500 வருடங்களுக்கும் மேல் பழமையான இத்திருக்கோவில் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் விட்டலராயர் என்ற பண்டரீபுர பாண்டுரங்க விட்டலரின் பக்தரான சிற்றரசர் ஒருவரால் பகவான் பாண்டுரங்கரின் ஆணைக்கிங்க கட்டப்பட்டதாகும்.
போர் காலம் வந்ததால் பண்டரீபுர பாண்டுரங்க பெருமானை தரிசனம் செய்ய இயலாது போனதால் பெரிதும் மனம் வருந்தினார் அரசர் விட்டலராயர். அவரது கனவில் தோன்றிய பாண்டுரங்க பெருமான் அவரிடம் தாமிரபரணி நதிக்கரையின் ஓரிடத்தை நோக்கி ஓடும் ஒரு எலுமிச்சம்பழத்தை பின் தொடருமாரும் அது நிற்கும் இடத்தில் தான் இருப்பதாகவும் அதற்கு அடையாளமாக அவ்விடத்திற்கு மேலே வானத்தில் கருடர் வட்டமிட்டுவார் எனவும் கூறி தனக்கு அங்கு கோவில் எழுப்புமாறும் கூறி மறைந்துள்ளார். கண் விழித்த விட்டலராயர் பகவான் கூறிய அடையாளங்களைக்கொண்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓரிடத்தில் பகவானின் விக்கிரகத்தைக் கண்டெடுத்தார். அவ்வூரிலேயே பகவான் பாண்டுரங்க விட்டலருக்கு அவ்விக்கிரத்தை ஸ்தாபித்துக் கோவில் ஒன்றை எழுப்பினார்.
இக்கோவில் போர்காலத்தில் மிகவும் அவசரமாகக் கட்டப்பட்டதாகும். இக்கோவிலிலின் ராஜ கோபுரம் இறுதி வரை கட்டப்படவில்லை.இன்றும் இக்கோவில் கொடிமரத்துடன் மட்டும் ராஜ கோபுரம் இன்றியே காணப்படுகிறது.
இக்கோவிலுக்கு பிறகு சில கி.மீ தூரத்தில் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் எழுப்பப்பட்ட வெங்கடாசலபதி திருக்கோவில் சிற்பக்கலைக்கு மிகவும் பிரசித்திப் பெற்ற மற்றொரு விஜயநகரப் பேரரசுக் காலத்து கோவில் ஆகும்.
ஸ்ரீ பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோவிலின் பாண்டுரங்க பெருமான் குழந்தை பேறு நல்குவதில் பிரசித்திபெற்றவராக விளங்குகிறார். குழந்தையில்லா தம்பதிகள் பகவானுக்குப் பால் பாயாசம் நைவேத்யம் செய்து சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்கின்றனர் இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள்.
மேலும் இங்கு விட்டலராயரால் தாமிரபரணி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட உற்சவ மூர்த்தியான பகவான் பாண்டுரங்கர் மஹாராஷ்டிர மாநிலம் க்ஷோலாப்பூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டரீபுர கோவிலின் உற்சவ மூர்த்தி ஆவார். ஆகையால் இக்கோவிலுக்கு பண்டரீநாதனின் பெரும் பக்தர்களான துகாராம் நாமதேவர் முதலியோர் இங்கு வந்து வழிபட்டுச் சென்றுள்ளனர். அவர்களது வம்சத்தினர் ஆஷாட மாதம் தொடங்கும் முன்பு இன்றும் இங்கு வந்து செல்கின்றனர். ஆகையால் இத்தலம் தென் பண்டரீபுரம் அல்லது தட்க்ஷிண பண்டரிபுரம் என்றழைக்கப்படுகிறது.
இக்கோவிலின் நிர்வாகம் தற்பொழுது ஒரே ஒரு குடும்பத்தின் பொறுப்பில் உள்ளதால் பக்தர்களின் ஆதரவு இக்கோவிலுக்கு அவசியமானதாக உள்ளது.
தற்பொழுது வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி இரு தினங்களும் தாயார் ருக்மினி மற்றும் தாயார் சத்யபாமா இருவருக்கும் காலை 10 மணிக்கு மேல் திருமஞ்சனம் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஏகாதசி, ரோகிணி, திருவோணம் மற்றும் பௌர்ணமி தினங்களில் பகவானுக்கு திருமஞ்சமும் அலங்கார பூஜையும் நடைபெற்று வருகிறது.
மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திர தினமன்று உடையவருக்கு திருமஞ்சன சேவை நடைபெற்று வருகின்றது.
கோவில் திறக்கப்படும் நேரம்:
அனைத்து நாட்களும்
காலை: 9.00 – 11.00
மாலை: 5.00 – 7.00
தொடர்புக்கு : 8946032479
தென் பண்டரிபுரமான ஸ்ரீ பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோவிலில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தாயார் ருக்மிணி மற்றும் தாயார் சத்யபாமா இருவருக்கும் காலை 10 மணிக்கு மேல் திருமஞ்சன சேவை நடத்தப்பட்டு பிரசாதமாக பால் பாயாசம் வழங்கப்பட்டு வருகின்றது.
அன்றைய தினங்களில் குழந்தை பேறு மற்றும் திருமணம் கைகூட வேண்டுவோர் தாயாருக்கு பால் பாயாசம் நைவேத்யம் செய்து வழிபடலாம்.
மேலும் இத்திருக்கோவிலில் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் பகவான் பாண்டுரங்கர் மற்றும் தாயார் இருவருக்கும் பால் பாயாசம் நைவேத்யம் செய்து வழிபடலாம்.
புதிதாக வீடு கட்ட அல்லது ஏதேனும் கட்டட பணி தொடங்கவுள்ளோர் கட்டுமானம் எவ்வித தடங்கலுமின்றி நல்லவிதமாக நிறைவேற தங்களது கட்டுமானப் பணியைத் துவங்கும் முன்பு செங்கல் மீதே நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நமது பாண்டுரங்க விட்டலரான பகவானின் திருப்பாதங்களின் முன் இரண்டு செங்கற்களை வைத்து வழிபட்டுவிட்டு பின் தங்களது வீட்டுப் பூஜை அறையில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு தங்களுடைய கட்டுமானம் துவங்கும் பொழுது இந்த செங்கற்களையே வைத்து துவங்க பகவான் பாண்டுரங்க விட்டல பெருமானின் திருவருளால் அப்பணி நல்ல விதமாக நிறைவேறும்.
ஸ்ரீ பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோவில் (தென் பண்டரிபுரம்),
விட்டிலாபுரம், தூத்துக்குடி மாவட்டம் 628809
தொடர்புக்கு: 8946032479
இடம்: திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் இருந்து சில கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது விட்டிலாபுரம்.
பண்டரிபுரத்திற்கு செல்ல இயலாத பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை தென் பண்டரிபுரமான விட்டிலாபுரத்திற்கு வந்து நிறைவேற்றலாம்.


