தூத்துக்குடி மாவட்டம், அனந்தநம்பிக்குறிச்சி வடக்கூரைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம். அவரது மனைவி வள்ளியம்மாள்(65). இவர்களுக்கு 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர்.
கடந்த 7ம் தேதி வள்ளியம்மாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை முடித்து விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வள்ளியம்மாள் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த ராமலிங்கத்தின் சைக்கிளை அதே பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டி மகன் கணேசன் என்பவர் சேதப்படுத்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்த வள்ளியம்மாள் வண்டியை என்ன செய்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு கணேசன் வள்ளியம்மாளை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். மேலும் அருகில் ஒரு திருமண நிகழ்ச்சியில் உணவு வாங்க செல்வதற்காக கையில் கணேசன் ஒரு பையில் தூக்குவாளி எனப்படும் உணவு வாங்க பாத்திரத்தை வைத்துள்ளார். அந்த பையில் ஒரு கத்தியையும் வைத்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கணேசன் தான் கையில் வைத்திருந்த துணிப்பை வைத்து நெற்றியில் தாக்கியுள்ளார். அதில் இருந்த கத்தி வள்ளியம்மாள் தலையில் பட்டது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். பின்னர் சிகிச்சை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். மறுநாள் காலையில் வீட்டில் படுத்திருந்த அவர் கை கால்கள் அசைக்க முடியாமல் படுத்த நிலையில் கிடந்தார். உடனே அவரை கணவர் ராமலிங்கம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதுகுறித்து முறப்பநாடு போலீசார் அடிதடி வழக்கு என வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வள்ளியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


