சாத்தான்குளத்தில் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து 3.58 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர் மற்றும் உபகரணங்களை திருடிய பலே திருடன் கைது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் கிராம உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் காப்பர் வயர் மற்றும் காப்பர் கோர்கள் கிலோ கணக்கில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி அன்று நள்ளிரவு காப்பர் வயர்கள் மற்றும் காப்பர் கோர்கள் திருடு போயிருந்தது.
இதுகுறித்து மின்வாரிய இளநிலை பொறியாளர் எட்வர்ட் ஜெயபாலன் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் தனிப்படை போலீஸ் எஸ்ஐ டேவிட் தலைமையிலான போலீசார் சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் காப்பர் வயர்களை திருடியது புதியம்புத்தூர் நீராவி பகுதியை சேர்ந்த முருகன் மகன் பரமசிவன் என்பது தெரியவந்தது. அவன் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து லோடு வாகனத்தில் காப்பர் வயர்களை திருடியதும் தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் பரமசிவனை கைது செய்து அவரிடமிருந்த 3.58 லட்சம் மதிப்பிலான 126 கிலோ காப்பர் வயர் மற்றும் காப்பர் கோர்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


