வல்லநாடு திருமூலநாதர் திருக்கோவிலில் திருவாசக முற்றோதுதல் விழா நடந்தது. வல்லநாட்டில் சீமாறன் சீவல்லப பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது. இருதய பலவீனம் உள்ளவர் கள்இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தால் குணம் பெறுவதாகப் பக்தர்களால் நம்பப்படுகிறது. இதனைக் கேள்வி ப்பட்டுத் தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்து சுவாமியை வணங்கிக் குணமுடைய வேண்டிப் பலனடைந்து வருகின்றனர். இதனால் இந்தக் கோவில் மூலவர் ஹிருதேஸ்வரர் என்று அழைக்கப்படுவதும் உண்டு. நவகிரக வழிபாட்டுக்கு முன் வணங்கப்பட்டு நவ லிங்கபுரம் என்று அழைக்கப்பட்டு வந்த சிவாலயங்களில் தலைக்கோவிலாகவல்லநாடு அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் அழைக்கப்பட்டு வருகிறது. இப்படி பழமையும் பெருமையும் வாய்ந்த இந்தக் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 85 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாக இந்த ஊர்ப் பெரியவர்கள் சொல்கின்றனர். இருப்பினும் இந்த ஊர்ப் பெரியவர்கள் மற்றும் சிவ அன்பர்களின் பெரு முயற்சியினால் இந்தக் கோவிலைச் சுற்றிக் காம்பவுண்ட் சுவர், திருத்தேர் , கொடிமரம் ஆகிய பணிகள் தனியார் நன்கொடைப் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.மேலும் இந்து அறநிலையத் துறை சார்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் திருப்ப ணிகள் நடைபெறவும் உள்ளது. இந்த திருப்பணி வேலைகள் எவ்வித தடங்கல்களும் இல்லாமல் தொய்வின்றி நடந்து கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.இதனை முன்னிட்டுக்குரிச்சி பலவேசம் கோவிந்தம்மாள் குழுவினரின் திருவாசக முற்றோதுதல் விழா நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரன் கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் போஸ் திருவாசக முற்றோதுதலைத் துவக்கி வைத்தார். வல்லநாடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிவனடியார்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு திருவாசகப் பாடலை மனமுருகப் பாடினர். முன்னதாகக் கோவில் அர்ச்சகர் சண்முகசுந்தர பட்டர் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை செய்தார். திருவாசக முற்றோதுதலுக்கான ஏற்பாடுகளை வல்லநாடு திலகவதியார் உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் திருமூலநாதர் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்


