சங்கம் உந்துதலாக இருக்கும். இந்த சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் சேர்மனாகவும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், சார் ஆட்சியர், கூடுதல் ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், திருச்செந்தூர், கோவில்பட்டி வருவாய் ஆட்சியர், மக்கள் தொடர்பு அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்), மாவட்ட மைய நூலகர், எழுத்தாளர் சோ.தர்மன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அறிவித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி பேசுகையில், ஏப்ரல் 21ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை தூத்துக்குடியில் 4வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்த புத்தகத்திருவிழாவில் கடைசி 4 நாட்கள் நெய்தல் திருவிழாவும், உணவுத்திருவிழாவும் நடைபெறும். புத்தகத்திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் பேசும் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த புத்தக கண்காட்சியிலும் அது தொடரும். அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கலைகள், நிலம், மக்கள் வாழ்வு சார்ந்த புகைப்படங்களை கண்காட்சிப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் புகைப்பட போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 16ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். ஒவ்வொருவரும் 5 புகைப்படங்களுக்கு மிகாமல் அனுப்பலாம். இதற்காக ஒரு தேர்வுக்குழு உருவாக்கப்படும். இந்த குழு புகைப்படங்களை தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட முதல், இரண்டாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். மேலும் கோவில்பட்டியில் உள்ள கிரா நினைவிடத்தில் கலை, இலக்கியம், விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு இடம் தயாராக உள்ளது. அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக இசை கலை இலக்கியம் இதற்காக சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எழுத்தாளர்கள் சோ.தர்மன், முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளார்கள். மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு இங்கு உள்ள மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், நம்முடைய கலைகள், இலக்கியங்கள், வாழ்வியல் முறைகள் இவற்றைப்பற்றி இன்னமும் ஆழமாக புரிந்து கொள்வதற்கும், இங்கே உள்ள எழுத்தாளர்களை கொண்டாடக்கூடிய ஒரு சங்கமாக செயல்படும். ஆய்வாளர்களுக்கு உதவி செய்யக்கூடிய வகையில் இந்த சங்கம் செயல்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், எழுத்தாளர்கள் சோ.தர்மன், முத்தாலங்குறிச்சி காமராசு, மாவட்ட நூலகர் ரெங்கநாயகி, மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியர் (வளர்ச்சி) பி.பி.ஜாண், வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், பிஆர் நவீன்பாண்டியன், இசை பள்ளி ஆசிரியை சிவகாமி, உதவியாளர் மோகன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


