பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை உரல், அம்மி, குழவி, ஆட்டுரல், திருவை என்பன ஒரு குடித்தனத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கட்டாயம் இடம் பெறுபவையாக இருந்தன. நாகரிக வளர்ச்சியில் மிக்ஸி, கிரைண்டரின் வரவு அம்மி, ஆட்டுரல் போன்றவற்றையெல்ல்லாம் ஒரம் கட்ட வைத்துவிட்டது. இவையெல்லாம் வேண்டாத சப்புசவரு சாமான்களோடு சாமானாகி விட்டன.
இன்று உபயோகமற்று குப்பையில் ஏறியபட்ட இவை எல்லாம் கூடிய சீக்கிரம் புதைபொருட்களாகி போய் விடப் போகின்றன. இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு பின் என்றாவது எங்காவது நடத்தப்படும் அகழ்வாயுகளின் போது இன்று ஆதிச்சநால்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் நமக்கு உண்டாக்கிய வியப்பையும் ஆச்சரியத்தையும் போல இன்றைய அம்மிகளும் ஆட்டுரல்களும் அதே அளவு வியப்பையும் ஆச்சரியத்தையும் வருங்கால மனிதனுக்கு கொடுக்கதான் போகின்றன.
வருங்கால மனிதர்கள், குறைவான வளர்ச்சி கொண்ட கற்கால மனிதர்கள் என்று இன்றைய நம்மை குறிப்பிட்டாலும் ஆச்சரியம் இல்லை.


