ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கெட்டிமாள்புரத்தை சேர்ந்தவர் பூசைபாண்டி(72). இவரது மனைவி புஷ்பா. இவர்களது மகன் இசக்கிராஜா மும்பையில் பணிபுரிந்து வருகிறார். பூசைப்பாண்டி, புஷ்பா ஆகிய இருவரும் கெட்டியம்மாள்புரத்தில் வசித்து வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை அருகில் உள்ள குறிச்சியில் கோயில் விழாவிற்கு சென்றுள்ளனர்.
அங்கு பூசைபாண்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் கடந்த 15ம் தேதி பூசைப்பாண்டியன் மிட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பூசைப்பாண்டிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் ஸ்ரீவைகுண்டம் போலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் பூசைபாண்டி வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகையும், 45 ஆயிரம் ரூபாய் பணமும் திருடு போனது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நகையும் பணமும் திருட்டு போய் ஒரு வாரமாகியும் குற்றவாளிகள் குறித்து எந்த தகவலும் தெரியாததால் ஆத்திரமடைந்த கெட்டியம்மாள்புரத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் இன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.


