இன்று ரேணியஸ் அடிகாளாரின் பிறந்த நாள் விழா. இவரை பற்றி எனது தலைத்தாமிரபரணி என்ற நூலில் நான் எழுதிய தகவலை இங்கு பகிர்கிறேன். தலைத்தாமிரபரணி நூலின் விலை 1000/- நூல் வேண்டுவோர் உங்கள் விலாசத்துடன் 8760970002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
108. நெல்லை மாவட்டத்தில் கல்விக்கு
அடித்தளமிட்ட ரேனியஸ் அடிகளார்
தாமிரபரணி நதிக்கரை என்றாலே அற்புதங்கள் நிறைந்தது. இங்கு வந்து பணியாற்றுபவர்கள் இங்கேயே தங்கி விடுவார்கள். குறிப்பாக ஐரோப்பிய நாட்டில் இருந்து தமிழகம் வந்து இங்குத் தமிழ் கற்று பின் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பக் கல்வி மூலம் தான் முடியும் எனத் தாமிரபரணி கரையைச் சுற்றி உள்ள கிராமங்களில் பள்ளிக்கூடம் திறந்து சுமார் 1820 முதல் 1838 வரை பணிபுரிந்து திருப்பணி, தமிழ்ப்பணி. கல்விப் பணியாற்றி தாமிரபரணி நதிக்கரையில் பாளை நன்னகரில் முருகன்குறிச்சி என்னும் இடத்தில் அடக்கமாகிய ரேனியஸ் அடிகளார் தான் கல்லிடைக்குறிச்சி சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தை உருவாக்கியவர்.
ஊசி கோபுரம்
100 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி கண்ட பாளை மாநகரில் 1829 ஜனவரி 3&ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது. ஊசி கோபுரம் பரிசுத்த திருத்துவ ஆலயம் இதற்கு அடிக்கல் நாட்டியவர் ரேனியஸ் அடிகளாரே.
நெல்லை அப்போஸ்தலன் என்று அழைக்கப்பட்ட அவரே தாமிரபரணி நதிக்கரையில் சீவலப்பேரி என்னும் ஊரில் 1832-ல் ஆரம்பப்பள்ளி ஒன்றை அமைத்தார். அது 1923&ல் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் அழிந்துவிடவே 1942-ல் மீண்டும் கட்டப்பட்டது.
இவரின் முழுப்பெயர் சார்லஸ் தியோப்ளஸ் சவால்ட் ரேனியஸ். இவரை நெல்லை அப்போஸ்தலர் என்று அழைத்தனர்.
ஜெர்மன்
ரேனியஸ் அடிகளார் ஜெர்மனி தேசத்தில் உள்ள போர்ட்ஸ் கிரான்ட்ஸ் என்ற ஊரில் 1790&ல் பிறந்தார். இவருக்கு சிறுவயதிலே சோதனை. விபரம் தெரியாமல் இருக்கும் போதே தந்தையை இழந்தார்.
1812-ஆம் ஆண்டு தனது 22-வயதில் பட்டம் பெற்றார். பட்டம் பெற்றதோடு நிற்காமல் இந்தியா வந்து தேவ ஊழியம் செய்ய முயற்சி செய்தார்.
இவர் முயற்சியின் பயனாக 1814&ஆம் ஆண்டு ஜனவரி 7&ஆம் தேதி இந்தியா வர வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இது அவருடைய குடும்பத்திற்குப் பிடிக்கவில்லை. காரணம் இந்தியா வந்து ஊழியம் செய்தவர்கள் யாரும் மீண்டும் தாய்நாடு திரும்பவில்லை. அதனால் ரேனியஸ் அடிகளார் இளைய சகோதரர் “நீ உயிரோடு செத்தவர் ஆகிவிட்டீர் எங்கள் மீது உங்களுக்கு பாசம் இல்லையா? தாயார் உங்களை நினைத்து கண்ணீர் வடிக்கிறார்” என்று கடிதம் எழுதினார்.
ஆறு மாதம்
கடிதத்தைப் பார்த்த ரேனியஸ் அடிகளார் மனம் கலங்கியது. ஆனாலும் அவர் முன் வைத்த காலைப் பின் வைக்கவில்லை. முயற்சியைக் கைவிடவில்லை. மனதைக் கல்லாக்கிக் கொண்டு கப்பலில் பயணம் செய்தார். 6 மாதம் கப்பலில் பயணித்து சென்னை தரங்கம் பாடிக்கு சி.எம்.எஸ்.மிஷனரியாக வந்து சேர்ந்தார். இங்கு வந்த உடனே அவருக்கு மொழி மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது.
ஆகவே முதல் கட்டமாக தமிழைக் கற்க ஆரம்பித்தார். 6 மாதத்தில் மிகப்பெரிய தமிழ் அறிஞர் ஆனார். பைபிளைத் தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றார். ஊழியம் செய்யப் பல இடங்களுக்குச் சென்றார். குறிப்பாகக் கஷ்டப்பட்ட ஜீவன்களைத் தேடிச் சென்று தனது ஆறுதலையும், ஊழியத்தையும் செய்தார். சில வேளைகளில் மாட்டுக் கொட்டையில் தங்கி ஊழியம் செய்தார். மாட்டுக் கொட்டகை என்றால் சாதாரணமானதா? இயேசு கிறிஸ்து பெத்லேகேமில் மாட்டுக் கொட்டகையில் பிறந்தவர்தானே?
நெல்லை
இவ்வேளையில் திருநெல்வேலிக்கு நல்ல பாதுகாப்பான தன்மையும், தலைமை ஏற்கும் அம்சமுமாய் ஒரு அடிகளார் தேவைப்பட்டார். அதற்குத் தகுதியானவர் ரேனியஸ் அடிகளாரே என்றும் அவரை 1820&ஆம் ஆண்டு திருநெல்வேலிக்கு ஊழியம் செய்ய அனுப்பி வைத்தனர்.
இங்கு அவர் வரும் பொழுது 32 பள்ளிகள் இருந்தன. அவரது முயற்சியில் 68 பள்ளிகளாக உயர்ந்தன. குதிரையில் வந்து ரேனியஸ் அடிகளார் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார். தாமிரபரணி கரையில் அம்பாசமுத்திரம். வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி போன்ற பகுதியில் இவரது பணிகளின் பயனாய் இன்று வானுயர்ந்து நிற்கும் ஆலயக் கோபுரங்களாய் காட்சி அளிக்கிறது. கல்விப் பணி மூலமே மதத்தைப் பரப்ப இயலும். அதே சமயத்தில் தாழ்ந்த சமுதாய மக்களை நல்ல நிலைக்குக் கொண்டு வரலாம் என்பதை மனதில் கொண்ட ரேனியஸ் அடிகளார் பள்ளிகளை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்கு வகித்தார்.
ஆசிரியர்
பின் அப்பள்ளிக்கு அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவுக்குள் ஐக்கியமானவர்களை ஆசிரியர்களாக நியமித்து அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றினார். அதற்காக ஆசிரியர் பயிற்சி பள்ளியும் துவங்கினார். பெண்கள் சமுதாயம் ஆசிரியராக உயரவும் ரேனியஸ் அடிகளார் முதலில் ஏற்படுத்திய ஆசிரியர் பயிற்சி பள்ளிகளே முக்கியக் காரணம்.
இன்று திருநெல்வேலி கல்வியில் நல்ல தகுதியான இடத்தில் இருக்கிறது என்றாலும், பள்ளிகள் மாநில ரேங்க் எடுக்கிறது என்று சொன்னாலும் அதற்கு ஆணி வேர் ரேனியஸ் அடிகளார் தான்.
டோனாவூர்
களக்காடு ஏர்வாடி இடையே உள்ள மாவடி நெருஞ்சி விளை, தோப்பு, நல்ல மரம் ஆகிய கிராமங்களில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிய ஆரம்பித்தனர். அதன் பயனாக ரேனியஸ் அடிகளார் ஜெர்மன் நாட்டில் உள்ள ரஷ்யா மாநில ஆளுநர் டோனாவுக்கு எழுதிக்கேட்டு அதன் மூலம் கிடைத்தத் தொகையைக் கொண்டு கிறிஸ்தவ புது கிராமம் ஒன்றை உருவாக்கினார். அதற்கு ஆளுநர் டோனா பெயரிலே டோனாவூர் எனப் பெயர் வைத்தனர். 1827&ல் மே மாதம் 23&ஆம் தேதி டோனாவூர் தோன்றியது. ஆதரவற்றக் குழந்தைகளைப் பராமரிக்க அங்கு மடம் உருவாக்கிய கார்மைக்கேல் அம்மாவால் இன்று டோனாவூர் உலகம் போற்றும் ஒரு இடமாக விளங்குகிறது.
மெஞ்ஞானபுரம்
1825-ஆம் ஆண்டு நெடுவிளை அம்மன் கோவில் திருவிழாவின் போது பூசாரி மகனைக் கருநாகம் தீண்டிவிட்டது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தச் சிறுவனை ரேனியஸ் அடிகளார் முதலுதவி செய்து காப்பாற்றினார்.
அதன் பிறகு அங்கு நற்செய்தியைப் போதித்தார். பின் நெடுவிளை என்ற சிறுபட்டி கிராமத்திற்கு 7.3.1830 அன்று மெஞ்ஞானபுரம் என்று ரேனியஸ் அடிகளார் பெயர் சூட்டினார். அவ்வூருக்கு இப்பெயர் சூட்டப்பட்டதால், அருட்திருவாளர்களையும், அருமையானத் திருப்பணிவிடையாளர்களையும், பேரறிஞர்களையும் தோற்றுவித்து பேரூராக விளங்குகிறது.
இவ்வூரில் தான் தென் நெல்லை அப்போஸ்தலன் என்று அமைக்கப்பட்ட ஜான் தாமஸ் அடிகளார் தங்கியிருந்து ஊழியம் செய்தார். அவர் இறந்தும் கூட இப்போதும் தன் வெள்ளைக்குதிரை மீது ஏறி பவனி வந்து அப்பகுதி மக்களைக் காப்பாற்றி வருவதாக நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
வசவப்பபுரம்
தாமிரபரணி நதியில் 2 கிலோ மீட்டர் அருகிலேயே திருநெல்வேலி & தூத்துக்குடி மெயின் ரோட்டில் இருக்கும் கிராமம் வசவப்பபுரம். பாசவப்பா என்ற கர்நாடகத் தளபதி இவ்வூரில் தங்கியிருந்ததால் பசவப்பபுரம் என்று அழைக்கப்பட்டது. இதுவே மருவி வசவப்பபுரம் ஆனது. இவ்வூரில் ரேனியஸ் அடிகளார் வந்த போது இவ்வூரைச் சேர்ந்த பிராமணர்கள் எங்கள் ஊருக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் கல்விக்கூடம் வேண்டும் நீதி போதனை வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
அதில் திண்ணைப் பள்ளிக்கூடம் ஆரம்பித்து அதற்குச் சாஸ்திரி என்பவரை ஆசிரியராக நியமித்தார். இங்கு வேதநாயகம், வேதமாணிக்கம் என்று 2 கிறிஸ்தவர்கள் தான் திருமுழுக்கு எடுத்துக் கொண்டனர்.
கொங்கராயகுறிச்சி
தாமிரபரணி நதிக்கரையில் கொங்கராயகுறிச்சி என்னும் ஊர் மிக அழகியக் கிராமம். திருச்செந்தூர், திருநெல்வேலி மெயின் ரோட்டில் தாமிரபரணி ஆற்றின் எதிர்புறம் மணல் மேடாக மனதைக் கொள்ளைக் கொள்ளும் அளவுக்கு விசேஷமாக உள்ள கிராமம்.
இக்கிராமம் 1896&ல் ஆற்று வெள்ளத்தில் முழுவதும் அழிந்துவிட்டது. பின் 1870-ல் மீண்டும் குடியமர்த்தப்பட்டது. அங்குக் கொங்கு நாட்டு மன்னன் படை வீடு அமைத்து வாழ்ந்து வந்தார். கொங்கு என்றால் துணிவு. குறிச்சி என்றால் இருப்பிடம். ராயன் என்றால் மன்னர். இதை எல்லாம் சேர்த்து கொங்கராயகுறிச்சி என்று அழைக்கப்பட்டது.
இவ்வூரில் ரேனியஸ் அடிகளாருக்குப் பெரும் சோதனை வந்தது. கிறிஸ்தவர்களாக மாறியவர்களைக் கட்டி வைத்து அடித்தனர். அவர்களுடைய வீடுகளுக்கு தீ வைத்தனர்.
இந்தச் சோதனைகளை ரேனியஸ் அடிகளார் சந்தித்தார்.
109. நெல்லையில் மாம்பழச்சங்கம்
தோன்றிய வரலாறு
தாக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க ரேனியஸ் அடிகளார் ஓடிச்சென்று உதவினார். தீக்கரையாக்கப்பட்ட வீடுகளை எல்லாம் விட்டு விட்டுத் தனிக் குடியிருப்புகள் உருவாக்கினார்.
சமாதானபுரம், மனகாவலம்பிள்ளை நகர் போன்ற பாளையங்கோட்டை அருகில் உள்ள கிராமங்கள் அப்படித் தோன்றியது தான். டோனாவூர் தோன்றியக் கதையையும் ஏற்கெனவே கூறிவிட்டோம். பல குடியிருப்புகளை அரசிடமிருந்து ரேனியஸ் அடிகளார் வாங்கி கிறிஸ்தவக் குடியிருப்பு உருவாக்கினார். அதன் பின் அன்பின் நகரம், நல்லூர், ஆசீர்வாத புரம் ஆகியவையும் அதைப்போல் உருவாக்கப்பட்ட கிராமங்களே.
ரேனியஸ் அடிகளார் தான் மட்டுமல்லாமல் தனது குடும்பத்தையே ஊழியத்திற்கு அர்ப்பணித்தார். அவரின் மகன் சார்லஸ் ரேனியஸ் 1845-ல் குருப் பட்டம் பெற்றார். அவர் சுவிசேஷ புரம் மற்றும் டோனாவூரில் பணியாற்றினார். சார்லஸ் அடிகளார் ரேனியஸ் அடிகளாரைப் போலலே மிகவும் வேகத்துடன் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பி வந்தார். இவர் டோனாவூரிலிருந்து சுவிசேஷ புரத்திற்குக் குதிரையில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அவலச் செயல்
ஒரு நாள் பரப்பாடி என்னும் கிராமத்தில் நடந்த அவலச் செயல் ஒன்றைப் பார்த்தார். பரப்பாடியைச் சேர்ந்த பண்ணையார் கோடை காலத்தில் குளம் வெட்டத் தீர்மானித்தார். இது நடக்கும் காலம் 1849. இந்தக் குளத்தை வெட்ட ஊர் பொதுமக்கள் அனைவரும் வர வேண்டும் என்று தண்டோரா போடப்பட்டது. இதற்கு மக்களைத் திரட்ட நிறையக் கூலி ஆட்களை வைத்திருந்தார். அவர் கர்ப்பிணி, முதியவர்கள் நடக்க முடியாத நோயாளி மற்றும் சிறுவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. இவ்வேலைக்கு வராமல் இருப்பவர்கள் மற்றும் வேலை செய்யும் இடத்தில் சோர்வு காட்டுபவர்களை அடியாட்கள் சவுக்கால் அடித்தனர். அதைக் கண்ட சார்லஸ் அடிகளார் குதிரையை விட்டு இறங்கி அந்தச் சவுக்கை பிடுங்கி அடியாட்களை அடித்து நொறுக்கிவிட்டார்.
திடீர் தாக்குதல்
அந்தத் திடீர் தாக்குதலில் நிலை குலைந்து போன அடியாட்கள் ஓடிப்போய் பண்ணையாரிடம் கூறினார்கள். உடனே யார் அடித்தார்கள் என விசாரித்து அங்கு வந்தார். அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. சார்லஸ் அடிகளார் தான் அடித்தார் என்று தெரிந்த உடன் பண்ணையார் கூனிக் குறுகிப் போனார். இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். மறுநிமிடம் தலை கவிழ்ந்து நின்றார். பண்ணையார் நிலையைப் பார்த்த கிராம மக்கள் சார்லஸ் அடிகளாரைத் தெய்வமாகப் போற்றினர். அந்த அடிமைத் தனத்திலிருந்து காப்பாற்றிய அவரின் வழியிலேயே கிறிஸ்துவுக்குத் தேவ சாட்சி ஆனார்கள் அவ்வூர் மக்கள். சார்லஸ் அடிகளார் கால்நடையாக வந்து ஏசு கிறிஸ்து குறித்து அவ்வூர் மக்களுக்குப் போதித்தார்.
மாம்பழ சங்கம்
பாளையங்கோட்டையில் நூற்றாண்டு மண்டபம் அருகே மாம்பழச் சங்கம் என்றொரு பண்டிகை நடைபெறும். இது வித்தியாசமான பண்டிகை ஆகும். இந்தப் பண்டிகை ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறுகிறது. இது தோன்றியது ரேனியஸ் அடிகளார் காலத்தில் தான். 1825&ல் ரேனியஸ் அடிகளாரின் போதனையை ஏற்று நமது பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாகக் கிறிஸ்து மத்தியில் ஐக்கியம் ஆனார்கள். இதனால் இவர்கள் நாகரிகமாக மாறினர். கொத்தடிமை தனத்திலிருந்து விடுபட்டனர்.
இவ்வேளையில் ஆனி மாதம் தோறும் குரங்கணி முத்துமாரியம்மன் கோவிலில் ஆனித் திருவிழா மிக விமர்சையாக நடக்கும். இவ்வூரில் பலர் மாட்டு வண்டி கட்டிக் குடும்பத்துடன் வந்து வீட்டுக்கு ஒரு ஆட்டுக்கடா வெட்டி படைத்து உண்பார்கள். அறுவடை முடிந்து நடைபெறும் இவ்விழா ஆற்று மணலில் தலை வைத்துப் படுத்து வானத்தைப் பார்த்து மகிழ்வார்கள். பின்பு சந்தோஷமாக உறங்கி போவார்கள்.
கிறிஸ்தவர்கள்
இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். குரங்கணிக்குச் சந்தோஷமாகச் செல்லும் மக்களில் புதிதாகக் கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் என்ன செய்வார்கள். அவர்களும் இதே போல் ஒரு பண்டிகை வர வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டதே மாம்பழச்சங்கம்.
இதற்கிடையில் விதவை நலச்சங்கம் ஒன்றை ரேனியஸ் அடிகளார் ஏற்படுத்தி அதன் சங்க விழாவை 9.3.1834 புதன்கிழமை அன்று பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடத்தினார்.
இந்த நாளில் அனைத்து பகுதியிலிருந்தும் கிறிஸ்தவர்கள் வில் வண்டி கட்டி பாளையங்கோட்டை வந்து சேர்ந்தனர். சிலர் மாட்டு வண்டியில் குரங்கணிக்குச் செல்வது போலவே கொட்டகை கட்டி வந்தனர். கூட்டத்தில் ஆராதனை நடைபெற்றது. அவ்வேளை மாம்பழ சீசன் என்பதால் மாம்பழம் வந்து குவிந்தது. கொக்கிரகுளம், தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு மாம்பழச் சங்கத்தில் கலந்து கொள்ள மக்கள் ஆர்வமாக வந்தனர். கூட்டம் அதிகரித்தது.
மாப்பிள்ளை சங்கம்
பெரும்பாலுமே திருவிழாவில் பெண் மாப்பிள்ளை பார்த்து ஒழுங்கு செய்வது வழக்கம். இது குரங்கணி அம்மன் கோவிலில் தொடர்ந்து நடைபெற்றது. அதே பணியை மாம்பழச் சங்கத்திலும் நடத்தினார்கள். பெரும்பாலுமே Ôநாடார்Õ சமுதாய மக்களே கிறிஸ்தவ மதத்தில் மிக அதிகமாக மனம் மாறினர். அவர்கள் திருமணத்தை நிச்சயிக்க மாம்பழச் சங்கத்தை நிர்ணயித்தனர். ஆகவே வாலிபப் பெண்கள். ஆண்கள் மிக அதிகமாக மாம்பழச் சங்கத்திற்கு வருவார்கள். எனவே “மாப்பிள்ளை சங்கம்” என்று அழைக்கப்பட்டது.
ரேனியஸ் அடிகளார் மறுவாழ்விற்காக இச்சங்கத்தை ஆரம்பித்தார். ஆகவே “கைம்பெண்கள் சங்கம்” என்றும் அழைக்கப்பட்டது.
பிச்சைக்காரர்கள்
இதே வேளையில் இங்கு வரும் மக்கள் ஏழைகளுக்கு தானம் வழங்கி மகிழ்ந்து வந்தனர். இங்கு 3 நாட்களுக்கு முன்பே பிச்சைக்காரர்கள் இங்கு இருபுறமும் துண்டைவிரித்து 1 முதல் 4 நாட்கள் ஊன், உறக்கம் இன்றி காத்துக்கிடப்பார்கள்.
இவர்களுக்கு வரும் மக்கள் காசு, பணம், அரிசி மற்றும் காய்கறி போட்டு மகிழ்ந்தனர். இதற்காக நேர்ச்சைகளை மக்கள் சேர்த்து எடுத்து வருவார்கள். குரங்கணி கோவிலில் மொட்டை போட்டு நேர்த்தி கடன் செலுத்துவதைப் போல் இங்கே நேர்த்தி கடன் செலுத்துவதற்காகச் சங்கம் உருவாக்கப்பட்டது. இந்தச் சங்கம் கைம்பெண்கள் சங்கம், மாப்பிள்ளை சங்கம் என அழைக்கப்பட்டு எதிர்காலத்தில் மாம்பழச் சங்கம் என்று நிலைத்து விட்டது.
கல்லறை
இந்தச் சங்கம் நடைபெறும் இடத்தில் காளிமார்க் அருகில் ஒரு சந்து முருகன்குறிச்சி பகுதிக்குச் செல்கிறது. அந்தத் தெருவிற்கு ரேனியஸ் தெரு என்று பெயர். அங்கு தான் ரேனியஸ் அடிகளார் கல்லறை உள்ளது. ரேனியஸ் அடிகளார் அடக்கமானாலும் கூட ஆண்டுதோறும் மாம்பழச் சங்கத்தினரைப் பார்த்து திருப்தி அடைவது போல் உணர்வு இவ்வேளையில் இங்கு வந்தால் தோன்றுகிறது.
மாம்பழச்சங்கம் வரும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் நல்ல கல்விப்பணி, இறைப்பணி மற்றும் இன்று வாழ்க்கைத் தரம் உயர அடிக்கல் இட்ட ரேனியஸ் அடிகளார் என்பதை உணர்ந்து இக்கல்லறை சென்று வருவது மிக மிக முக்கியமானதாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இனி ரேனியஸ் அடிகளார் ஏற்படுத்திய மற்ற நிறுவனங்களைப் பற்றிப் பார்ப்போம்.
31.10.1822 திருநெல்வேலியில் சி.எஸ்.எஸ் சுவிசேஷ துண்டுப் பிரசுர கழகத்தை ஏற்படுத்தினார். 1829-ல் ஓய்வு நாள் அரிசி சேமிப்பு கழகத்தை ஏற்படுத்தினார். 2.6.1830-ல் திருநெல்வேலி சி.எம்.எஸ். சுதேச தர்ம சகாய நிதி சங்கம் ஏற்படுத்தினார். 1832-ல் திருநெல்வேலி சுதேச ஏழைகள் தர்ம நிதி ஏற்படுத்தினார். 2.2.1834-ல் சமையல் சகாய நட்பு சங்கம் மற்றும் ஏழை விதவைகளில் பராமரிப்பு சங்கம் ஏற்படுத்தினார். 1834-ல் சுவிசேஷ பிரபல்ய பணி நிதி சங்கத்தை ஏற்படுத்தினார். 9.7.1834-ல் திருநெல்வேலி சி.எம்.எஸ் உபதேசியார் ஆசிரியர் மற்றும் விதவைகள் சகாய நதி சங்கத்தை ஏற்படுத்தினார். 1.1.1935-ல் திருநெல்வேலி சி.எம்.எஸ். வெளி பிராந்திய சுவிசேஷ பிரபல்ய நிதி நிறுவனம் ஏற்படுத்தினார். 1838-ல் திருநெல்வேலி சி.எம்.எஸ். யாத்திரிகர்கள் சங்கம் ஏற்படுத்தினார்.
கருத்து வேறுபாடு
ரேனியஸ் அடிகளார் நெல்லை அப்போஸ்தலன் என்று அழைக்கப்பட்டவர். அது மட்டுமா இவர் செய்த பணிகளில் 2 சதவிகிதம் கூட என்னால் இக்கட்டுரையில் சொல்ல இயலவில்லை. பெரியவர் ஆர்.எஸ்.ஜேக்கப், ரேனியஸ் வாழ்க்கை வரலாறு மற்றும் நெல்லை திருமண்டல ஊரும் பேரும் வரலாற்றுக் கதைகள். மேலும் பல துண்டு தகவல்களை வைத்து இந்தத் தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறேன்.
தாமிரபரணி கரையில் சைவமும், வைணவமும் தழைத்தோங்கினாலும் நெல்லை மண்டல திருச்சபை என்பது உலக அளவில் பெரிய ஆன்மிகப் பணியே. அப்பணிக்கு அடிக்கல்லாய் விளங்கியவர் ரேனியஸ் அடிகளார் தான். அவர் மீதும் சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அதனால் அவர் பல இன்னல் பட்டார்.
110. ரேனியஸ் அடிகளாரும்
அவர் தோற்றுவித்த பள்ளிகளும்
ரேனியஸ் அடிகளார் சங்கங்கள் அமைத்ததோடு மட்டுமல்லாமல் தமிழில் பல நூல்கள் எழுதினார். அதில் 30.5.1818-ல் வெளியிட்ட வேதாகமம் சரித்திர வினா விடை, வேத சரித்திரம், 1820-ல் எழுதிய சுவிசேஷக சமரசம், ஞான போதிப்பு, 1831-ல் சீர்தூக்கல் தெய்வீக சாராம்சம், 1834-ல் எழுதிய கிறிஸ்தவ மார்க்க நிச்சயித்வம், வேதாகமம் துணை நூல், எபிரேயு இலக்கணம், தமிழ் இலக்கணம், சிறிய ஞானோபதேச வினா விடை, சரித்திரம், பூகோள சாஸ்திரம், தர்க்கம், வேதாகமம், முடிவுரை புதிய ஏற்பாடு மொழி பெயர்ப்பு, பழைய ஏற்பாட்டில் சில நூல்கள் மொழி பெயர்ப்பு, ஞானயோன் மற்றும் ஆங்கிலேயர்கள் தமிழைப் பற்றி ஆங்கிலத்தில் தமிழ் இலக்கணம் போன்ற 20 நூல்கள் எழுதியுள்ளார்.
இலக்கிய சேவை
ரேனியஸ் அடிகளார் ஒரு இலக்கிய அறிஞராகவே செயல்பட்டார். இவைத் தவிரத் தெலுங்கு, பிரெஞ்சு இலக்கணம் என்பது போன்ற பன்னிரு சிறு நூல்கள் உள்பட ஏராளமான துண்டு பிரதிகள் இவர் வெளியிட்டுள்ளார்.
இவ்வளவு சிறப்புகளைச் செய்து கொண்டிருந்த ரேனியஸ் அடிகளாருக்குத் திடீரென்று பிரச்சினை வந்தது. 1835-ஆம் ஆண்டு மே மாதம் டக்கரிடமிருந்து வந்த கடிதத்தில் சி.எம்.எஸ். சங்கத்தார் தங்களுடையத் தொடர்பை ரேனியஸிடம் இருந்து முறித்துக் கொண்டதாக அறிவித்தனர். இதனால் ஜூன் 20-ந் தேதி சாப்டர் அடிகளார் முல்லா அடிகளார், லெக்னா அடிகளார் ஆகிய மிஷனேரிகளுடன் ரேனியஸ் அடிகளார் திருநெல்வேலியை விட்டுக் கிளம்பி சென்னை சென்றுவிட்டார்.
சேவை தொடர்ந்தது
ஆனாலும் ரேனியஸ் அடிகளார் தனது சேவையை விடவில்லை. ஜெர்மன் இவாஞ்சலிக்கல் மிஷன் என்ற பெயருடன் ஆற்காட்டில் தேவ ஊழியம் செய்ய ஆரம்பித்தார். ஆனால் ரேனியஸ் அடிகளார் சேவையை மறக்க மனமில்லாத மக்கள் திருநெல்வேலிக்கு மீண்டும் ரேனியஸ் அடிகளார் வர வேண்டும் என்று கடிதம் எழுதினர். பலர் கோரிக்கை வைத்து தேவனிடம் மண்டியிட்டு ஜெபம் செய்தனர்.
ஜெபம் பலித்தது
1835 அக்டோபர் 22-ஆம் தேதி ரேனியஸ் அடிகளார் மீண்டும் திருநெல்வேலி வந்தார். அவ்வேளையில் சபைக்குள் குழப்பம் நிலவியது. அடிக்கடி சண்டை வந்தது. முடிவில் சில சபைகள் ரேனியஸ் அடிகளாரிடம் சேர்ந்தது. சி.எம்.எஸ். இரண்டாகப் பிரிந்தது. மீண்டும் திருநெல்வேலியில் ரேனியஸ் அடிகளார் சேவை தொடர்ந்தது.
சாதி சண்டை
ரேனியஸ் அடிகளார் காலத்தில் சாதி பிரச்சினை தலை விரித்து ஆடியது. சில வேளைகளில் ரேனியஸ் ஆரம்பித்த செமினேரியில் தாழ்ந்த சாதியினரும், உயர்ந்த சாதியினரும் ஒன்றாக இருந்து உணவு உண்ண மறுத்தனர். உடனே செமினேரியை ரேனியஸ் அடிகளார் மூடிவிட்டார். அவர் சாதி ஒழிந்தால் தான் செமினேரி உருப்படும் என்று ஆணித்தரமாக இருந்தார். இதனால் சில மேல்தட்டு மக்களிடம் பகையாளி ஆகிப் போனார். 1821-ல் மூடப்பட்ட இந்த செமினேரி மீண்டும் திறக்கப்பட்டது.
திருமணம்
ரேனியஸ் அடிகளார் 1816-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி Ôஅணிவான் சேரமான்Õ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். முதன் முதலில் தென்னிந்தியா வந்தவுடன் சென்னை ஜார்ஜ் டவுனில் வாடகை வீட்டில் குடியிருந்து 2 பள்ளிகளை ஆரம்பித்தார். இவருக்கு சாந்தப்பன் என்னும் கிறிஸ்தவ பெரியார் மிகவும் துணையாக இருந்தார். சென்னை அருகே அழகர் பேட்டை, பெருந்தூர், கள்ளிப்பதூர் ஆகிய கிராமங்களில் ரேனியஸ் அடிகளார் பள்ளிக்கூடம் ஆரம்பித்தார். அதோடு மட்டுமல்லாமல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர் என்னுமிடத்தில் பள்ளிக்கூடங்கள் திறந்து வைத்தார். மேலும் அங்குப் பிரசங்கமும் செய்து கிறிஸ்தவ மதம் பரப்ப ஆணி வேராக இருந்தார்.
முதல் வீடு
பாளையங்கோட்டையில் இருந்த கோட்டைக்குள் வீடு எடுத்து வாழ்ந்து வந்த ரேனியஸ் அடிகளார் இங்கு பணியாற்றிய மிஷனேரி ஜேம்ஸ் அடிகளார் தனது இடத்தைக் குறைந்த விலைக்கு விற்று விட்டு தாய்நாட்டுக்குக் கிளம்பினார். அதை சி.எம்.எஸ்.க்கு வாங்கிய ரேனியஸ் அடிகளார் அதை உபதேசியார் பயிற்சிக் கூடமாக மாற்றினார். அவர் முதன் முதலில் வண்ணார்பேட்டை, பேட்டை, மேலப்பாளையம், குறிச்சி, தச்ச நல்லூர், முருகன்குறிச்சி, கன்சாபுரம், முறப்பநாடு, மேலப்பாட்டம் ஆகிய கிராமங்களில் பள்ளிக்கூடம் நிறுவினார்.
இவர் நிறுவிய பள்ளிக்கூடம் அனைத்தும் தாமிரபரணி நதிக்கரையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாமிரபரணி ஆற்றின் மீது மிக்க பற்றுதல் கொண்டவர் ரேனியஸ் அடிகளார். எஸ்.பி.சி.கே.என்னும் சங்கத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்ட சபைகளை மேற்பார்வையிட்ட பாதிரியார் விஸ்வநாதன் 1822-ல் இறைவனடி சேர்ந்தார். அவர் காலத்துக்குப் பிறகு அச்சபைகளை ரேனியஸ் அடிகளாரே பார்வையிட்டு வந்தார்.
1823-ல் பெண்களுக்குப் பாடசாலையை பாளையங்கோட்டையில் அமைத்தார். அதுவே மேரி சார்ஜென்ட் மேல்நிலைப்பள்ளி என்று தற்சமயம் அழைக்கப்படுகிறது.
உருவாக்கப்பட்ட பள்ளிகள்
மேலும் 1818-ல் ஜான்ஜாப்ஸ் அடிகளாரால் நிறுவப்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளியே இன்று பாளை பிஷப் சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சி பள்ளியாக உள்ளது. 1823&ல் நெல்லை குற்றாலம் செல்லும் பாதையில் நிறுவப்பட்ட நெல்லை நகர் பள்ளி சாப்டர் மேல் நிலைப்பள்ளியின் ஒரு பகுதியாக இயங்கி வருகிறது.
1823-ல் இருந்து இன்று வரை அரசரடி தொடக்கப்பள்ளியாக இருக்கும் நெல்லை நகர் தெற்கு பாடசாலை ரேனியஸ் அடிகளார் உருவாக்கியதே. சாத்தான்குளம் புலமாடன் டி.டி.டி.ஏ ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ரேனியஸ் அடிகளார் 1825-ல் நிறுவியதே.
1827-ல் ஆரம்பிக்கப்பட்டுள்ள டோனாவூர் பள்ளி இன்று மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்துள்ளது. 1830-ல் ரேனியஸ் அடிகளாரால் உருவாக்கப்பட்ட அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி மெஞ்ஞானபுரத்தில் தற்சமயம் உள்ளது.
1833-ல் நல்லூரில் ஆரம்பிக்கப்பட்ட தொடக்கப் பள்ளி இன்று மேல்நிலை பள்ளியாக உயர்ந்துள்ளது. நல்லூர் அருணோதயம் பெண்கள் பாடசாலை சாப்டர் அடிகளாரால் 1835&ல் பாளையங்கோட்டையில் துவங்கி அது திருநெல்வேலிக்குப் பெயர்ந்து பின்பு நல்லூரில் நன்றாகச் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் ரேனியஸ் அடிகளார்.
இதே போல் பல பள்ளிகள் நெல்லை மாவட்டத்தில் ரேனியஸ் அடிகளார் உருவாக்கியதே.
மறக்கக்கூடாது
இந்தக் கட்டுரை தாமிரபரணி நதிக்கரையில் கல்லிடைக்குறிச்சியில் தற்சமயம் உள்ளது. கல்லிடைக்குறிச்சி சி.எம்.ஐ. வரலாறு குறித்து அம்பை சேகர வரலாறு கூறும் போதே கூறிவிட்டோம். ஆகவே இந்தச் சபை தோன்றக் காரணமான ரேனியஸ் அடிகளார் குறித்து எழுத ஆவலாய் இருந்தது. ஆகவே அவரைக் குறித்து எழுத சில தகவல்களைப் புரட்டிய போது கிடைத்ததில் சுருக்கமாகத் தான் இதுவரை நான் கூறியது.
வெளிநாட்டில் இருந்து நம்மூர் வந்து தாமிரபரணி நதிக்கரையில் தங்கி பல பள்ளிகள் அமைத்து கல்விக்கண் திறந்து இங்கேயே அடக்கமான ரேனியஸ் அடிகளார் குறித்து எழுத வாய்ப்பு கிடைத்ததற்கு ஆண்டவனுக்குக் கோடானக்கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


