சாத்தான்குளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிகள் பந்தயம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் உள்ள முறம்படி ஸ்ரீ சுடலை தளவாய் மாடசுவாமி திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடந்தது. இந்த மாட்டு வண்டிகள் பந்தயம் பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டிகள் என இரண்டு பிரிவுகளாக நடந்தது. இதில் 12 பெரிய மாட்டு வண்டிகளும், 30 சிறிய மாட்டு வண்டிகளும் பங்கேற்றன. சிறிய மாட்டு வண்டிகள் 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
பெரிய மாட்டு வண்டிகளுக்கு பன்னம்பாறையில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டது. சிறிய மாட்டு வண்டிகளுக்கு 6 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் ரேக்ளா பந்தய சங்க மாநிலத்தலைவர் சாமிக்குமார் பெரிய மாட்டு வண்டிப் பந்தயத்தை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. பெரிய மாட்டு வண்டிகள் பந்தயத்தில் முதல் பரிசை அவனியாபுரம் மோகன் சாமிக்குமார் மாட்டு வண்டியும், இரண்டாம் பரிசை சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டியும், மூன்றாம் பரிசை நாலாந்துலா துரைப்பாண்டியன் மாட்டு வண்டியும் பெற்றது.
அதே போல் சிறிய மாட்டு வண்டிகள் பந்தயம் நடந்தது. வெற்றிப்பெற்ற மாட்டு வண்டிகள் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாட்டு வண்டிகள் பந்தயத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


