தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 250 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே பக்கப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 26.10.2022 அன்று ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் பக்கப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரிமுத்து (27) என்பவரை முறப்பநாடு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், மாரிமுத்துவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உட்பட 250 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.


