நாசரேத் அருகே மாதா சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரத்தில் திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின்ரேட்டில் பழமைவாய்ந்த பரிசுத்த பரலோக மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சுற்றுசுவரில் உள்ள கெபியில் மாதா சிலை இருந்த மாலை சிலை உடைக்கப்பட்டு, அதன் முகப்பு கண்ணாடியும் உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று காலையில் கிறிஸ்தவ மக்கள் பிரகாசபுரம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் தலைமையில் நாசரேத் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து நாசரேத் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராய்சன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் பிரகாசபுரம் 6-வது தெருவைச் சேர்ந்த சுடலை அய்யாசாமி மகன் இசக்கிமுத்து (37) என்பவர் மாதா சிலையை உடைத்து தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.


