தட்டார்மடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பித்தளை பானை மற்றும் விளக்குகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே கீழ நடுவகுறிச்சி பகுதியை சேர்ந்த நடேசன் மகன் ஆனந்தகுமார் (56) என்பவரது அதே பகுதியை சேர்ந்த உறவினரின் வீட்டில் கடந்த 11.08.2022 அன்று மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த 2 பித்தளை பானைகள் மற்றும் 6 பித்தளை விளக்குகளை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஆனந்தகுமார் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் பவுலோஸ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இதில் சாத்தான்குளம் தாமரைமொழி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் செல்வ மதன் (21) என்பவர் ஆனந்தகுமாரின் உறவினர் வீட்டில் பித்தளை பானை மற்றும் பித்தளை விளக்குகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் செல்வ மதனை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட ரூ.20ஆயிரம் மதிப்புள்ள 2 பித்தளை பானை மற்றும் 6 பித்தளை விளக்குகளை பறிமுதல் செய்தனர். செல்வ மதன் மீது ஏற்கனவே தட்டார்மடம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடதக்கது.


