தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் டிசம்பர் 23ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி பகல் பத்து திருவிழா தொடங்கியது. இராப்பத்து திருவிழாவில் முதல் நாளான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவதிருப்பதி கோயில்களில் சயன திருக்கோலத்தில் எழுந்தருளி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரையும் மற்ற கோயில்களில் இரவு 7 மணி வரையும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் கோயிலில் இரவு 7 மணிக்கும் தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோயிலில் இரவு 11 மணிக்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் நள்ளிரவு 12.30 மணிக்கும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இதுவரை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் ஆழ்வார்திருநகரி கோயிலில் இரவு 7 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என கோயில் நிர்வாகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜகவினர், வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் கால காலமாக நடைபெற்று வரும் சுவாமி தரிசன நேரத்தை மாற்றினால் டிசம்பர் 29ம் தேதி உண்ணாவிரத போராட்டமும் 30ம் தேதி முற்றுகை போராட்டமும் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இன்றையதினம் ஆழ்வார்திருநகரியில் வைத்து பாஜக மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று காலகாலமாக பின்பற்றி வரும் தரிசன நேரத்தையும் சொர்க்க வாசல் திறக்கும் நேரத்தையும் மாற்றி அமைக்க கூடாது. பக்தர்களின் எதிர்ப்பை மீறி நேரத்தை மாற்றி அமைத்தால் டிசம்பர் 29ம் தேதி உண்ணாவிரத போராட்டமும் 30ம் தேதி முற்றுகை போராட்டமும் நடத்தப்படும் என்றார்.


