தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பண்ணை பள்ளி திட்டத்தினை ரிலையன்ஸ் அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது. நெல் மற்றும் மக்காசோளம் பயிரிடப்படும் வட்டாரங்களில் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் நிலத்தை பண்படுத்துதல், உரமேலாண்மை, நீர்மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை குறித்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் மண் பரிசோதனை முகாமினை திருவைகுண்டம் தாலூகாவிலுள்ள நெல் பயிரிடும் ராஜபதி , பத்மநாபமங்கலம் , மணக்கரை , தோழப்பன்பண்ணை ஆகிய கிராமங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண் பரிசோதனை செய்வது உரச்செலவைக் குறைத்து அதிக மகசூல் பெற்றிட வழிவகை செய்கிறது. மேலும் இடும் உரம் பயிருக்கு முழுமையாக கிடைத்திடவும். அங்ககச்சத்தின் அளவு அறிந்து நிலத்தின் நிலையான வளத்தை பெருக்கிடவும். மண்ணின் தன்மைக்கேற்ப பயிரைத் தேர்ந்தெடுக்கவும் மண் பரிசோதனை செய்வது அவசியமாகிறது. ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துறையின் நடமாடும் மண் பரிசோதனை மையமும் இணைந்து நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழிச்சிகளை நடத்தியது. அதனடிப்படையில் 139 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கோவில்பட்டியில் உள்ள மண் பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர்கள் லலிதா பரணி , செல்வ மாலதி , துணை வேளாண் அலுவலர் பகவதி , தொழில்நுட்ப வல்லுநர்கள் மூர்த்தி மற்றும் செண்பகவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை பணியாளர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.


