ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் நேற்று குளிக்கச் சென்றவர் மாயம். 2வது நாளாக தீயணைப்புத்துறையினர் தேடுதல் வேட்டை.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆறுமுகம். இவரது மகன் சிவபெருமாள்(39). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் தனது தந்தைக்கு உதவியாக இருந்து கொண்டு கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை சுமார் 10.30 மணி அளவில் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை.
இதற்கிடையில் நீண்ட நேரமாக கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஒரு பைக் நிற்பதை பார்த்த அப்பகுதி மக்கள் செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, செய்துங்கநல்லூர் உதவி ஆய்வாளர் ராஜாராபர்ட் உள்பட பலர் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆற்றில் காலையில் இருந்ததை விட மதியத்திற்கு மேல் தண்ணீர் அதிகமாக வந்துள்து. இதற்கிடையில் ஒரு வேளை சிவபெருமாள் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இருக்க வாய்ப்பிருக்கலாம் என்று கூறி போலீசார் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஆங்காங்கே தேடினர். பின்னர் வெளிச்சம் இல்லாத காரணத்தால் இன்று காலை வந்து தேடுவதாக கூறிச் சென்றனர்.
இந்த நிலையில் இன்று 2வது நாளாக தீயணைப்புத்துறையினர் 10க்கும் மேற்பட்டோர் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் பாலத்தின் கீழ்ப்பகுதியில் தேடுதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்றைய தினத்தை விட இன்று காலை ஆற்றில் தண்ணீர் குறைந்துள்ளதால் தற்போது ஆற்றில் உள்ளே உள்ள செடிகொடிகளை கம்பு மூலம் அகற்றி அதில் சிக்கியுள்ளரா என்று தேடி வருகின்றனர்.
குளிக்கச் சென்றவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


