ஐரோப்பாவிலிருந்து கிறிஸ்தவ மிஷனெரியாக வந்தவர்,சார்லஸ் தியாபிலஸ் எட்வர்ட் ரேனியஸ் என்ற இரேனியஸ் பாதிரியார்.
1814 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த இவர் 6 ஆண்டுகள் சென்னையிலும் 18 ஆண்டுகள் திருநெல்வேலி மாவட்டத்திலும் சமயப்பணியோடு கல்விப் பணி உட்பட பல்வேறு சமுதாயப் பணிகளையும் செய்தவர்.
*தென்னிந்தியாவின் ஆக்ஸ்போட்* என அழைக்கப்படும் பாளையங்கோட்டையை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் இவரே. இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் தொடக்கப்பள்ளிகள் 1,460 – நடுநிலைப் பள்ளிகள் 411 – உயர்நிலை பள்ளிகள் 90 – மேல்நிலைப் பள்ளிகள் 129 – கல்லூரிகள் 14 உள்ளன. இவை தவிர தொழில் கல்வி நிறுவனங்கள் 3; அரசு மருத்துவக் கல்லூரி; அரசு சித்த மருத்துவக் கல்லூரி; தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-7; தொழிற் நுட்பக் கல்லூரிகள் 5; ஆசிரியர் பயிற்சி நிருவனங்கள் 8.உள்ளன.இம் மாவட்டத்தின் இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தது இரேனியசின் கல்விப் பணிகளே. இவரது காலகட்டத்தில் இராமநாதபுரம், தென்காசி, தூத்துகுடி,ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியதே திருநெல்வேலி மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாளையங்கோட்டையில் அமைந்துள்ள , ஊசிக் கோபுரம் என்றழைக்கப்படும் *தூயத் திருத்துவ பேராலயம்* 1826 ஆம் ஆண்டு இரேனியஸ் பாதிரியாரால் கட்டப்பட்டதுதான்.
அவரது கல்விப்பணி தற்கால நவீனக்கல்விக்கு அடித்தளமிட்டவை. ஒரு சாரார் மட்டுமே கல்வியை உரிமைக் கொண்டாடி கொண்டிருந்த நிலையில் கல்வியை அனைவருக்கும் உரியதாக்கி அதைத் தமிழகத்தில் தாராளமயமாக்கிட அரும்பாடுபட்டவர்.
எண்ணும் எழுத்தும் கற்பிப்பதே கல்வி என்றிருந்த நிலையை மாற்றியமைத்து ,இருநூறுக்கும் அதிகமான பள்ளிகளை தொடங்கி செயல்படுத்தியவர்.
பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க *செமினரி* என்ற ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளையும் ஏற்படுத்தினார். பள்ளிகளில் முதன்முறையாக Inspecting school master ( I.S.M) பரீட்சிக்கும் ஆசிரியர்களை நியமித்து பள்ளியின் கல்வித்தரத்தை சோதித்தறிந்தார்.இம்முறையே இன்றுவரையும் நமது பள்ளிகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இரேனியஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே பெண்களுக்கான பள்ளிகளை உருவாக்கி அவர்களுக்கான பெண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும் ஏற்படுத்தி புரட்சி செய்தார்.
1822 ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் பெண்களுக்கான ஆசிரியர்பயிற்சிப் பள்ளியை ஏற்படுத்தி அதை தன் மனைவி அனியின் தலைமையில் செயல்படுத்தினார். இப்பள்ளிதான் இந்தியாவிலேயே விடுதியோடு பெண்களுக்காக தொடங்கப்பட்ட இரண்டாவது பள்ளி என்ற சிறப்பிற்குரியது. இன்று அது மேரிசார்சன்ட் என்ற மகளிர் மேல்நிலைப் பள்ளியாக சிறப்பாக இயங்கி வருகிறது.
சாதிப் பாகுபாடுகள் தலைவிரித்தாடிய அக்காலகட்டத்தில், தாம் ஏற்படுத்திய பள்ளிகளில் எந்தவகையிலும் சாதிப்பாகுபாட்டை அனுமதிக்காமல் அவற்றை எதிர்த்துப் போராடியவர்.ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஒன்றில் தங்களுக்கு தனியாக உணவருந்தும் இடத்தை தரவேண்டும் என்று போராடிய உயர்சாதி மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களின் விவாதத்தையும் புறக்கணித்து அந்தப் பயிற்சிப் பள்ளியையே மூடினார். மீண்டும் அடுத்த ஆண்டு( 1822) சாதிபாகுபாட்டை விரும்பாத வேறுசில மாணவர்களைக் கொண்டு அதே ஆசிரியர்ப் பயிற்சிப் பள்ளியைத் திறந்து சிறந்த ஆசிரியர்களை உருவாக்கினார்.அப்பள்ளி இன்றும் பாளையங்கோட்டையில் பிஷப் சார்சன்ட் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அன்றைய காலகட்டத்தில் ஆதிக்கச் சாதியினரின் அடக்குமுறைகளிடமிருந்து பாமர மக்களை பாதுகாக்க அவர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே தனி குடியிருப்புகளை விலைக்கு வாங்கி அதனை சாதி சமயப் பாகுபாடுகளற்ற சமத்துவக் குடியிருப்பாக உருவாக்கி சமத்துவத்தை நிலைநாட்டிக் காட்டியவர்.இவரால் ஏற்படுத்தப்பட்ட அத்தகைய முப்பது குடியிருப்புகள் இன்றும் வளர்ச்சிப் பெற்ற ஊர்களாக உள்ளன.
1834 ஆம் ஆண்டு கணவனை இழந்து வாழும் பெண்களுக்கான *சகாயநிதி*(Friend in need sangam) என்ற ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்தார்.
இவர் எழுதிய பூமி சாஸ்திரம்(1832) என்ற நூல் தமிழில் வெளிவந்த முதல் அறிவியல் நூல் என்ற பெருமைக்குமுரியது. இந்நூல் புவியைப்பற்றி அதுவரை இருந்துவந்த அறிவியலுக்கு மாறான கருத்துக்களைச் சுட்டிக் காட்டி அறிவியல் மனப்பான்மையை மக்களிடையே உருவாக்க வழிவகுத்தது
நமது சமூகத்தை சீரமைப்பதிலேயே தனது வாழ்நாட்களை கழித்த இந்த இரேனியஸ் பாதிரியார், 1790 ஆம் ஆண்டு இதே நாள்( நவம்பர் 5-ல்) ஜெர்மனியின் பிரஷியாவில் பிறந்தார்.இந்தியாவிற்கு வந்த பிறகு ஒருமுறை கூட தனது தாய்நாட்டிற்கு செல்லவில்லை.1838 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் தனது 48 வது வயதில் இவ்வுலகவாழ்வை நிறைவு செய்தார்.அவரது சமுதாயப் பணிகள் என்றும் இந்திய வரலாற்றில் மறுக்க இயலாதவை.
_ முனைவர் த.ஜான்சிபால்ராஜ்
ஆசிரியர்,எழுத்தாளர்.


