தாமிரபரணி மீது பற்று கொண்ட நான், தாமிரபரணி கரை பண்பாட்டை வெளிக்கொண்டு வரவும், நதியை காப்பாற்றவும் மதுரை உயர்நீதி மன்றத்தின் கதவுகளை தட்டினேன். அதை பற்றிய விவரம் வருமாறு.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே தாமிரபரணி ஆறு வறண்டு கிடக்கும் போது அங்கே கட்டிடங்களை கண்டோம். ̃ அவை கற்கள் மற்றும் செங்கல்களால் கட்டப்பட்டிருந்தது. இது குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பேராசிரியர் முனைவர் சுதாகரன் தகவல் கூற , அங்கே சென்று பார்த்தோம். இந்த இடம் ஒரு குட்டி துறைமுகம் போல எங்களுக்கு தோன்றியது. அங்கு கிடந்த பாறைகளில் படகுகளை கட்டி போட கற்களில் சிறுதுளைகள் போடப்பட்டிருந்தது. இது கொற்கை துறைமுகத்தின் ஒரு பகுதியாக இருந்து இருக்கலாம். எனவே இதை பற்றி பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டோம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இதற்கான கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பேச லக்னோ பழைய பீர்பால் ஆய்வகத்தில் இருந்து ஆய்வாளர் மொர்த்தகாய் வருகை தந்திருந்தார்.
அவர் இங்குள்ள செங்கல்கள் 400 வருடம் பழமையானது என ஆய்வில் தெரியவந்தது என்றார். அங்கே வருகை தந்தை பலரும் தங்களது கருத்துகளை கூறினர். இவ்விடத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என நான் மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்குதொடர்ந்தேன். இந்த வழக்குக்காக ஆய்வுக்கு வந்த அதிகாரி ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர், இவ்விடத்தில் தண்ணீர் இருக்கும் காரணத்தினால் ஆய்வு செய்ய இயலாது என்று கூறி விட்டார். ஆனால் தற்போது கொற்கை துறைமுகத்தினை அறிய கடல் சார் ஆய்வு செய்து வருவதால் இவ்விடத்திலும் தண்ணீர் உள்ளே உள்ள கட்டிடங்களை நவீன தொழில் நுட்பத்துடன் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதன் படி நவம்பர் 2012 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் ஆய்வாளர் ஆசைத்தம்பி மற்றும் ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் ஆய்வு செய்து சென்றுள்ளனர். விரைவில் இங்கு ஆய்வு துவங்கும் என நம்பிக்கையுடன் உள்ளோம்.
தாமிரபரணி ரகசியங்களில் முக்கிய ரகசியங்களாக விளங்குவது ஆதிச்சநல்லூர். ஆதிச்சநல்லூருக்கும் எனக்கும் நிறைய தொடர்ப்பு உண்டு. குறிப்பாக எனக்கு தமிழக அரசு விருது கிடைக்க காரணமே ஆதிச்சநல்லூர் முன்னேற்றத்திற்காக நான் உழைத்த உழைப்பு என்றால் அது மிகையாகாது. எனக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி 2019 ஆம் ஆண்டு தமிழ் ரத்னா சிறப்பு விருது, 2020 ஆம் ஆண்டு தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது கிடைத்தது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எனக்கு வழங்கினார்.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுவது ஆதிச்சநல்லூர். 1876 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் முதன் முறையாக அகழாய்வு பணிகள் நடந்தது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி தான் இந்தியாவிலேயே முதல் முதலில் நடந்த ஆய்வு பணியாகும். 1876 இல் ஜெர்மன் நாட்டு அறிஞர் டாக்டர் ஜகோர், இந்தியாவிலேயே முதல் ஆய்வை ஆதிச்சநல்லூரில் நடத்தினார். இங்கு கிடைத்த பொருள்களை ஜெர்மன் நாட்டில் உள்ள பெர்லின் நகர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்தார். அவர் எந்த ஊருககு சென்றாலும் அதை பற்றி நூல் எழுதி வெளியிடுவார். ஆனால் ஆதிச்சநல்லூர் குறித்து அவர் எழுதவில்லை. இது ஒரு வகையில் தமிழர்களுக்கு துரதிஷ்டமே. அதன் பிறகு சிறு சிறு ஆய்வுகள் ஆதிச்சநல்லூரில் நடந்தது.
1901 ல் திருச்செந்தூர் ரயில் பாதை அமைக்கும் போது ஆதிச்சநல்லூரில் மிக அதிகமான புதைப்பொருள்கள் கிடைத்தது. எனவே இந்த பகுதியில் உள்ள மக்கள் இங்கு புதையல் உள்ளது என கடப்பாறையுடன் களம் இறங்கி தேட ஆரம்பித்தனர். இதனால் இந்திய தொல்லியல் துறையினர் விழித்துக்கொண்டனர். இவ்விடத்தில் உள்ள 114 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக வரையறை செய்தனர். இதனால் இதற்குள் யாரும் நுழைந்து பொருள்களை எடுத்தாலே அல்லது தோண்டினாலே அவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சட்டம் இயற்றினர்.
1889ம் ஆண்டு முதல் 1905-ம் ஆண்டு வரையிலும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் ரியா என்பவர் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி செய்தார். அப்போது அவர் இங்கு முதுமக்கள் தாழிகளுடன் தங்கம், வெண்கலம், இரும்பு போன்றவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்கள், ஆயுதங்கள் போன்ற 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரியவகை பொருட்களை சேகரித்தார்.
அவை கி.மு.1800-ம் ஆண்டு முதல் கி.மு. 1600-ம் ஆண்டு வரையிலும் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் என்பது தெரியவந்தது. அந்த சான்றுகள் மூலமாக தமிழர்கள் சுமார் 3800 ஆண்டுகளுக்கு முன்னரே நாகரிகத்தில் சிறந்து விளங்கினர் என்பதை உலகிற்கு பறைசாற்றியது. இது சம்பந்தப்பட்ட பொருள்கள் எல்லாம் சென்னையில் அருங்காட்சியகத்தில் உள்ளது. இங்கு கிடைத்த பொருள்களை அலெக்ஸாண்டர் ரியா பட்டிலிட்டுள்ளார். ஆனாலும் கூட விரிவான தகவல் எதுவும் அவர் எழுதி வைக்கவில்லை. இது நமககு இரண்டாவது துரதிஷ்டமாகும். ஆனால் அவர் குறிப்புகளை மூல நூலாக வைத்து தான் பல நூல்கள் வெளிவந்தது. அதில் “சாத்தான்குளம் ராகவன் எழுதிய ஆதித்தநல்லூரும் பொருநை வெளி நாகரீகமும்” என்ற தமிழ் நூல் முதன்மையானது. இந்த சமயத்தில் ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஆய்வாளர்கள் மத்தியில் இருந்தது. அதற்கு முயற்சி செய்தும் . நடைபெறவில்லை.
1920 ல் சிந்து சமவெளி ஆய்வு நடைபெறுகிறது. இந்த ஆய்வை மேற்கொண்ட வங்க தேசத்து அறிஞர் பானர்ஜி, “சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தைய நாகரீகம் தாமிரபரணி கரை நாகரீகம்” என ஆதிச்சநல்லூர் நாகரீகத்தின் பெருமையை ஆங்கில நூல் ஒன்றில் கட்டுரை எழுதினார். இதனால் உலகமே ஆதிச்சநல்லூரை உற்று நோக்கியது. ஆனாலும் பெரிய அளவில் முன்னேற்றமில்லை. இது நமக்கு மூன்றாவது துரதிஷ்டம்.
தமிழக தொல்லியல் கடந்த 2004ம் ஆண்டு தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் தியாக சத்தியமூர்த்தி தலைமையிலான குழுவினர் ஆதிச்சநல்லூரில் 10க்கு 10 மீட்டர் என்ற சைஸ்ஸில் அகழாய்வு செய்தார். அப்போது இங்கு கண்டறியப்பட்ட அரியவகை பொருட்களை சேகரித்து சென்னை தலைமை செயலகம் அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். ஆனால் அதன் பிறகு அகழாய்வு அறிக்கையோ அல்லது அருங்காட்சியகமோ அமையவில்லை. இதனால் நான்காவது முறையாக தமிழர்களுக்கு துரதிஷ்டமானது.
இதற்கிடையில் 1986 ல் தூத்துக்குடிமாவட்டம் பிரிந்து 2001 ல் 25 ஆம் ஆண்டு விழாகொண்டாடப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சி தலைவராக இருந்தவர் ஆஷிஷ்குமார். இவர் ஆதிச்சநல்லூரில் நுழைவு வாயில், புளியங்குளத்தில் முதுமக்கள் தகவல் தாழி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இந்த மையத்தில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருள்களை காட்சி படுத்த வேண்டும் என்பது அவரின் ஆவல் . ஆனால் முதுமக்கள் தகவல் தாழி மையம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் கனவு நிறைவேறவில்லை. ஆதிச்சநல்லூர் ஆர்வலர்களின் கனவும் நிறைவேறவில்லை.
2010 இல், அதாவது சாத்தான்குளம் ராகவன் நூல் வெளியாக 30 வருடங்கள் கழித்து நான்(முத்தாலங்குறிச்சி காமராசு) “ஆதிச்நல்லூர் ஆய்வுகள்” என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டேன். இந்த நூலில் ஆதிச்சநல்லூரை பற்றி எனக்கு கிடைத்த தகவல், பத்திரிக்கை செய்திகள், சாத்தான் குளம் ராகவன் நூலின் மேற்கோள் , நெல்லையில் நடந்த கருத்தரங்கு ஆகியவற்றை மேற்கோள் காட்டி எனது நூலை எழுதினேன் . காவ்யா பதிப்பகம் வெயிட்டு இருந்தது. ஆனாலும் மீண்டும் அகழாய்வு துவங்க நடவடிக்கை இல்லை. இதுவும் தமிழர்களின் துரதிஷ்டம் தான்.
காலங்கள் கடந்தது. யார் ஆதிச்சநல்லூர் வந்தாலும் என்னை தேடி வர ஆரம்பித்தனர். நானும் உடன் சென்றேன். அந்த சமயத்தில் அங்குள்ள முதுமக்கள் தாழிக்குள் நானே உட்கார்ந்து வருவோரிடம் காட்டி வந்தேன். அதுபோலவே தினத்தந்தியில் “ஆதிச்சநல்லூர் கீழடி மண் மூடிய மகாத்தான நாகரீகம்” என்ற தொடரின் ஆசிரியர் அமுதன் அய்யா வந்தார். அவருடன் தினத்தந்தி பொறுப்பாசிரியர், எழுத்தாளர் நெல்லை கவிநேசன் ஆகியோர் வந்தனர். அவர்களுக்காக நான் முதுமக்கள் தாழிக்குள் அமர்ந்து காண்பித்தேன். அப்போது அமுதன் அய்யா ஆதிச்சநல்லூர் புகழ்பாடிய பெருமக்கள் என தலைப்பிட்டு, அதில் எனது போட்டாவை வெளியிட்டு, என்னை பற்றியும் எழுதியிருந்தார்.
எனக்கு இந்த செயல் உற்சாகத்தினை அளித்தது. ஆனாலும் “ஆதிச்சநல்லூருக்கு நான் பெரிதாக என்ன செய்தேன்” என்று நினைக்க தோன்றியது. இந்த வேளையில் தான் மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி என்னை சந்தித்தார். “ஆதிச்சநல்லூர் குறித்து மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடருவோம்” என கூறினார். என்னை மனுதாரராக வைத்து 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தோம்.
ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆதிச்சநல்லூர் பரம்பை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். 2004 ல் நடந்த அகழாய்வு அறிக்கையை வெளியிடவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அதன் பயனாக தொடர்ந்து ஆதிச்சநல்லூர் பரம்பை சுற்றி சுமார் 2 கோடி மதிப்பில் வேலி அமைக்கும் பணிகள் தொடங்கியது.
கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு ஆகிய 2 வருடம் ஆதிச்சநல்லூரில் மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தது. அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் தலைமையில் நடந்த அகழாய்வு பணியில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் “இந்தியாவில் ஆதிச்சநல்லூர் உள்பட 5 இடங்களில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். நமது வழக்கு படி திருச்சியில் தனி தொல்லியல் மண்டலம் அமைக்கப்பட்டு அதற்கு இயக்குனராக முனைவர் அருண்ராஜ் நியமிக்கப்பட்டு, வேலைகள் சூடு பிடித்தது. 2004 ன் அகழாய்வு அறிக்கையையும் மத்திய தொல்லியல் இயக்குனர் சத்தியபாமா வெளியிட்டார்.
ஆக. மதுரை உயர்நீதி மன்றத்தில் நாம் வைத்த கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.
உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு நடந்தது. மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் அப்போதைய ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணனிடம் பொருப்பை ஒப்படைத்தார். அதன் பயனாக ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சங்கர்கணேஷ் ஏற்பாடில் ஊர்மக்கள் 5 ஏக்கர் நிலத்தினை இனமாக தொல்லியல் துறைக்கு வழங்கினர். இதனால் பணி வேகமாக நடந்தது. முதல்கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. 2021 அக்டோபர் மாதம் மூன்று இடங்களை தேர்வு செய்து பணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். இயககுனர் முனைவர் அருண்ராஜ் , மாவட்ட ஆட்சி த¬வைர் மரு.கி.செந்தில்ராஜ் ஆகியோர் ஆதிச்சநல்லூர் மீது மிகவும் ஆர்வம் காட்டினர். இதனால் ஆய்வு மிகச்சிறப்பாக நடந்தது.
இந்த அகழாய்வு பணியில் 100 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்க கால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்தது. இந்த பணிகள் 2022 செப்டம்பர் மாதம் இறுதியில் நிறைவு பெற்றது.
தற்போது ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த ஆதிமனிதனின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய ஐந்து இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கால்வாய், கருங்குளம், கொங்கராயகுறிச்சி, அகரம், திருக்கோளூர் ஆகிய ஐந்து இடங்களில் மத்திய தொல்லியல் துறை ஜனவரி மாதம் முதல் ஆய்வு நடத்த உள்ளனர்.
இதே காலகட்டத்தில் சிவகளை, கொற்கையில் அகழாய்வு செய்ய வேண்டு ம் என வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கின் படி ஆய்வு நடந்து முடிந்துள்ளது. பெங்களூரில் உள்ள 60 ஆயிரம் தமிழ் கல்வெட்டு படிகளை தமிழகத்துக்கு கொண்டு வரவேண்டும் என வழக்கு தொடர்ந்தோம். அந்த பணியும் நிறைவேறி கல்வெட்டு படிகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிவகளையில் அகழாய்வு இயக்குனர் பிரபாகரன் தலைமையில் மூன்று கட்ட அகழாய்வும், கொற்கையில் இயக்குனர் தங்கதுரை தலைமையில் ஒரு கட்ட அகழாய்வும் நடந்து முடிந்துள்ளது.
கிருஷ்ணாபுரம் கலை சிற்பங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஆவண செய்ய வேண்டும் என்றும், மருதூர் அணைக்கட்டில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுக்குள் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
உழக்குடியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற எனது வழக்கை ஏற்று மாநில தொல்லியல் துறை விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை உயர்நீதி மன்றத்தில் பதில் தெரிவித்துள்ளார்கள். எனவே விரைவில் உழக்குடியில் அகழாய்வு தொடங்கும் என ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்.
தாமிரபரணி ஆற்றில் உள்ள மண்டபங்கள் படித்துறைகளை பழுது பார்க்க வேண்டும், சாக்கடை கலக்காத நதியாக மாற்ற வேண்டும் என்ற என்னுடைய வழக்கை விசாரித்த நீதியரசர்கள் மண்டபம், மற்றும் படித்துறை குறித்த ஆய்வறிக்கை தரவேண்டும் என கேட்க, எனது சார்பாக பாளை தூய யோவான் வரலாற்று துறை உதவி பேராசிரியர் ஜோசப் ராஜ் தனது மாணவருடன் அந்த அறிக்கையை களப்பணி செய்து தயாரித்துள்ளார். அதை மதுரை உயர்நீதி மன்றத்தில் சமர்பித்து உள்ளோம். விரைவில் தாமிரபரணி குறித்து நல்லதொரு தீர்ப்பு வரும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த வழக்குகள் எல்லா வற்றையும் நூலாக்கி விட்டேன். தமிழ் திசை இந்து பதிப்பகம் மூலமாக நான் எழுதிய “ஆதிச்சநல்லூர் வழக்கு எண்13096/2017” என்ற நூலிலும் பொன் சொர்ணா பதிப்பகம் மூலமாக நான் எழுதிய “பொருநை ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகங்களும், அறிக்கைகளும்”, “தவழ்ந்து வரும் தாமிரபரணி” போன்ற நூல்களில் விரிவாக எழுதியுள்ளேன். வாய்ப்புள்ளவர்கள் வாங்கி படியுங்கள்.
இந்த நூலில் சிவகளை அகழாய்வு பற்றியும் எழுதியுள்ளேன்.
இனி. தாமிரபரணி கரையில் வாழ்ந்த மறக்கமுடியாத பிரபலங்கள் குறித்து நாம் காணலாம்.
(பொருநை ரகசியத்தினை தேடி )


