குரங்கணி செங்கல் சூளையில் இரவு காவலாளி தூக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவத்தில் கடிதத்தை மீட்டு ஆழ்வார்திருநகரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூர் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் ஐயப்பன்(52) ஏரல் அருகே உள்ள குரங்கணியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு அழகம்மாள் என்ற மனைவியும் மாரி சங்கர் (24), இசக்கி ராஜா (18) என்ற மகன்களும் உள்ளனர். தற்போது ஐயப்பன் ஏரல் அருகில் உள்ள அம்மாள் தோப்பில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில், ஐயப்பன் இரவு காவலராக பணிபுரியும் குரங்கணியில் உள்ள செங்கல் சூளைக்கு நேற்று காலை பணியாளர்கள் வந்து பார்த்தபோது அங்கு தூக்கிலிட்ட நிலையில் ஐயப்பன் இருந்துள்ளார்.
இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்திற்கு செங்கல் சூளை பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், ஆழ்வார்திருநகரி சப் இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று ஐயப்பன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஐயப்பன் எழுதி வைத்த கடிதத்தையும் மீட்டு, குடும்ப பிரச்சனை, கடன் அல்லது அவர் பணி புரியும் செங்கல் சூளையில் ஏதும் பிரச்சனையா என்பது குறித்து தீவிரமாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குரங்கணி செங்கல் சூளையில் இரவு காவலாளி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


