ஏரல் அருகே மளிகை கடையில் பூட்டை உடைத்து ரூ.1லட்சத்து 60 ஆயிரம் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சிவகளை நாடார் தெருவைச் சேர்ந்தவர் பெரிய நாடார் மகன் சுந்தர்ராஜ் (66). இவர் சிவகளை நடுத்தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் பூட்டை உடைத்து கடைக்குள் சென்று கல்லாவில் வைத்திருந்த ரூ.1லட்சத்து 60ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து ஏரல் காவல் நிலையத்தில் சுந்தர்ராஜ் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் இமானுவேல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், ஆவராங்காடு கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் பால்ராஜ் (35) என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1லட்சத்து 30ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


