“மணலை வருத்துக்கிட்டு சண்டைக்கு வருவா?”
“இந்த வார்த்தை எப்படி வந்திச்சு தெரியுமா?” ஆச்சி கேட்டவுடன் ராசுக்குட்டி “எதுக்கு ஆச்சி?” என்று கேட்டான்.
“சொல்றேன். இன்னைக்கு ராத்திரி எல்லோரும் சாப்பிட்டுட்டு தட்டடிக்கு வாங்க. நான் சொல்றேன்”. என்று கூறி விட்டு ஆச்சி மாட்டை அவிழ்த்துக்கொண்டு தோட்டத்துக்கு சென்று விட்டாள்.
அன்றைக்கு கார்த்திகை தீப திருநாள். எனவே ராத்திரி கதைகேட்க முடியுமா? என்பது புரியவில்லை. எனவே ஆச்சியோடு தானும் மாட்டை ஓட்டிக்கொண்டு தோட்டத்துக்கு சென்றான்.
“என்ன லே ராசுக்குட்டி என் பின்னால வர. உனக்கு வேறே வேலை இல்லையா?” என்றாள் ஆச்சி.
“எனக்கென்ன வேலை. இன்னைக்கு மணலை வருத்துக்கிட்டு சண்டைக்கு வருவான்னு சொன்னீயே. அந்த கதை கேட்காம போவ மாட்டேன்” என பிடிவாதம் பிடித்தான்.
ஆச்சி சிரித்துக்கொண்டே அவனை கூட்டிக்கொண்டு வயற்காட்டுக்கு சென்றாள்.
ஒரு ஓரத்தில் மாட்டை மேச்சலுக்கு விட்டாள். தொடர்ந்து அங்குள்ள வேப்பமரத்தடிக்கு வந்தாள். தான் கொண்டு வந்த நீர் பானத்தினை குடித்தாள். ராசுக்குட்டிக்கும் கொடுத்தாள்.
நீர் பானம் என்பதை நீத்தண்ணீ என்பார்கள். சோறு பொங்கி, அதன் பின் தண்ணீர் ஊற்றி மறுநாள் கஞ்சி குடி க்கும் போது சேர்ந்திருக்கும் தண்ணீர் தான் நீத்தண்ணீ. நல்ல ஆகாரம் , ஒரு சொம்பு குடித்தால் நல்ல வயிறு பசி தாங்கிக் கொள்ளும். அதோடு மட்டுமல்லாமல் வெண்கல சொம்பு கும்பாவில் வைத்து குடித்தால் நோயெல்லா£ம் தீர்ந்து போய் விடும். எனவே கிராமத்தில் வெண்கலத்தில் இதுபோன்று நீதண்ணீர் குடிப்பது வழக்கமாக இருந்தது.
நீத்தண்ணீர் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ராசுக்குட்டிக்கு கதை கேட்க வேண்டும்.
“சரி கதை சொல்லு ஆச்சி”. என்று ஆச்சியிடம் உரிமையோடு கேட்டான் ராசுக்குட்டி.
ஆச்சி ஆரம்பித்தாள்.
“நம்ம ஊருல வாயாடி ஒருத்தி இருந்திருக்கா. ராத்திரி பகலுன்னு யாருகிட்டேயானாலும் ஒருவர் கிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருப்பா.
இவக்கிட்டே சண்டை போட எல்லாரும் பயந்தாவ”.
கதை கேட்க ஆச்சி அருகில் பெரிய கருங்கல்லை உருட்டி கொண்டு வந்து அமர்ந்து கொண்டான்.
தொடர்ந்து ஆச்சி பேச ஆரம்பித்தாள்.
“ஒரு நாளு தெரு புறாவும் கூடினாவ. இவக்கிட்டே பேசுனாதானே சண்டைக்கு வாறா. இனிமே யாரும் இவகிட்டபேசகூடாதுன்னு முடிவு பண்ணினாவ. எல்லோரும் இவளை பாத்தவுடனே ஒதுங்கி போவ ஆரம்பிச்சாவ.
கிட்டத்தட்ட 1 வாரம் இவளும் யாருக்கிட்டேயாவது சண்டை இழுக்கனுமுன்னு சுத்திக்கிட்டு அலைஞ்சா. ஆனால ஒருத்தரும் இவக்கிட்ட பேசலை. இதனால மனம் உடைஞ்சு போனா.
ஒரு நாளு. நடுத்தெருவுக்கு வந்தா. நாலு அடுப்பு கட்டியை கூட்டினா. அப்புறம் ஒரு பெரிய இரும்பு சட்டையை தூக்கிட்டு வந்து அது மேலே வச்சா. நாலு பக்கமும் தீ மூட்டினா. அப்புறமா மணலை அள்ளி சட்டியில போட்டு வறுக்க ஆரம்பிச்சா.
அவளும் காலையில இருந்து வறுக்க ஆரம்பிச்சா , தெருவில உள்ள எல்லோருக்கும் என்ன ஏதுன்னு கேட்க ஆசைத்தான். ஆனால அவக்கிட்டே போயி பேச பயம். எல்லாரும் ஒதுங்கி போனாவ. மதியம் ஆச்சி. அப்போ ஒரு ஆச்சி அந்த வழியா வந்தா. இவ நடுத்தெருவில என்னமோ பண்ணிக்கிட்டு இருக்காளேன்னு “என்ன லா. என்ன பண்ணிக்கிட்டு இருக்கன்னு கேட்டு இருக்கா.
அவ்வளவு தான் இது தான் சமயமுன்னு “உன் தாலியை போட்டு வருக்கேன் கிழவி” ன்னு சொல்லியிருக்கா.
ஆச்சிக்கு உடனே கோபம் வந்தது, “என் தாலியை போட்டு நீ ஏன் மூளி வருக்கன்னு பதில் கேள்வி கேட்க. இரண்டு பேரும் கட்டிட்டு உருண்டுட்டாளுவ. அப்புறம் இரண்டு பேரையும் சமதானம் படுத்தவே முடியலை. சண்டை இரண்டு மணி நேரம் நடந்திருக்கு.
இதனாலத்தான் யாரும் முண்டுகட்டிக்கிட்டு சண்டைக்கு வந்தா. இங்க பாரு மணலை வருத்துகிட்டு சண்டைக்கு வாரான்னு ஒரு பழமொழியே வந்துட்டு” என ஆச்சி சொல்லி முடித்தாள்.
“ஓ. இது தான் காரணமா?. இது தான் மணலை வருத்துக்கிட்டு சண்டைக்கு வர்றதா?. கைத்தட்டி சிரித்தான்.
ஆச்சி தொடர்ந்து பொக்கை வாயை காட்டி சிரித்தாள்.
“சரி. ஏலே ராசுக்குட்டி இன்னைக்கு கார்த்தீயளுல. நீ. சூந்து கட்டி விளையாட போவலையா?” என கேட்டாள் ஆச்சி.
அதற்குள் ராசுக்குட்டி நண்பர்கள் எல்லாம் வந்து விட்டார்கள். “ஏலே ராசுக்குட்டி வாலே சூந்து கட்ட போவும்” என்றனர்.
கார்த்திகை பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது கொழுக்கட்டை தான். அதுவும் பனை ஓலைக்கொழுக்கட்டை. அதை நினைத்தாலே ராசுக்குட்டிக்கு எச்சில் ஊறியது.
ஆச்சி தான் கார்த்திகை பற்றி கதை சொல்லுவாள், “ஏலேய் பெருமான் ஏழடி நிலம் கேட்டு அளந்தாரே. அந்த மகாபலி ராஜா கார்த்திகை அன்னைக்கு மக்க மகிழச்சியா இருக்காவுளான்னு பாக்க வருவாவ. அந்த நேரம் நாம தீபம் பொறுத்தி வச்சி நம்ம மகிழ்ச்சியை காட்டணும். அப்போதான் மகாபலி ராஜா சந்தோஷப்படுவாவ”. என்பாள்.
இந்த காலத்தில் தீபம் ஏற்றவே “கிலிக்கான் சட்டி” என்று சொல்லப்படும் மண்ணால் செய்யப்பட்ட கிண்ணம் எல்லாருடைய வீடுகளிலும் தீபமாக எறிந்து கொண்டிருக்கும். வீடுகளில் கதவுகளில் அரிசி மாவையும், மஞ்சளையும் கரைத்து அதில் கோலம் வரைவார்கள். ஆமணக்கு இலையை எடுத்து அதில் நடுப்பகுதியை ஐந்து விரல்போல் வைத்து விட்டு மற்றதை எடுத்து விடுவார்கள். அது நட்சத்திரம் போல இருக்கும். அதை வைத்து மாவில் மூழ்க வைத்து பின் கதவில் அச்சு போல் அடிப்பார்கள். அது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். இந்த வேலையை எல்லாம் மிக சந்தோசத்துடன் செய்வான் ராசுக்குட்டி.
ராத்திரியானால் பெண்கள் எல்லோரும் அமர்ந்து கருப்பட்டி மூலம் கொழுக்கட்டை தயார் செய்வார்கள். இந்த கொழுக்கட்டையைப் பனை ஓலை கொண்டு வேக வைப்பார்கள். இது மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும். கார்த்திகைத் திருவிழா என்றாலே பனங்கருப்பட்டி மற்றும் பனை ஓலையில் தயார் செய்யும் கொழுக்கட்டைக்கு மிகவும் வரவேற்பு இருக்கும்.
அதே சமயத்தில் ராசுக்குட்டி ஆச்சி சொன்னா மாதிரி சூந்து விளையாட ஆரம்பித்து விடுவான். இதற்காகத்தான் நண்பர்கள் கூடுவார்கள்.
சிறுவர்கள் சூந்து என்னும் ஒரு வகையான தீப்பந்த விளையாட்டு வீர விளையாட்டாகும். இந்த சூந்து தயாரிக்க பனையில் இருந்து காய்ந்து கீழே விழும் “அலவிரல்” என்னும் விறகை கொண்டு கரி மருந்து செய்வார்கள். முதலில் அலவிரல் விறகை பக்குவப்படுத்திக் கொள்வார்கள்,
பின் பூமியில் சுமார் 2 அடிக்கு ஒரு குழி தோண்டுவார்கள். அந்த குழி 1க்கு 1க்கு என்ற அடி விகிதத்தில் நீளம் அகலம் இருக்கும். அதில் காய்ந்த அலவிரலை வெட்டி அடுக்குவார்கள். பின் அதில் நெருப்பு மூட்டுவார்கள். அந்த நெருப்பு அலவிரலை எரித்து முடித்த பின் அருகில் உள்ள செடி, கொடியை அதன் மேல் போட்டு மண்ணை போட்டு மூடி வைத்து விடுவார்கள். மறு நாள் அந்த மண்ணை தோண்டி பார்த்தால் அங்கே பக்குவப்படுத்தப்பட்ட கரிக்கட்டை கிடைக்கும். அந்த கரிக்கட்டையை எடுத்து அம்பியில் வைத்து மையாக அரைப்பார்கள்.
சிலர் கரிக்கட்டையோடு ஊமத்தங்காயையும் வைத்து அரைப்பார்கள். இந்த ஊமத்தங்காய் சேர்ந்தால் சூந்து விளையாடும் போது பொறி மிக அதிகமாகப் பறக்கும். ஆனால் அந்த தீ பொறி ஆள்கள் மீது விழுந்தால் பொத்து(வெந்து)போய் விடும். ஆனாலும் இந்த வீர விளையாட்டில் அந்த தீ பொறி தன் உடல் மீது விழாமல் இருக்கச் சவாலாகச் சூந்தைச் சுற்றுவார்கள்.
அதன் பின் கரி மருந்தைத் துணியில் மிகவும் இறுக்கமாகக் கட்டுவார்கள். பனையில் இருந்து எடுக்கப்படும் பச்சை மட்டையை இரண்டு அடி நீளத்துக்கு ஈடிக்கி போல் தயார் செய்வார்கள். அதை மூன்று பிரிவாக கிழித்து, அதன் நடுவில் அந்த கரி மருந்து அடங்கிய துணியை வைத்து, அந்த மூன்று பக்க இடுக்கியில் மிகவும் இறுக்கமாகக் கட்டுவார்கள். அதன்பின் மறு ஓரத்தில் பனை நாரை கொண்டு நீளமாகக் கட்டுவார்கள். தற்போது சூந்து தயாராகி விட்டது.
இதை நாகரீகமாகச் சொன்னால் ராக்கெட் வெடி போல இருக்கும். ஆனால் கார்த்திகை ராக்கெட் வெடியைத் தலைக்கு மேலே தூக்கி சுற்றி வீசுவார்கள் ராசுக்குட்டியும் அவன் நண்பர்களும். ஆனால் இந்த சூந்து விளையாட்டில் இதை தலையைச் சுற்றியும் வலது புறமும், இடது புறமும் அப்படியும், இப்படியும் ஆட்டும் போது ஏதோ பெரிய தீ பந்து விளையாடுவது போல இருக்கும். வலது இடது என அந்த விளையாட்டுப் பொருளைச் சுற்றுபவரைச் சூழ்ந்து வருவதால் இது “சூழ்ந்து” என்று அழைக்கப்பட்டு இதுவே காலப்போக்கில் “சூந்து” என்று மருவி இருக்க வேண்டும்.
இரவு வேளையில் அந்த சூந்துவில் தணலை வைத்து பின் தலைக்கு மேல் வைத்துச் சுற்றுவார்கள். அப்போது பொறிப்பொறியாக விழும். அந்த பொறி சிலர் மீது பட்டு வெந்து விடும். கையில் வைத்துச் சுற்றும் போது கைகள் எல்லாம் பொத்து போய் பொக்களமாய் ஆகி விடும். ஆனாலும் மனம் தளராமல் வாலிபர் இந்த சூந்து விளையாட்டை விளை யாடுவார்கள். கார்த்திகை இரவு தினத்தில் யார் சூந்து விளையாட்டில் மிக அதிகமாகப் பொறி விழுகிறது என்று பெரியவர்கள் வந்து ஆய்வு செய்வார்கள்.
அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பார்கள். கிராமத்துப் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களும் தங்களது சகோதரர்களிடம் இருந்து அந்த சூந்தை வாங்கி தாங்களும் தலைக்கு மேலாகச் சுற்றுவார்கள்.
இந்த சூந்து விளையாட்டு முடிந்தவுடன் அந்த முக்காலி போன்ற கம்பை பனங்கிழங்கு விளைய வைக்கும் இடத்தில் நாட்டி வைத்து விடுவார்கள். அப்படி நாட்டி வைத்தால் கிழங்கு நல்ல பருமனாக முளைக்கும் என்று மக்களுக்கு ஒரு நம்பிக்கை. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் சுகாதாரமாக அந்த பொருள்கள் செல்ல வேண்டும் என்று கூட நமது முன்னோர்கள் செய்து இருக்கலாம். குறிப்பாக கார்த்திகை மாதம் நிறைய கொசு கிராமங்களையும் வயல் வெளியையும் சுற்றி வரும் அந்த சமயம் நெருப்பு பொறியை சுற்றும் போது கொசு உள்ளே பறந்து வந்து எரிந்து விடும். இதனால் கொசுவால் உண்டாகும் காய்ச்சல் குறையும் என்பது தான் உண்மை. இது நமது தமிழர் பண்பு. தமிழர் மருத்துவம்.
இந்த விளையாட்டு விளையாடிக்கொண்டிருககும் போதுதான் ஒருவன் வந்தான். ஏலே ராசுக்குட்டி. ஏம்ல மடையன் மாறி இருக்க. இந்த சூந்தை ஒழுங்கா சுத்துலையே” என்றான்.
அவ்வளவு தான் ராசுக்குட்டிககு கோபம் வந்தது. “என்னை பார்த்து நீ எப்படி மடையன்னு சொல்லலாம்” என பதிலுக்கு கேட்க, இருவருக்கும் சண்டை வந்து விட்டது.
அப்போது ராத்திரி வீட்டுக்கு வரவில்லையே என ராசுககுட்டியை தேடி ஆச்சி அவ்விடத்துக்கு வந்து விட்டாள்.
“ஆச்சி. இவன் என்னை மடையன்னு சொல்லுதான்”. என ராசுக்குட்டி ஆச்சியிடம் அவலாதி சொன்னான்.
ஆச்சி சிரித்தாள். “மடையன்னு தானே சொன்னான். அதுக்கு போய் நீ. சண்டை போடுறீயே. மடையன்னா நீ புத்தி இல்லாதவன்னு நினைக்க. ஆனால் மடையன்னு சொன்னா அவன் பெரிய தியாகி” என்றாள் ஆச்சி.
“என்ன ஆச்சி.சொல்ற?”
“ஆமாம். இன்னைக்கு சாமி கும்பிட்டுட்டு கொழுக்கட்டை தின்னுக்கிட்டே மடையன் கதை சொல்லுதேன். நீ. சண்டை போடாம வீட்டுக்கு வா” என அழைத்தாள் ஆச்சி.
ஆனாலும் ராசுக்குட்டிக்கு கோபம் தான். ஆனாலும் ஆச்சி பின்னால் மந்திரித்தவன் போல வந்தான்.
ராத்திரி வந்தது.
கொழுக்கட்டை சாப்பிட்டுக்கொண்டே தட்டடியில் ஆச்சி அருகே அமர்ந்து இருந்தான்.
¬
ஆச்சிமடையன் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.
( ஆத்தோரக்கதைகளை ஆச்சி தொடர்ந்து சொல்லுவாள்)


