தூத்துக்குடி சிவன் கோவிலில் சிவராத்திரியையொட்டி 216 சிவலிங்க பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கரா ராமேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுவாமிக்கு நேற்று மாலை சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்கார தீபாரானை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 216 சிவலிங்க பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் சிறுவர்களுக்கான இந்து சமய சான்றோர்கள் மாறுவேடப்போட்டி, தேவாரப்பாடல் இசைப்போட்டி, பரதநாட்டிய போட்டிகள் நடந்தன. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சனிபிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி ஆகிய 2 நிகழ்வுகள் ஒரே நாளில் வருவது மிகவும் சிறப்பானதாகும். சனி பிரதோஷத்தை முன்னிட்டு தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் நந்தி பகவான் மற்றும் சுவாமிக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், பழங்கள் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் தமிழ்ச்செல்வி, தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா், ஆன்மிக அன்பா்கள் செய்திருந்தனா்.


