கலீலியோ கலிலி இத்தாலிய ஒலிப்பில்: கலிலேயோ கலிலே; 15, பிப்ரவரி 1564 – 8, சனவரி 1642), ஓர் இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் ஆவார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். கலீலியோ “நோக்கு வானியலின் தந்தை”, “நவீன இயற்பியலின் தந்தை”, “நவீன அறிவியலின் தந்தை” என்று பலவாறாகப் பெருமையுடன் அழைக்கப்படுகிறார். தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களைக் (அவரது புகழைச் சொல்லும் வகையில் கலிலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன) கண்டுபிடித்தல், சூரியப்புள்ளிகளை நோக்குதல் மற்றும் ஆராய்தல் ஆகியவை நோக்கு வானியலுக்கு இவர் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும். கலீலியோ பயனுறு அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஈடுபட்டு, மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைகாட்டி உட்பட பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்.
கலீலியோவின் சூரியமையக் கொள்கை அவரது வாழ்நாளில் பிறரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நிறைய வானியலாளர்கள் இந்தக் கோட்பாட்டை எதிர்த்தனர். அக்காலத்தில், பெரும்பாலான வானியலாளர்கள் புவிமையக் கொள்கையையோ, தைக்கோனிக் அமைப்பையோ ஏற்றுக் கொண்டிருந்தனர். கலீலியோ பின்னர் தனது “இருவகை முதன்மை உலகக் கண்ணோட்டம் சார்ந்த உரையாடல்கள் ” என்ற புத்தகத்தில் அவருடைய சூரியமையக் கொள்கைக்கு நிறைய சான்றுகளை அளித்தார். ஆனால் அது திருத்தந்தை எட்டாம் அர்பனைத் தாக்குவது போல் தோன்றியதால், புலன் விசாரிக்கப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். கலீலியோ தன் இறுதிக் காலம் முழுவதையுமே வீட்டுச்சிறையிலேயே கழித்தார். கலீலியோ இப்படி வீட்டுச்சிறையில் இருந்தபோது தான் தன் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றும் இறுதிப் படைப்புமான இரண்டு புதிய அறிவியல்கள் என்ற நூலை எழுதினார். தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய, தற்போது இயங்கியல், பொருட்களின் வலிமை என்று அறியப்படும் துறைகளைப் பற்றிய ஆய்வுகளை இந்த நூலில் தொகுத்து அளித்தார்.


