தாமிரபரணி ஆறு வற்றாத ஜீவநதி. இந்த நதி மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. அது மட்டுமல்லாமல் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கும், தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் இந்த தாமிரபரணியில் இருந்து தான் தண்ணீர் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 100க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வாடி வருகிறது. இதனால் விவசாயம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் அணைக்கட்டு மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டில் உள்ள மேலக்கால்வாய், கீழக்கால்வாய், தெற்கு பிரதான கால்வாய், வடக்கு பிரதான கால்வாய் மூலம் பாசன சசதி பெறும் பகுதிகளில் பயிர்களை காக்கவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை 2073.60 கன அடி நீர் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்றைய தினம் காலை மருதூர் கீழக்காலில் 200 கனஅடி, மேலக்காலில் 400 கனஅடி, வடகாலில் 300 கனஅடி, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள தென்காலில் 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளுது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 50 குளங்களைச் சேர்ந்த 48 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


